தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அளவிலா அன்பும் பிரிவுகளின் ஏக்கமும்: வளர்ப்புப் பெற்றோரின் வாழ்க்கைப் பயணம்

3 mins read
fdf42417-56db-44ed-9015-99cd5f3f6919
இவ்வாண்டின் சமுதாய குடும்ப மேம்பாட்டு விருதுகளில் நீண்டகாலச் சேவை விருதைப் பெற்ற திரு சிவச்சந்திரன், 65, திருவாட்டி அனிதா, 63. - படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு
கடந்த 22 ஆண்டுகளில் தங்கள் சமூக தொண்டை அங்கீகரித்து அரசாங்கம் வழங்கிய விருதுகளோடு திருவாட்டி அனிதா, திரு சிவச்சந்திரன்.
கடந்த 22 ஆண்டுகளில் தங்கள் சமூக தொண்டை அங்கீகரித்து அரசாங்கம் வழங்கிய விருதுகளோடு திருவாட்டி அனிதா, திரு சிவச்சந்திரன். - படம்: செய்யது இப்ராகிம்

குழந்தைகள் மீதுள்ள பேரன்பு காரணமாக 28 பிள்ளைகளை வளர்ந்துள்ளனர் அனிதா- சிவச்சந்திரன் தம்பதியினர்.

குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த திருவாட்டி அனிதா சிவதாசன் தமது இரண்டு குழந்தைகளையும் வளர்ப்பதற்காக வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்க முடிவெடுத்த போதுதான், வளர்ப்புப் பெற்றோர் திட்டம் பற்றித் தெரிந்துகொண்டார்.

இதுகுறித்து தன் கணவர், திரு சிவச்சந்திரன் பழனிசாமியிடம் பேசினார். மூன்று மாத ஆலோசனைக்குப் பிறகு, 2003ஆம் ஆண்டு வளர்ப்பு பெற்றோராகக் குழந்தைகளைப் பராமரிக்க இருவரும் அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தனர்.

அப்போது தொடங்கிய அவர்களது 22 ஆண்டுப் பயணம் இன்றுவரை தொடர்கிறது.

நெகிழவைக்கும் உறவு

தற்போது சிறப்பு தேவைகளுடையே 4 வயது குழந்தையையும் 15 வயது சிறுவனையும் பராமரித்து வரும் அத்தம்பதி, தாங்கள் வளர்க்கும் பிள்ளைகள் தங்களை ‘அம்மா’, ‘அச்சா’ என்றழைக்கும்போது மிகவும் நெகிழ்ந்து போகிறார்கள்.

ஒவ்வொரு பிள்ளையும் அவர்களது பராமரிப்பின்கீழ் வளர்வதை பார்க்கும்போது இருவரும் பெருமை கொள்கிறார்கள்.

அவர்களது இரு பிள்ளைகளும் பட்டப்படிப்பை முடித்து வேலைக்குச் செல்கின்றனர். வீட்டிற்கு வரும் பிள்ளைகளைப் பராமரிக்க அவர்களது உதவியும் இத்தம்பதியினருக்கு தேவையாக உள்ளது.

“பிள்ளைகள் இருந்தால் வீடே ஆனந்தமாக இருக்கும்,” என்றார் திருவாட்டி அனிதா. ஒரே நேரத்தில் நான்கு பிள்ளைகளைப் பராமரித்த அனுபவமும் இவர்களுக்கு உண்டு.

ஒவ்வொரு பிள்ளையோடும் ஒரு தனித்துவமான உறவைப் பேணி, அவர்களுக்குச் செல்லப் பெயர் சூட்டி பாசமாக அழைப்பதை வழக்கமாக அவர்கள் வைத்திருக்கின்றனர்.

மகிழ்ச்சி தரும் சுமை

பிள்ளைகளை வளர்க்க அரசாங்கம் பராமரிப்புப் படித்தொகையை வழங்கினாலும், அது பெரும்பாலும் போதுமானதாக இருப்பதில்லை.

பல நேரங்களில் அப்பிள்ளைகளுக்கு கூடுதலாகச் செலவு செய்கிறார்கள். அது ஒரு பாரமாகத் தெரிந்ததில்லை என்றார் 63 வயது திருவாட்டி அனிதா.

“கணக்குப் பார்த்துப் பிள்ளைகளை வளர்க்க முடியாது. பாசமும் உணர்ச்சியும் நிறைந்த உறவில் கணக்குவழக்குக்கு இடமில்லை,” என்றார் அவர்.

சிறப்புத் தேவையுடையோர்

குறிப்பாக, சிறப்புத் தேவைகளுடைய பல பிள்ளைகளையும் கைக்குழந்தைகளையும் இந்தத் தம்பதியினர் வளர்த்துள்ளனர். அத்தகைய குழந்தைகளை வளர்க்க அதீத பொறுமை தேவைப்படும்.

“அக்குழந்தைகள் எதற்காக அழுகின்றனர் என்று கண்டறிவதே ஒரு சவால்,” என்றார் திருவாட்டி அனிதா.

கவனக்குறை மிகைச் சுறுதி பிரச்சினையைப் (ADHD) பற்றி மேலும் தெரிந்துகொள்ள அது குறித்த புத்தகங்களைப் படித்துத் தன்னால் முடிந்த அளவிற்கு பிள்ளைகளுக்கான சிறப்பான பராமரிப்பை திருவாட்டி அனிதா வழங்கி வருகிறார்.

கசப்பான பிரிவுகள்

பிள்ளைகளை அவர்களது பெற்றோரிடமோ தத்தெடுத்தவர்களிடமோ ஒப்படைப்பதற்கு முன், திருவாட்டி அனிதாவின் வீட்டுக்கு வந்து பிள்ளைகளோடு அவர்கள் நேரம் செலவிடுவர்.

சில மாதங்களுக்குப் பிறகு, அந்தக் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

பிள்ளைகள் சென்ற பிறகு, இரவில் திடீரென உறக்கத்திலிருந்து எழுந்து பிள்ளை அழுகிறது என்று திருவாட்டி அனிதா தன் கணவரிடம் பதறிய காலங்களும் உண்டு.

“எங்கள் பிள்ளைகளையும் வளர்ப்புப் பிள்ளைகளையும் நாங்கள் ஒருபோதும் பிரித்துப் பார்த்ததில்லை. அதனால், அவர்களது பிரிவு வலியைக் கொடுக்கும்,” என்றார் 65 வயது திரு சிவச்சந்திரன்.

அரசாங்க அலுவலகத்தில் பிள்ளையை ஒப்படைக்கும் நேரத்தில், ஒரு பிள்ளை திரு சிவச்சந்திரனின் காலைக் கட்டி அணைத்தபோது, தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த உணர்வுபூர்வமான தருணத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

நெகிழ்ச்சியான நினைவுகள் பல இருப்பினும், பிள்ளைகள் மேலும் வசதியான இடத்தில் தரமான வாழ்க்கையை வாழவிருக்கின்றனர் என்ற எண்ணத்தோடு, அவர்களின் நலன் கருதி இவர்கள் ஆறுதல் அடைவர்.

அவர்களின் நினைவாக, அவர்களது பெயர்களும் புகைப்படங்களும் நிறைந்த ஒரு சுவரை இந்தத் தம்பதியினர் அமைத்துள்ளனர்.

அப்பிள்ளைகளின் நினைவு வரும்போது, அந்தப் புகைப்படங்களைப் பார்த்து அழகிய தருணங்களை நினைவுகூர்ந்து திருவாட்டி அனிதா மகிழ்ச்சியடைவார். தாங்கள் வளர்த்த பலருடன் திருவாட்டி அனிதாவும் திரு சிவச்சந்திரனும் இப்போதும் தொடர்பில் இருக்கின்றனர்.

அவர்களது இந்த அர்ப்பணிப்பையும் பல்லாண்டு சமூகத் தொண்டையும் அங்கீகரிக்கும் விதமாக, இவ்வாண்டு ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தொண்டூழியர், பங்காளி விருதுகள் நிகழ்ச்சியில் நீண்டகாலச் சேவை விருதை இத்தம்பதியிருக்கு வழங்கப்பட்டது. இவ்வாண்டு மொத்தம் 121 விருதுகள் 140 பேருக்கு வழங்கப்பட்டன.

“சமூகத்திற்கு மேலும் எங்களால் முடிந்த சேவையை ஆற்ற வேண்டும் என்ற ஊக்கத்தை இது போன்ற விருதுகள் தருகின்றன,” என்றார் திருவாட்டி அனிதா.

குறிப்புச் சொற்கள்