சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தனது ஐந்தாவது வருடாந்தர தேசிய தின விளையாட்டு விழாவின் ஒரு பகுதியாக புதிய இளையர் பிரிவை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளது.
வளர்ச்சியையும் லட்சியத்தையும் குறிக்கும் மேல்நோக்கிய அம்புக்குறிகள், சங்கத்தின் பாரம்பரிய நீலம், சிவப்பு, வெள்ளை நிறங்கள் இணைந்து இளையர் பிரிவின் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட அமைச்சர் எட்வின் டோங் சின்னத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் டோங், கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட 60வது தேசிய தினம் ஒரு முக்கிய மைல்கல் என்றால், இந்த 61வது தேசிய தினம் ஒரு புதிய சுழற்சியின் முக்கியத் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றார்.
“நமது முன்னோர்கள் கட்டியெழுப்பிய நாட்டை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்லும் பொறுப்பு இப்போது நம்மிடம் உள்ளது,” என்று அவர் வலியுறுத்தினார்.
இனம், சமயம், மொழி என்பவற்றைக் கடந்து, மக்கள் ஒன்றிணைவதற்கான ஒரு வலுவான தளமாக விளையாட்டு விளங்குவதைச் சுட்டிய அவர், “சிங்கப்பூர் இந்தியர் சமூகம் இல்லாவிட்டால், சிங்கப்பூர் இன்றுள்ள நிலையை அடைந்திருக்காது,” என்ற சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.
பாலஸ்டியர் ரோட்டில் அமைந்துள்ள சங்கத்தின் விளையாட்டுத் திடலில், நடைபெற்ற இவ்வாண்டின் விளையாட்டு விழா, ‘நம் நாட்டிற்காக, நம் சமூகத்திற்காக’ என்ற கருப்பொருளைக் கொண்டது.
புதிய இளையர் பிரிவின் நோக்கம் குறித்துப் பேசிய சங்கத்தின் விளையாட்டுப் பிரிவுத் தலைவரும் விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஜீவன் கெவின், கூடுதலான இந்திய இளையர்கள் சங்கத்தில் ஈடுபட வேண்டும் என்ற வெளிப்படுத்தினார்.
“மூத்த தலைமுறையினராகிய நாம் இளையர்களுக்குச் செவிசாய்த்து தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டிய காலம் இது.
“மனத்தளவில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இளையர்களைச் சென்றடைந்து, அவர்களுக்குப் பாதுகாப்பான ஓர் இடத்தைக் கொடுப்பதே எங்களின் முக்கிய நோக்கம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டு என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய பொதுவான மொழி என்ற அவர், இளையர்களுக்காக நடத்தப்படும் செயல்பாடுகளை புதிய பிரிவு மேலும் வலுப்படுத்தும் என்றார்.
இவ்விழாவின் சிறப்பு அம்சமாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 11 பேர் காற்பந்துப் போட்டி நடைபெற்றது. இதில் சங்கத்தின் மேலாண்மைக் குழுவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்த அணி, 1993ஆம் ஆண்டின் சிங்கப்பூர் ‘டிரீம் டீம்’ அணியை எதிர்த்து விளையாடியது.
நாடாளுமன்ற அணியில் அமைச்சர் டோங், நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ், தேசிய வளர்ச்சி துணையமைச்சர் ஆல்வின் டான், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் சையது ஹருன் அல்ஹப்ஷி, டாக்டர் ஹமீது ரசாக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
‘டிரீம் டீம்’ அணியில் ஃபாண்டி அகமது, மாலிக் அவாப், ஸ்டீவன் டான் போன்ற முன்னாள் உள்ளூர் காற்பந்து வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
“ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு நமது அணியினர் அனைவரும் ஒன்றிணைந்து விளையாடுவது இதுவே முதல் முறை.
“காற்பந்து, மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது. அங்கு தோல் நிறப் பாகுபாடுகளுக்கு இடமில்லை. நாம் அனைவரும் சிங்கப்பூரர்கள் என்ற ஒற்றை உணர்வே மேலோங்கி நிற்கும்,” என்று திரு ஃபாண்டி கூறினார்.
இந்தப் போட்டியில் ‘டிரீம் டீம்’ அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
1973ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஹாக்கி அணியினரின் சிறப்புப் போட்டியும் இவ்விழாவில் நடைபெற்றது.
பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தேசிய கீதம் பாடி, உறுதிமொழி ஏற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
மனநலம், வாழ்க்கையில் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பு போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு தற்காப்புக் கலை வீரர் ஆல்வின் ஷாம் ராஜ் கலந்துகொண்ட சிறப்புக் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

