தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குரல் தேடும் பிள்ளைகளுக்கு வரமாக விளங்கும் லாவண்யா

2 mins read
74eb3800-adf1-4116-a066-8ac7303c2552
பேச்சு, மொழி சிகிச்சை மூத்த வல்லுநராக இருக்கும் லாவண்யா பரமசெல்வம். - படம்: அனுஷா செல்வமணி

சேவையும் அறிவியலும் ஒன்றுகலக்கும் ஒரு பணியில் ஈடுபட இளவயதிலிருந்தே லாவண்யா பரமசெல்வத்திற்கு ஆர்வம் இருந்துவந்தது.

இன்று அவர் செய்யும் தொழிலும் அவ்வாறே இருக்கிறது. பணியில் தான் சந்திக்கும் ஒவ்வொரு பிள்ளையும் நன்கு கேட்கப்பட்டு, மதிக்கப்பட்டு, நம்பிக்கையுடன் உணர, தங்கள் சொந்த குரலைக் கண்டறிய தீவிரமாக உதவி வருகிறார் 33 வயது லாவண்யா.

கடந்த ஏழு ஆண்டுகளாக லாவண்யா பேச்சு, மொழி சிகிச்சை வல்லுநராக இருக்கிறார்.

எந்தப் பின்னணியிலிருந்து வரும் குழந்தையாக இருந்தாலும் அக்குழந்தைக்கு குரல் தந்து அவர்களின் தன்னம்பிக்கையைக் கூட்டும் மேன்மையான பணியை இவர் செய்துவருகிறார்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தபோது தொண்டூழியம் புரியும் வாய்ப்பு லாவண்யாவிற்குக் கிடைத்தது.

அப்போது பேச்சு, மொழி சிகிச்சை வல்லுநரின் பணிகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் பேச்சு, மொழி சிகிச்சை தேவைப்படும் பிள்ளைகளுக்கு உதவும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டின.

அன்று வேர்விட்ட அந்த ஆர்வம் இவரைப் பேச்சு, மொழி சிகிச்சையில் முதுநிலைக் கல்வி பயில ஊக்குவித்தது.

“பேச இயலாதோர் மட்டுமன்றி மொழி, தொடர்பு, உணவுண்ணல் போன்றவற்றில் சிரமம் உள்ளவர்களுக்கும் தேவைப்படும்,” என்று விளக்கினார் லாவண்யா.

பட்டம் பெற்ற பின்னர் பணியைத் தொடங்கிய லாவண்யா கூடுதல் அனுபவம் பெற அமெரிக்காவிற்கு வேலை செய்ய சென்றார்.

ஒன்றரை ஆண்டுக்காலம் அங்கு பணிபுரிந்த பின்னர் சிங்கப்பூருக்குத் திரும்பிய இவர், தற்போது ‘மைண்ட்ஸ்’ உடற்குறையுள்ளோர் சிறப்புப் பள்ளியில் கடந்த நான்கு மாதங்களாக மூத்த பேச்சு, மொழி சிகிச்சை வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.

ஒவ்வொரு நாளும் பணியில் கிட்டத்தட்ட ஐந்து பிள்ளைகளைக் கண்காணித்து வரும் லாவண்யா, பேச்சாற்றலை திறம்பட ஆக்கப் பணியிடத்தில் பயன்படுத்தும் மாற்றுத் தகவல் தொடர்புத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

அத்திட்டம் சிகிச்சையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பிள்ளைகளுக்குத் தொடர்பை மிகவும் அணுகக்கூடியதாக மாற்று நடைமுறை வளங்களை வழங்க முற்படும்.

மேலும் பேச்சு, மொழி சிகிச்சை ஆதரவைப் பள்ளி தழுவிய முயற்சிகள், திட்டங்களில் ஒருங்கிணைக்கும் துறைத் திட்டங்களுக்கும் அது பங்களிக்கும்.

“சிறு சிறு தேவைகளைக் கேட்டறிவதிலிருந்து சமூகத்தில் மன வலிமையுடன் எழுந்து நிற்கவும் நான் சிறுபிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்கிறேன்,” என்று புன்முறுவலுடன் சொன்னார் லாவண்யா.

காட்சி ஆதரவை நேரடிப் பயிற்சியுடன் இணைத்து அன்றாட நடவடிக்கைகளில் தொடர்பு வாய்ப்புகளைச் சேர்த்து பிள்ளைகள் இன்றியமையாத் திறன்களை தங்கள் வகுப்பறைகள், வீடுகள், சமூகங்களுக்கு எடுத்துச் செல்ல அர்த்தமுள்ள இலக்குகளை வகுக்கிறார் லாவண்யா.

உடற்குறையுள்ள பிள்ளைகள் பலருக்கும் தொடர்புகொள்வது என்பது மிகக் கடினமான தடைகளில் ஒன்றாக இருப்பதால் தன்னைப் போன்ற சுகாதாரப் பராமரிப்புத் துணை வல்லுநர்களின் துணை தேவைப்படுவதாக இவர் கருதுகிறார்.

சிங்கப்பூரில் பேச்சு, மொழி சிகிச்சை வல்லுநர்களுக்கான தேவை வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் எனக் கூறும் லாவண்யா, பணியிடத்தில் பிள்ளைகள்தான் தன் முகத்தில் புன்னகையை மலரச் செய்வதாக நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்