சிங்கப்பூரில் முதன்முதலில் தோன்றியது கவிதை இலக்கியமாகும். அத்தகைய கவிதையைப் போற்றும் கவிமாலை அமைப்பின் வெள்ளி விழாவில் இயற்றமிழுக்கு அணிகளாக இசையும் நடனமும் கைகோக்க, தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டியப் புகழ் நர்த்தகி நடராஜின் நளின அசைவுகளில் மிளிர்ந்தது அரங்கம்.
மாறுபட்ட சிந்தனையோடு, அர்த்தமுள்ள முறையில் சிங்கப்பூரில் கவிதைக் கலையை ஊக்குவிக்கும் முக்கிய அமைப்பான கவிமாலை, தனது 25ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
ஃபுட்சிங் அரங்கத்தில் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏறத்தாழ 500 தமிழார்வலர்கள் ஒன்றுகூடினர்.
தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன், சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் தலைவர் யோங் ஷு ஹூங் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உரையாற்றிய கவிமாலையின் தலைவர் இன்பா, அமைப்பின் தொண்டூழியர்கள், உறுப்பினர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.
கவிஞரும் முன்னாள் வானொலி ஊடகக் கலைஞருமான பிச்சினிக்காடு இளங்கோ தொடங்கிய இக்கவிதை இயக்கம், மாதாந்திரச் சந்திப்புகள், போட்டிகள், பயிலரங்குகள் எனப் பல்வேறு வழிகளில் தமிழை வளர்த்து வருவதாக கவிஞர் இன்பா குறிப்பிட்டார்.
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்குப் பிறகு, 2007 முதல் ந.வீ.சத்தியமூர்த்தி, ந.வீ.விசயபாரதி, மா.அன்பழகன் ஆகியோர் கவிமாலையை நடத்தி வந்தனர். 2016 முதல் இறை.மதியழகனின் தலைமைக்குப் பிறகு 2019 முதல் இன்பா பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
இந்த அமைப்பு ஏறத்தாழ 292 மாதாந்திரச் சந்திப்புகளை நடத்தி, 160க்கும் மேற்பட்ட நூல் வெளியீடுகளை ஒருங்கிணைத்து, தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த தமிழ் ஆளுமைகளை சிங்கப்பூருக்கு வரவழைத்து, கவிதைசார் நடவடிக்கைகளை நடத்தி வருவதாகவும் கவிஞர் இன்பா குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்த் துறையில் சிறந்து விளங்கும் சான்றோர்களுக்குக் கணையாழி விருது, இளம் கவிஞர்களுக்குத் தங்க முத்திரை விருது, சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருது ஆகியவற்றை ஒவ்வோர் ஆண்டும் கவிமாலை வழங்கி வருகிறது.
சிங்கப்பூரின் வெளிச்சூழலுடனும் உள்ளுணர்வுகளுடனும் தமிழ்க் கவிதையைப் பிணைப்பது இந்நாட்டுக் கவிஞர்களின் பணியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
“வடிவங்களில் ஏற்படும் சலனங்களும் பார்வைகளும் அவரவர் சார்ந்திருக்கும் மனநிலையை ஒத்திருந்தாலும் சிங்கப்பூர்க் கவிதைகள் இந்த நிலத்தின் கருப்பொருள்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். அதற்கான முக்கியத்துவத்தை இங்குள்ள கவிஞர்கள் வழங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,” என்று அவர் கூறினார்.
தமிழ் அன்னைக்கான பாடல், பாரதியார் பாடல் எனத் திருவாட்டி நர்த்தகி நடராஜ் அபிநயங்களின் மூலம் கவிதைகளை விளக்கினார். திருநங்கையான திருவாட்டி நர்த்தகி, மதுரையில் பிறந்து தஞ்சாவூர் பாணி பரதநாட்டியம் கற்றார்.
பின்னர், மதுரையிலும் சென்னையிலும் வெள்ளியம்பலம் கலைக்கூடத்தை அவர் நிறுவினார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தேவாரம், திருப்புகழ், திருவாசகம் ஆகியவற்றையும் அவர் கொண்டுசேர்த்துள்ளார். தம் சிறந்த சேவைக்காக அவர், இந்தியாவின் மூன்றாவது ஆக உயரிய பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
நிகழ்வில் முத்தாய்ப்பாக, சிங்கப்பூரின் கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றிய 25 கவிஞர்கள், ஆய்வாளர்கள், இதழியலாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக கவிமாலையின் விதைகள் மாணவரணியின் 25 மாணவர்கள் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தனர். கவிமாலையின் வெள்ளி விழா மலரை தமிழறிஞர் சுப.திண்ணப்பன் வெளியிட, மாணவர் ரகு நந்தன் அதைப் பெற்றுக்கொண்டார். கவிமாலை வெளியிட்ட படைப்புகளை முனைவர் சித்ரா சங்கரன் வழங்க மாணவர்களின் சார்பாக நித்யஸ்ரீ அதைப் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன. கவிமாலை வெள்ளிவிழா மலர், வெள்ளிவிழா நினைவுப் பரிசு, லட்டு, மசாலா பொருள்கள், வெள்ளிவிழா நினைவுப் பேனா ஆகியவை அன்பளிப்புப் பைக்குள் இருந்தன.
“இந்நிகழ்வுக்காக நர்த்தகி நடராஜை வரவழைத்து மேடை அளித்தது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இறைவனிடம் கையேந்துங்கள், சின்னஞ்சிறு கிளியே கண்ணீர் என்ற பாடல்களுக்கு அவர் நடனமாடியதில் இருந்த பாங்கு, என்னை நெகிழவைத்து கண்ணீர் மல்க வைத்தது. அடுத்ததாக 25 தமிழ் அறிஞர்களை மேடையேற்றி, 25 மாணவர்களுக்கு விருது கொடுத்தது அருமையாக இருந்தது,” என்று பார்வையாளர் திருவாட்டி மஹ்ஜபீன் கூறினார்.
கவிமாலை தனது வெற்றிப் பயணத்தை இன்னும் வீரியமுடன் தொடரும் என்று கவிமாலையின் செயலாக்கக் குழுவினர் கூறினர்.