மூத்தோருக்கும் முன்னாள் கைதிகளுக்கும் ஒரே இடத்தில் உதவிக்கரம் நீட்டும் அமைப்பாக விளங்கி வருகிறது அண்டிகா அறநிறுவனம்.
புதிய நிறுவனமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லாப நோக்கற்ற அமைப்பு, சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவர்களால் சென்ற டிசம்பரில் தொடங்கப்பட்டது.
ஒற்றைக் குடும்ப அலுவலகத்தின் கொடை கிளையான இந்த அமைப்பு, சமூகத்தை மேம்படச் செய்யும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
இதில் ஈடுபடுபவர்கள் வெவ்வேறு துறைகளிலும் பின்னணியிலிருந்தும் வந்துள்ளனர்.
அண்டிகா அறநிறுவனம் பிடோக்கில் அமைந்துள்ளது. சமூக மறு ஒருங்கிணைப்பு, வயதான இடப் பராமரிப்புக்கான அளவிடக்கூடிய உள்கட்டமைப்பில் அமைப்பு ஆழமாகக் கவனம் செலுத்தி வருகிறது.
இது ஒரு தனியார் அமைப்பு என்பதால் இதர துடிப்பான மூப்படைதல் நிலையங்களிலிருந்து மாறுபட்டது.
“மூத்தோரும் முன்னாள் கைதிகளும் வெவ்வேறு வகைகளான மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் பெரிதும் ஓரங்கட்டப்படுகின்றனர். இவர்களை இணைக்கும்போது இரு பிரிவினருக்கும் ஒரே இடத்தில் உதவி கிடைக்கிறது,” என்று சொன்னார் அமைப்பின் நிர்வாக இயக்குநர் டிக்சன் லிம், 34.
அமைப்பு தொடங்கிய சில மாதங்களில் இரண்டு முக்கியத் திட்டங்கள் இதில் பெரிய பங்காற்றி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் கைதிகளுடனும் மூத்தோருடனும் ஈடுபடுவது சமூகக் களங்கமாக இருப்பதாக சொன்ன டிக்சன், பள்ளி மாணவர்களுடன் இணைந்து அவர்களுக்கு அமைப்பில் தொண்டூழிய வாய்ப்புகளை வழங்குவதாக பகிர்ந்துகொண்டார்.
புரொஜெக்ட் கார்டியன்
குறைந்த வசதி, தனியாக வாழும் 100 மூத்தோருக்கு உதவிக்கரம் நீட்டுகிறது புரொஜெக்ட் கார்டியன்.
வீட்டில் யாருடைய துணையுமின்றி இருக்கும் மூத்தோர் கீழே விழும் ஆபத்தில் உள்ளனர்.
அத்தகைய மூத்தோரைக் கண்காணிக்கும் விதமாக அவர்களின் வீடுகளில் ஒரு கருவி பொருத்தப்படுகிறது.
அந்தக் கருவிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களான கழிப்பறைகள், படுக்கைக்கு அருகில் பொருத்தப்படும்.
“மூத்தோர் யாராவது கீழே விழுந்துவிட்டால் எங்களால் அந்தக் கருவிமூலம் கண்டறிய முடியும்,” என்றார் டிக்சன்.
அமைப்பில் தொண்டூழியம் புரிபவர்கள் மூத்தோருக்கு உடனடியாக தக்க உதவியை வழங்குவர்.
தற்போது இந்தக் கருவி பிடோக் சவுத்தில் இருக்கும் மூத்தோரின் வீடுகளில் உள்ளது. ஆனால், நாளடைவில் தீவு முழுவதும் இதர மூத்தோர் பயன்பெறும் வகையில் இது செயல்படுத்தப்படும் என்று அமைப்பு நம்பிக்கை தெரிவித்தது.
தொண்டூழியர்கள் இல்லாத நேரத்தில் அவசர உதவிக்கு ஒவ்வொரு வீவக புளோக்கிலும் உதவி புரிவோர் உள்ளனர்.
திட்டத்தில் மூத்தோரை சேர வைப்பது ஒரு சவாலாக இருப்பதாகச் சொன்ன டிக்சன், அந்தக் கருவி அவர்களின் தனியுரிமையை பறிப்பதாக சில மூத்தோர் நினைத்ததாகக் கூறினார்.
“கணவரை இழந்த சகோதரிகள் இருவரும் இந்தக் கருவி மூலம் பெரிதாக பயனடைந்துள்ளனர். இளைய சகோதரி ஒருமுறை கீழே விழுந்து பல நாள்கள் தாதிமை இல்லத்தில் இருந்தார். அவர்களின் வீட்டில் அந்தக் கருவி பொறுத்தப்பட்டவுடன் தனது அக்கா பாதுகாப்பாக வீட்டில் இருப்பார் என்ற நம்பிக்கை தங்கைக்கு வந்தது,” என்றார் அமைப்பின் சமூக சேவை பிரிவுக்கான தலைவர் ஜெரமி நெட்டோ, 43.
புரொஜெக்ட் செகண்ட் விங்ஸ்
முன்னாள் கைதிகளின் மறுஒருங்கிணைப்புக்கு கைகொடுக்கும் இத்திட்டம் அவர்களுக்கு மூத்தோர் பராமரிப்பு சேவை துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
முன்னாள் கைதிகள் பெரும்பாலும் தளவாடங்கள் அல்லது உணவு, பாணத் துறையில் வேலை செய்வதைத் தான் அதிகம் காண முடிகிறது.
ஆனால் அந்த சமூகக் களங்கத்தை உடைத்தெறியும் விதமாக இந்த அமைப்பு அவர்களை மூத்தோருக்கு சேவை புரிய வழியமைக்கிறது.
“முன்னாள் கைதிகளுக்கும், மூத்தோருக்கும் இடையிலான பிணைப்பு நன்றாகவே இருக்கிறது. இது முன்னாள் கைதிகளுக்கும் ஒரு மாறுபட்ட சூழலை அளிக்கும்,” என்று தெரிவித்தார் ஜெரமி.
சிங்கப்பூர் மஞ்சள் நாடா அமைப்புடன் கைகோத்துள்ள அன்டிகா அதன் மூலம் முன்னாள் கைதிகளை ஈடுபடுத்தி வருகின்றனர்.

