புக்கிட் கோம்பாக் வட்டாரத்தில் சமூக ஆதரவை வலுப்படுத்தவும், குடும்பங்கள் ஒன்றிணைந்து தொண்டாற்ற ஊக்குவிக்கவும் மளிகைப் பொருள் விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
‘புக்கிட் கோம்பாக் கேர்ஸ் மொபைல் குரோசரிஸ் ஸ்டோரிபுக்’ (Bukit Gombak Cares Mobile Groceries and Storybook) என்ற அந்தத் திட்டம் சனிக்கிழமை (ஜூன் 6) தொடங்கியது.
புக்கிட் கோம்பாக்கின் அடித்தள அமைப்புகளும் ‘ஆண்டர்கோ பிரைவேட் லிமிட்டெட்’ நிறுவனமும் இணைந்து கிட்டத்தட்ட $150,000 மதிப்பில் அன்றாடத் தேவைக்கான பொருள்களை வழங்குகின்றன.
இதனால் ஏறத்தாழ 3,000 குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றாடச் செலவுகளைக் குறைப்பதற்கு உதவும் வகையில், ஒவ்வொரு குடும்பமும் $50 வரையிலான உணவு மற்றும் வீட்டுப் பொருள்களைப் பெறுவர்.
தலைமுறைகளைத் தாண்டி கருணை, நன்றியுணர்வு, தன்னார்வத் தொண்டு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இது தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குடியிருப்பாளர்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து, மூத்த துணை அமைச்சரும் புக்கிட் கோம்பாக் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான லோ யென் லிங் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
“எவ்வளவு சிறிதாக இருந்தாலும், செயல்பாடு முக்கியமானது. இந்த முன்னெடுப்பு, சவாலான நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க குடியிருப்பாளர்கள், பங்காளிகள், தன்னார்வலர்களின் வளங்களையும் நெஞ்சங்களையும் ஒன்றிணைக்கிறது,” என்று திருவாட்டி லோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“குடியிருப்பாளர்களின் அன்றாடச் செலவுகளைக் குறைக்கும் வகையில் மளிகைப் பொருள்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. புக்கிட் கோம்பாக்கில் யாரும் தனிமையில் வாட வேண்டியதில்லை என்பதற்காக நாங்கள் ஒரு பெரிய குடும்பம் போலச் செயல்படுகிறோம்,” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஜூலை 2024ல் தொடங்கப்பட்ட ‘புக்கிட் கோம்பாக் கேர்ஸ்’ சமூக நலத்திட்டத்தின் நீட்சியாக மளிகை விநியோகம் உள்ளது.
அத்துடன், புக்கிட் கோம்பாக்கின் இளம் குடியிருப்பாளர்கள், தொண்டூழியத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் புத்தகத்தையும் பெறுவர்.
மற்றவர்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்க முன்வரும் நன்கொடையாளர்கள், தொண்டூழியர்கள் ஆகியோரின் ஈகைப்பண்பை அந்தக் கதைப்புத்தகம் சிறப்பிப்பதாக வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், முதியோர்மீது அக்கறை காட்டுவது, மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுவது, நன்றியுணர்வை வளர்ப்பது ஆகிய பண்புகளை ஊக்குவிப்பதே அப்புத்தகத்தின் நோக்கம் என்றும் கூறப்பட்டது.
“இப்புத்தகம் நமது சமூகத்தில் உள்ள தேவைகளைப் பற்றி இளம் குடியிருப்பாளர்களுக்குக் கற்பிக்கும் என்றும் மற்றவர்கள்மீது அக்கறை காட்ட அவர்களை ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறோம். பெற்றோர் நற்பண்புகளை வளர்க்கப் பயன்படுத்தக்கூடிய பல பாடங்களை அப்புத்தகம் படம்பிடித்துக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
பெற்றோரும் சமூகத் தொண்டூழியருமான பிரமிளா கருப்பையா, 49, கதைப் புத்தகத்தைப் பயன்படுத்தி அறத்தைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
“சிறிய செயல்களில் தொடங்கி, சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த சிறு பிள்ளைகள் ஊக்கமடைவர் என விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

