தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விளையாட்டில் விதியை மாற்றும் குமரன்

2 mins read
5082dfae-4e9b-4b12-bcc5-6a86c6306ab6
சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு விளையாட்டுகள் கற்பிக்கும் குமரன். - படம்: குமரன் ஆறுமுகம்

எதிர்காலத்தில் தாம் இத்தகைய ஒரு பணியை மேற்கொள்ளப்போகிறோம் என்று குமரன் ஆறுமுகம், 31, எண்ணியதே இல்லை.

காற்பந்துப் பிரியரான குமரனுக்கு காற்பந்து வீரராக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது.

ஆனால், வாழ்க்கை அவரை வேறு திசையில் கொண்டு சென்றது. கடந்த 10 ஆண்டுகளாகச் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளராக உள்ளார் குமரன்.

பள்ளிப் பருவத்தில் விளையாட்டுத்தனம், கல்வியில் நாட்டமின்மை என்று இருந்த குமரன் தற்போது பல பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக, தன்னம்பிக்கை ஊட்டி வருகிறார்.

தேசிய சேவைக் காலத்தில் அவர் ஈடுபட்ட ஒரு சமூக தொண்டூழியம் அவர் மனப்பான்மையை மாற்றியது.

அந்த நிகழ்வில் மதியிறுக்கம் உள்ள ஒரு சிறுவன் எதற்கும் செவி சாய்க்காமல் அமைதியாகக் காணப்பட்டான். அந்தச் சிறுவனைப் பார்த்தவுடன் மனம் கலங்கிய குமரன் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென முடிவுசெய்தார்.

சிறப்புக் கல்விப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வரும் குமரன், 2019ல் ‘ஃபிட்டி விட்டி’ எனும் லாபநோக்கற்ற அமைப்பையும் நிறுவி, அதன்மூலம் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கு விளையாட்டைக் கற்றுத் தருகிறார்.

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளாலும் விளையாட்டுகளில் ஈடுபட முடியும் என்பதை காட்ட விரும்புகிறார் குமரன்.
சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளாலும் விளையாட்டுகளில் ஈடுபட முடியும் என்பதை காட்ட விரும்புகிறார் குமரன். - படம்: குமரன் ஆறுமுகம்

“6லிருந்து 20 வயதுடையவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்கிறேன். சிறப்புத் தேவையுடையவர்களாக இருந்தாலும் அவர்களால் விளையாட்டுகளில் ஈடுபட முடியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்புகிறேன்,” என்று புன்முறுவலுடன் சொன்னார் குமரன்.

பார்வையற்றோர், அறிவுசார் இயலாமை, செவித்திறன் குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கு ஐம்புலன்களையும் பயன்படுத்தும் வகையில் விளையாட்டுகளைத் திட்டமிடுகிறார் குமரன்.

பிள்ளைகளுக்கு ஏற்ற முறையில் விளையாட்டுகளைத் திட்டமிடுகிறார் குமரன்.
பிள்ளைகளுக்கு ஏற்ற முறையில் விளையாட்டுகளைத் திட்டமிடுகிறார் குமரன். - படம்: குமரன் ஆறுமுகம்

“பந்துகளைத் தொட்டுணர வைத்து விளையாட வைப்பது, பேச இயலாத பிள்ளைகளுக்கு அதற்கேற்றவாறு விளையாட வைப்பது போன்ற உத்திகளைப் பயன்படுத்துவேன்,” என்றார் குமரன்.

சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுடன் பணியாற்றுவது மனதிற்கு இன்பத்தை அளித்தாலும் அதில் சவால்களும் நிறைந்துள்ளதாகக் குமரன் தெரிவித்தார்.

உதாரணத்திற்குப் பார்வையற்ற பிள்ளைகளுக்குக் கூடைப்பந்தை நெகிழிப் பையுடன் கட்டி அதை அவர்களின் கைகளில் கட்டி விளையாட வைப்பார்.

வேறு முறையில் விளையாட்டுகள் விளையாடப்படுவதால் அதற்கேற்ற கருவிகள் இல்லாமால் இருப்பதும் பெரிய சவால்தான்.

பந்தை வீசி விளையாடுவதற்குப் பதிலாக குமரன் அந்தப் பிள்ளைகளுடன் பந்தை உருட்டி விளையாடுவார்.

இத்துறையில் ஆசிரியர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்குமான பற்றாக்குறை பற்றிக் குறிப்பிட்ட குமரன், மாணவர்களிடமிருந்து மீள்திறன் போன்றவற்றைத் தாம் கற்றுக்கொண்டுள்ளதாகச் சொன்னார்.

எதிர்காலத்தில் மேலும் அதிகமான சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுடன் பயணிக்க விரும்பும் குமரன், பார்வையற்ற பிள்ளைகளுக்கு ‘கோல்பால்’ எனும் புதுவிதமான விளையாட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்