பெண்களின் வலிமை, அதிகாரம், சமூக ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பெண்கள் ஒன்றிணைந்து இந்த ஆண்டின் மகளிர் தினத்தை அண்மையில் கொண்டாடினர்.
‘த கமலா கிளப்’ (The Kamala Club) ஏற்பாடு செய்திருந்த அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டம் தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது.
‘கொடுப்பதன்மூலம் பெறுவோம்’ (Give To Gain) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூருக்கான தென்னாப்பிரிக்கத் தூதர் சார்லட் லோப் (Charlotte Lobe) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தமது சிறப்புரையில் பெண்களின் ஒற்றுமையை வலியுறுத்திய அவர், “நாம் தனித்திருக்கும்போது வலிமையானவர்கள். ஆனால் ஒன்றிணையும்போது எவராலும் தோற்கடிக்க முடியாதவர்கள்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், நாம் உயரும்போது மற்றவர்களையும் உயர்த்துவதே உண்மையான தலைமைத்துவம் என்று அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, இந்திய மாநிலங்களின் பாரம்பரிய உடைகளை வெளிப்படுத்தும் கண்கவர் ஆடையலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.
அத்துடன், தெலுங்குப் பாரம்பரிய நடனம், தமிழ் குத்து நடனம், கமலா கிளப் ‘சர்கம்’ இசைக்குழுவினரின் இன்னிசைப் படைப்பு போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
“பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவையும் அன்பையும் பகிர்ந்துகொள்வதன்மூலம், மேலும் வலிமையான ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். பெண்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கும்போது அங்கு அற்புதங்கள் நிகழும் என்பதை இன்றைய நிகழ்ச்சி நிரூபித்துள்ளது,” என்று கமலா கிளப் தலைவர் ஸ்மிதா வர்கண்டிவார், 55, கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“எங்கள் கலாசார வேர்களை எடுத்துக்காட்டியதோடு பெண்களின் கூட்டுச் சக்தியை உணரும் வாய்ப்பாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது. எங்கள் திறமைகளைப் பெருமையுடன் வெளிப்படுத்த கமலா கிளப் ஒரு சிறந்த தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது,” என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உறுப்பினரான அபர்ணா நம்பியார், 39, கூறினார்.

