நாடாளுமன்றத்தில் தமிழ்மொழியில் பேசும் அமைச்சர்கள், குறிப்பாக சரளமாகத் தமிழில் பேசும் அமைச்சர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் கூறியுள்ளார்.
“நாடாளுமன்றத்துக்கும் அப்பாற்பட்டு பிற இடங்களிலும் தமிழில் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்னும் அடுத்த 20, 30 ஆண்டுகளில் ஓர் அமைச்சர் மேடையேறித் தமிழில் சரளமாகப் பேச முடியுமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) தமிழ்ப் பேரவையின் 50வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் பேசினார்.
விரைவான உலகச் சூழல், மொழி வளர்ச்சிக்குச் சவாலாக இருப்பதாகச் சொன்ன திரு சண்முகம், தாய்மொழித் திறன் குறைந்து வருவதாக சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகம் கூறுவதைத் தமது உரையில் சுட்டினார்.
“இளையர்கள் பலர் ஆங்கிலத்தில்தான் பேசுகின்றனர். இது தமிழ்மொழிக்கு அப்பாற்பட்டு சீன, மலாய் மொழிகளுக்கும் பொருந்தும். தமிழ் பேசாதவர்களுக்கும் மதிப்புடைய மொழியாகத் தமிழ்மொழி இருக்குமா என்று நாம் சிந்திக்க வேண்டும்,” என்றார் திரு சண்முகம்.
தமிழ்மொழியைக் குறுகிய வட்டத்துக்குள் வைக்காமல் தமிழில் பேசாத மாணவர்களையும் தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவர வேண்டும் என்றார் அமைச்சர்.
“இது சவாலாகத்தான் இருக்கும். வகுப்பறை, சமூக அரங்கம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு இதர இடங்களிலும் தமிழ்மொழி ஒலிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
என்யுஎஸ் தமிழ்ப் பேரவை 50 ஆண்டுகளில் கண்டுள்ள வளர்ச்சியைப் பற்றி பேசிய அமைச்சர் சண்முகம், அதில் தற்போது ஈடுபடும் இளையர்களின் தமிழ்ப் புழக்கத்தைப் பாராட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழ்மொழியைச் செழிக்க வைக்க உங்களைப் போன்ற இளைய முன்னோடிகள் முன்வர வேண்டும். டிக்டாக் போன்ற தளங்கள் மூலம் தமிழைச் சுவாரசியமாக்க முடியுமா போன்ற வழிகளை ஆராய வேண்டும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை (மே 17) சிராங்கூன் கார்டன்ஸ் கன்ட்ரி கிளப்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் என்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஆடல், பாடல் என மாணவர்களின் பழைய அனுபவங்களை நினைவுகூர வைத்த இந்த நிகழ்ச்சி, பழைய மாணவர்கள் பலரும் நீண்டநாள் கழித்து சந்திப்பதற்கான ஒரு தளமாகவும் அமைந்தது.
1975ல் குறைவான மாணவர் எண்ணிக்கையில் தொடங்கப்பட்ட பேரவை, இன்று 46வது செயற்குழு உறுப்பினர்கள் வரை அளப்பரிய வளர்ச்சி கண்டுள்ளது.
தமிழ்ப் பேரவையைத் தொடங்கிய பேராசிரியர் அ.வீரமணி தலைமையில் தமிழ்ப் பேரவை 1977ல் ஏற்பாடு செய்த முதல் தமிழ் கருத்தரங்கு, சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கு 1984ல் துணைப்பாட வகுப்புகளைப் பேரவை அறிமுகம் செய்தது.
‘சாதனா’ என்று அழைக்கப்படும் அந்த வகுப்புகள், தலைமுறைகளாகத் தமிழ் மாணவர்களின் மொழியாற்றல் வளர்ச்சியையும் முழுமையான கற்றலையும் சாத்தியமாக்கியது.
தமிழ்ப் பேரவை 1987ல் அறிமுகப்படுத்திய ‘சங்கே முழங்கு’ எனும் தமிழ் மேடை நாடகத் தயாரிப்பு, மாணவர்கள் சமுதாய கருப்பொருள்களை நாடகம், இசை, நாட்டியக் கலையின்வழி ஆராய புத்தாக்கத் தளமாக திகழ்ந்து வருகிறது.
2014ல் முதல் சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு, தமிழ் பேசும் இளையர்களைச் சமூகப் பிரச்சினைகள், கலாசாரம், தலைமைத்துவம் குறித்து விவாதிக்க வைத்த முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது.
“சிங்கப்பூரில் தமிழ்மொழிக்கு அங்கீகாரமும் உயர்ந்த மரியாதையும் தர வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழ்ப் பேரவை தொடங்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் விதைத்தது இன்று நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
“இந்தப் பல்கலைக்கழகம் இருக்கும் வரை தமிழ்ப் பேரவை செழிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று பேராசிரியர் வீரமணி சொன்னார்.
“எங்களின் 50 ஆண்டு மரபைக் கொண்டாட ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம். தமிழ்ப் பேரவையின் முக்கிய நோக்கமே தமிழ் இளையர்களுக்கும் சமுதாயத்துக்கும் உதவுவதே.
“இளையர்களுக்கு தமிழ்மொழி வெறும் ஏட்டுக்கல்வியாக மட்டும் இருக்காமல் அதை சுவாரசியமாகக் கொண்டுபோக பல முயற்சிகளை செய்து வருகிறோம்,” என்று தற்போதைய 46வது செயற்குழுவின் தலைவர் சுப்பிரமணியன் கார்த்திகேயன், 23, கூறினார்.