சிங்கப்பூர் சமூகத்தை மேம்படுத்தும் பணியில், அடித்தளத்தில் செயல்படும் பணியாளர்கள், குடியிருப்பாளர்கள், நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தைக் காட்டும் பல முயற்சிகள் நாள்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில், குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு திட்டங்கள் அண்மையில் நடைபெற்ற 10வது நகராட்சிச் சேவைகள் விருதுகளில் பாராட்டுப் பெற்றன.
பரிவும் பொறுப்பும் கொண்டவர்கள் இணைந்து செயல்பட்டால் அர்த்தமுள்ள மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை இவை வெளிப்படுத்தியுள்ளன.
ஒற்றுமை, தூய்மை, ஒழுங்கிற்கு ஒருங்கிணைந்த முயற்சி
வெளிநாட்டு ஊழியர்கள் ஓரிடத்தில் அதிக அளவில் கூடுவதால் எழுந்த சுகாதாரம், சத்தம் தொடர்பான சவால்களைச் சமாளிப்பதற்காக ஆயர் ராஜா சமூகச் செயற்குழு உருவாக்கப்பட்டது.
ஜூலை 2024ல் தொடங்கிய இந்த முயற்சியில், தேசியச் சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் காவல் துறை, மனிதவள அமைச்சின் ஏஸ் (‘ACE’) குழு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மற்றும் நகர மன்றம் உள்ளிட்ட 10 அமைப்புகள் இணைந்திருந்தன.
“அனைவரையும் உள்ளடக்கிய, பரிவுடன் கூடிய சமூகத்தை ஆயர் ராஜாவில் உருவாக்குவதுதான் எங்களின் நோக்கம்,” என ஆயர் ராஜா–கெக் போ குடிமக்கள் ஆலோசனைக் குழு துணைத் தலைவர் செல்வகுமார் பன்னீர்செல்வம், 38, தெரிவித்தார்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின்வழி வெளிநாட்டு ஊழியர்களை ஈடுபடுத்தல், உள்ளூர் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தல், குப்பை எறிதல், இரவு நேர மது அருந்துதல், பேசும் சத்தம், தொந்தரவு போன்ற ஒழுங்கீன நடத்தை மீதான நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல் என்ற மூன்று அம்சங்களைக் கொண்ட அணுகுமுறையைக் குழு பின்பற்றியது.
இந்த முயற்சிகளின் தாக்கம் கணிசமாக இருந்ததாகத் திரு செல்வகுமார் தெரிவித்தார். “எங்களுக்கு வருகிற புகார்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் கூடும் இடங்கள் இப்போது சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன. சுற்றுப்புறமும் மேலும் சுத்தமாக உள்ளது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து ஆயர் ராஜா குடியிருப்பை மேலும் சிறப்பாக மேம்படுத்தி, குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கைக்குச் செறிவூட்டி மேம்படுத்த மேலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் திரு செல்வகுமார் கூறினார்.
புதிய பிணைப்புகளை உருவாக்கிய செல்லப்பிராணிகள் பூங்கா
புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட செல்லப்பிராணிகள் பூங்கா, அங்குள்ள குடியிருப்பாளர்களை ஒன்றிணைக்கும் புதிய சமூக இடமாக மாறியுள்ளது.
இந்தத் திட்டத்தைப் புக்கிட் பாஞ்சாங் மண்டலம் 3 குடியிருப்பாளர் குழுவின் அடித்தளத் தலைவர் பெருமாள் மூர்த்தியும், 56, அவரது குழுவினரும் முன்னெடுத்தனர்.
“குடியிருப்பாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகள் பாதுகாப்பாக விளையாடத் தனிப்பட்ட இடம் வேண்டும் என்று தெரிவித்தனர். பல நிறுவனங்களுடனும் பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றி, அந்த விருப்பத்தை நனவாக்க முடிந்தது,” என்றார் திரு மூர்த்தி.
நிறைவடைய ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் எடுத்த இந்தத் திட்டத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், மக்கள் கழகம், பல அடித்தள வட்டாரங்கள் உள்ளிட்டவை இணைந்திருந்தன.
செல்லப்பிராணி உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி விரிவாகத் தரவுகளைச் சேகரித்து, அதன் அடிப்படையில் இந்தப் பூங்காவை இக்குழுவினர் வடிவமைத்தனர்.
இந்தப் பூங்கா செல்லப்பிராணிகளும் அவர்களின் உரிமையாளர்களும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயன்படுத்தும் வகையில் பல சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மையாக, செல்லப்பிராணிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் விளையாடப் பூங்காவை முழுவதும் சுற்றியொரு உறுதியான வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தப் பல்வேறு விதமான விளையாட்டு சாதனங்களும் கவனமாக அமைக்கப்பட்டுள்ளன.
இதனுடன், பூங்காவைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்காக தெளிவான விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, இரவு 7 மணிக்குப் பிறகு செல்லப்பிராணிகளை பூங்காவுக்குள் கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வரம்புகள் இதில் அடங்கும்.
தற்போது ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள இந்தப் பூங்கா, குடியிருப்பாளர்கள் இணையும் ஒரு துடிப்பான இடமாக மாறியுள்ளது.
“செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள், செல்லப்பிராணிகள் இல்லாதவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்தப் பூங்கா ஒரு பாலமாக மாறி, அனைவருக்கும் இடையே நெருக்கத்தை உருவாக்க உதவியுள்ளது,” என்று திரு மூர்த்தி கூறினார்.

