தொழில்நுட்பராக சிங்கப்பூரில் ஈராண்டுகாலம் பணியாற்றியபின், டேக்வாண்டோவைத் தமது வாழ்வாதாரமாக மாற்றியவர் மாஸ்டர் யுவராஜ் லோகநாதன், 38.
2017 முதல் சிங்கப்பூரில் டேக்வாண்டோ பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியுள்ள அவர், அண்மையில் தம் தந்தைக்கு ஏற்பட்ட விபத்தால் தமிழ்நாட்டிற்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இருப்பினும், சிங்கப்பூரில் தாம் இருந்த காலத்திற்கு ஏதேனும் ஒன்றைச் சாதிக்கவேண்டும் என்ற தீராத வேட்கையில், டிசம்பர் 6 முதல் 8ஆம் தேதி வரை ‘நமது தெம்பனிஸ்’ நடுவத்தில் நடைபெற்ற பத்தாவது டேடோ (Daedo) டேக்வாண்டோ போட்டியில் கலந்துகொள்ள அவர் சிங்கப்பூருக்கு வந்தார்.
அவருடைய விடாமுயற்சிக்குத் தகுந்த பலன் கிடைத்துள்ளது.
சிங்கப்பூர் டேக்வாண்டோ கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட டேடோ போட்டியில், அவர் இந்தியாவைப் பிரதிநிதித்து பூம்சே (poomsae), மெய்நிகர் (Virtual) டேக்வாண்டோ ஆகிய இரு பிரிவுகளிலும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.
பூம்சே ஆண்களுக்கான ‘டான்’ (Dan) பிரிவில் 40 வயதுக்குட்பட்ட பிரிவில் மாஸ்டர் யுவராஜ் லோகநாதன் 7.232 புள்ளிகளைப் பெற்றார். ‘டான்’ என்பது கறுப்புப் பட்டை அங்கீகாரத்தைக் குறிக்கும். சிங்கப்பூரைச் சேர்ந்த பார்க் சியோங் ஜாங் 7.882 மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். மெய்நிகர் போட்டியில் பிலிப்பின்ஸ் நாட்டவர் வென்றார்.
இப்போட்டியில் 13 நாடுகளிலிருந்து 70க்கும் மேற்பட்ட அணிகள் கிட்டத்தட்ட 2,000 நிகழ்ச்சிகளில் பங்கேற்றன. மாஸ்டர் யுவராஜ் போட்டியிட்ட பிரிவுகளில் நான்கு முதல் பத்து பேர் வரை போட்டியிட்டனர்.
இருப்பினும், இன்னல்களை எதிர்கொண்டு சாதிப்பது என்பது மாஸ்டர் யுவராஜுக்குப் புதிதல்ல.
தொடர்புடைய செய்திகள்
தம் கல்லூரிப் பருவத்தில் டேக்வாண்டோவில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றிகள் பெற்றவர் மாஸ்டர் யுவராஜ். ஆனால், ஒருமுறை காலில் ஏற்பட்ட பலத்த காயத்தால் ஈராண்டுகள் கைத்தடியோடு நடக்க நேரிட்டது. டேக்வாண்டோ தொடரமுடியுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.
“அப்பொழுது பலரும் டேக்வாண்டோவில் என் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் பேசினார்கள்,” என நினைவுகூர்ந்தார் மாஸ்டர் யுவராஜ்.
2009ல் டாக்டர் அப்துல் கலாம் அவருடைய கல்லூரியில் ஆற்றிய உரை அவருடைய வாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருந்தது; மீண்டும் வாழ்வில் உயரவேண்டும் என்ற புத்துணர்ச்சியை அவரிடத்தில் விதைத்தது.
டாக்டர் கலாமை சந்தித்த அதே நாளில் மாஸ்டர் யுவராஜ், ‘கலாம் யுவி’ (Kalam UV) அறநிறுவனத்தை நிறுவினார். அதன்வழி, இந்திய அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை விளையாட்டிலும் கல்வியிலும் ஆதரிக்கத் தொடங்கினார். ‘கலாம் யுவி டேக்வாண்டோ’ குழுவையும் அவர் தொடங்கினார்.
2014ல் சிங்கப்பூரில் தொழில்நுட்பராகப் பணியாற்றவந்த அவர், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக டேக்வாண்டோ தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஹென்ரி டானிடம் மாணவராகச் சேர்ந்தார்.
“அவர் என் ஆர்வத்தைப் புரிந்து, எனக்குச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்,” என்றார் மாஸ்டர் யுவராஜ். இதன் மத்தியில், அரக்கோணத்தில் தம் வீட்டு மொட்டைமாடியில் புகைப்படக் கருவிகளை வைத்து, அங்கிருந்த மாணவர்களுக்கும் தொடர்ந்து இணையவழி டேக்வாண்டோ கற்பித்துவந்தார்.
2017ல் ‘ஜே ஹெச் கிம் டேக்வாண்டோ கழகத்தில்’ முழுநேரப் பயிற்றுவிப்பாளராகச் சேர்ந்தார் மாஸ்டர் யுவராஜ். சுற்றத்தாரிடமிருந்து நிதி திரட்டி டேடோ போட்டிகளுக்கு, இந்தியாவிலிருந்து தம் மாணவர்களை மூன்று முறை அழைத்துவந்துள்ளார். அப்போது அவர்களும் போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளனர். தமது அண்மைய சூழலால் இம்முறை அவர் மட்டுமே வரமுடிந்தது.
“சிலருக்கு வீடு இல்லை. ஒரு மாணவருக்கு அம்மா இல்லை. இதுபோல், ஆதரவு தேவைப்படும் திறன்மிக்க மாணவர்களையே நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம்.
“என் மாணவர்கள் ஒலிம்பிக்சில் தங்கம் வெல்லவேண்டும் என்பதே என் கனவு. நானும் ஒலிம்பிக் ஆட்ட நடுவர் ஆகவேண்டும்,” என்றார் மாஸ்டர் யுவாரஜ்.

