‘ஓம் சக்தி’, ‘பராசக்தி’ என்று எட்டுத் திக்கும் எதிரொலிக்க, ஸ்ரீமஹா மாரியம்மன் ஆலயத்தின் திருக்குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (ஜூன் 18) சிறப்பாக நடைபெற்றது.
ஈசூன் அவென்யூ 3ல் அமைந்திருக்கும் இக்கோவிலின் குடமுழுக்கைக் காண ஏறத்தாழ 8,000 பக்தர்கள் திரண்டனர்.
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம் விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அவருடன் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி லீ ஹுய் யிங்கும் திருவாட்டி கோ ஹன்யானும் திருக்குட நன்னீராட்டு விழாவில் பங்கேற்றனர்.
காலை 5 மணியளவில் இறுதிக்கால யாகசாலைப் பூசைகள் நடைபெற்றன. அதனையடுத்து, காலை 9.30 மணியளவில், சிவஶ்ரீ பாலமணி சிவாச்சாரியாரின் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் கொண்ட கலசங்களைத் தலையில் ஏந்தி கோபுரத்தை நோக்கி நடந்தனர்.
வேத மந்திரங்கள் முழங்க, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தின் கலசங்களுக்குச் சரியாக 10 மணிக்குத் திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதே நேரத்தில், மற்ற சன்னதிகளின் கோபுரங்களுக்கும் நன்னீர் ஊற்றப்பட்டது.
அதனையடுத்து, ஸ்ரீ மஹா மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஆலயம் கண்ட உருமாற்றம்
குடமுழுக்கிற்கானப் பணிகள் கடந்த ஈராண்டுகளாய் முழுமூச்சுடன் நடைபெற்றதாக ஆலய மேலாண்மைக் குழுவின் பொருளாளரும் குடமுழுக்கு ஏற்பாட்டுக் குழு உறுப்பினருமான திருவாட்டி த.பொற்செல்வி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
29 ஆண்டுகளுக்கு முன்பு, ஈசூன் அவென்யூ 3க்கு இடம்பெயர்ந்த கோயிலுக்குப் புதிதாக ராஜகோபுரம் சேர்க்கப்பட்டுள்ளது.
சக்தி, செழிப்பு, ஆன்மிக உயர்வு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் மகாமேரு ஆலயத்தின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டது.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 மீட்டர் உயரமுள்ள கருப்பர் சிலையும் இப்போது நிறுவப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீ சக்கரம் ஒன்றும் ஆலய மேற்கூரையின் நடுப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கோயிலைச் சுற்றிவரும் பாதை அகலமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த சரிவுப்பாதையும் இன்னும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் பரவசம்
மண்டாய் ரோடு, செம்பவாங் வட்டாரம் உள்ளிட்ட இடங்களில் 1930களிலிருந்து இயங்கிவந்த இக்கோயில், 1997ஆம் ஆண்டு ஈசூன் அவென்யூ 3க்கு மாறியது.
மண்டாய் ரோட்டில் கோயில் இருந்த காலத்திலிருந்து தொண்டூழியராகச் சேவையாற்றி வந்தவர் 82 வயது சரஸ்வதி நாராயணன்.
“முதல் முறை கோயிலுக்கு வந்தபோதே, சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. அப்போதிருந்த தலைவி என்னை அடிக்கடி கோயிலுக்கு அழைப்பார். நானும் கோயிலுக்கு வடை தயாரித்துக் கொடுப்பேன். கோயில் பணிகளில் ஈடுபடுவேன்,” என்று திருவாட்டி சரஸ்வதி குறிப்பிட்டார்.
புதிதாக நிறுவப்பட்ட 18 மீட்டர் கருப்பர் சிலை, பக்தர்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
75 வயது திரு சக்திவேல் முத்துசாமி, புக்கிட் பாஞ்சாங்கிலிருந்து தமது குலதெய்வமான கருப்பர் சிலையைக் காண ஆவலுடன் வந்திருந்தார்.
“கருப்பர் கம்பீரமாக நிற்கிறார். அதைப் பார்த்தபோதே, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இதற்காகவே வந்தேன்,” என்று அவர் மனம் நெகிழ்ந்தார்.
வெளிநாட்டு ஊழியர் திரு எஸ்.உதயகுமார், குடமுழுக்கைக் காண்பதற்கு வேலையிடத்தில் ஓய்வெடுத்து வந்ததாகக் குறிப்பிட்டார்.
கூட்ட நெரிசலை எதிர்பார்த்த அவர், அதிகாலை 5 மணிக்கே கோயிலுக்கு வந்துவிட்டார்.
“நான் துவாசில் வேலை பார்க்கிறேன். இந்தக் கோயிலுக்கு நான் அடிக்கடி வருகிறேன். இங்கு வருவதால், என்னால் அதிக மனநிறைவு கிடைக்கிறது,” என்று 55 வயது திரு உதயகுமார் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டுக் குடமுழுக்கில், கோயிலின் வெளிப்புறத்திற்குத் தங்க நிறம் பூசப்பட்டது.
அதனையடுத்து, பலரும் இக்கோயிலைத் “தங்கக் கோயில்” என்று அழைக்கத் தொடங்கினர்.
சிறுவயதாக இருந்தபோது, ‘தங்கக் கோயிலுக்குப் போகலாமா?’” என்று கேட்டதையும் பெற்றோர் இந்தக் கோயிலுக்கு அழைத்துவந்ததையும் நினைவுகூர்ந்தார் 15 வயது யுகதுர்கா விஜயன்.
“அவ்வகையில், கோயிலின் தங்க நிறம் கட்டிக்காக்கப்படுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது,” என உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் அவர் கூறினார்.
கூட்டு முயற்சியால் சிறப்புற்ற குடமுழுக்கு
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஏறத்தாழ 800 தொண்டூழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களுள் ஒருவர் உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி மாணவரான 15 வயது கவினேஷ் கணேசன்.
“ஶ்ரீ ஶ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தின் தொண்டூழியர்களில் நானும் ஒருவன். அதனால், இங்கு குடமுழுக்கிற்குப் பங்களிக்கத் தொண்டூழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, நானும் பதிவு செய்தேன்,” என கவினேஷ் கூறினார்.
“இன்று கூட்ட நெரிசல் சற்று அதிகமாக இருந்ததால், முதியோர், குழந்தைகள் இருக்கும் குடும்பங்களுக்குக் கோயிலுக்குள் நுழைய நாங்கள் முன்னுரிமை வழங்கினோம்,” என்று அவர் கூறினார்.
குடமுழுக்கிற்கு உதவக் காலை 4.30 மணிக்கே வந்துவிட்டார் கவினேஷ்.
சோர்வாக இருந்தபோதிலும் பக்தர்களின் அனுபவம் சுமுகமாக அமைந்ததில் பெருமிதம் கொள்வதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
வெயில் கொளுத்தியதால் பக்தர்களில் சிலர் சோர்வடைந்தனர்.
அவர்களைப் போன்றோருக்கு உதவவும் உடனடி முதலுதவி அளிக்கவும் 16 பேர் கொண்ட குழு முனைப்புடன் செயல்பட்டது.
“கூட்ட நெரிசலைச் சமாளிக்கக் கோயில் எடுத்த முயற்சிகள் பாராட்டிற்குரியவை. எங்களால் சுமுகமான முறையில், தங்குதடையின்றிக் கோயிலுக்குள் செல்ல முடிந்தது,” என்று 53 வயது திருவாட்டி சண்முகம் கவிதா கூறினார்.
கைத்தடியின் உதவியோடு நடக்கும் திரு சக்திவேல் முத்துசாமி, கோயிலுக்குள் நுழைய தொண்டூழியர்கள் பெரும் ஆதரவளித்ததாகக் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
‘தனி மரம் தோப்பாகாது’ என்பதற்கு இணங்க, குடமுழுக்குச் சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்யச் சிங்கப்பூரில் உள்ள பல கோயில்கள் கைகொடுத்தன.
குறிப்பாக, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தின் தொண்டர்களும் மற்றத் தொண்டூழியர்களும் இணைந்து, அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
“அன்னதானத்திற்கான ஆயத்தப் பணிகள் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கின. உணவுத் தயாரித்தலைத் தவிர்த்து, அன்னதானத்திற்காகக் கூடாரத்தை அமைத்தல், பெருமாள் ஆலயத்திலிருந்து உணவைக் கூடாரத்திற்குக் கொண்டுவருதல் போன்றவற்றிற்கும் ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருந்தது,” என 63 வயது திரு ரமேஷ் அப்பு கூறினார்.
பெருமாள் கோயிலின் சார்பாக, அன்னதானத்தை ஏற்பாடு செய்யும் தலைமைப் பொறுப்பு இவரையே சேரும்.
புதன்கிழமை (ஜூன் 17) மதிய வேளையிலிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
காய்கறிகள் வெட்டுவது முதல், அவற்றைச் சமைப்பது வரை, பெருமாள் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான தொண்டூழியர்கள் இரவுபகல் பாராமல் வேலை செய்தனர்.
காலை 10 மணியளவில் தொடங்கிய அன்னதானத்தில் ஏறத்தாழ 8,000 மக்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகத் திரு ரமேஷ் கூறினார்.
ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயமும் அன்னதானத்திற்கு ஆதரவை வழங்கியது.
முதியோருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
தீவு முழுதும் உள்ள 27 இந்துக் கோயில்கள் சீர்வரிசை கொண்டுவந்ததாகத் திருவாட்டி த.பொற்செல்வி குறிப்பிட்டார்.
அடுத்தகட்டப் பணிகள்
குடமுழுக்கை முன்னிட்டு, முதற்கட்டப் பணிகள் செய்யப்பட்டு, கோயில் புதுப்பொலிவுடன் மிளிர்கிறது.
இரண்டாம் கட்டப் பணிகள் பற்றிய சிறப்புக் காணொளியும் திரையிடப்பட்டது.
“கோயிலின் திருமண மண்டபத்தை நாங்கள் புதுப்பிக்கவுள்ளோம். மூன்று தளங்களுக்கு விரிவுபடுத்துவதோடு, கீழ்த்தளத்தில் வாகனம் நிறுத்துவதற்கு ஏதுவாக இடமும் ஒதுக்கப்படும்,” என்று திருவாட்டி பொற்செல்வி கூறினார்.
அத்துடன் ஆலயம் மேற்கொண்டுவரும் சமூகப் பணிகளைத் தொடர விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

