திருவாட்டி தமிழ் செல்விக்கு வயது 52. ஒருநாள் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவர் கண்ணில் பட்டது ஒரு சாலைக் கண்காட்சி. ஆர்வ மிகுதியால் அங்கு என்ன நடக்கிறது என்று காணச்சென்றபோது, பிற்காலத்தில் அது ஒருவரது வாழ்க்கையையே மீட்டுத் தருமெனச் சற்றும் நினைக்கவில்லை என்கிறார் அவர்.
யாரும் அவ்வளவு எளிதில் செய்ய முன்வராத ஒன்றாகக் கருதப்படும் எலும்பு மஜ்ஜை தானத்தைத் துணிச்சலுடன் நிறைவேற்றி, அதன்வழி ஒருவரின் உயிர்காக்கும் அறக்கொடையைப் புரிந்துள்ளார் இந்த ஒற்றைப் பெற்றோர்.
ஒருவரின் ஆர்வம் மற்றவர்க்கு மறுவாழ்வு
நன்கொடையாளராக விளங்க ஒருபோதும் திட்டமிடவில்லை என்று கூறிய திருவாட்டி செல்வி, திடீரென்று தோன்றிய ஆர்வம், எப்படி ஒருவருக்கு மறுவாழ்வளிக்கும் பயணமாக மாறியது என்று தமிழ் முரசிடம் விவரித்தார்.
‘‘எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் குறித்த சாலைக்காட்சி எதற்காக நடத்தப்படுகிறது என்ற ஒற்றைக் கேள்வியுடன் அங்குள்ளவர்களிடம் பேசினேன்.
‘‘அப்போது தன்னார்வலர் ஒருவர் என்னை அணுகி, நன்கொடையாளர்கள் மற்றும் அதைத் தானமாகப் பெறுவோர் குறித்த கதைகளை எனக்குக் கூறினார். உடனே நான் அந்தத் திட்டத்தில் சேரப் பதிவு செய்தேன்,” என்றார் திருவாட்டி செல்வி.
தாம் பொருத்தமான கொடையாளரா என்பது பற்றி அவருக்குத் தெரியாது. ஆனால் ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு, திருவாட்டி செல்விக்கு எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் (BMDP) எனும் அமைப்பிலிருந்து அழைப்பு வந்தது.
‘‘நான் பொருத்தமான கொடையாளர் என்றும், எலும்பு மஜ்ஜை தானம் செய்வதற்கு நான் ஒப்புதல் அளித்தால், ரத்த சம்பந்தமான நோயினால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் என்னிடம் கூறினார்கள்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
‘‘சற்றே கலக்கம் இருந்தது. ஏனெனில் எனக்கு ஊசி என்றாலே பயம். ஆனால் இந்த முறை வலி என்ற நினைப்பு வரவேயில்லை.
‘‘நான் மனது வைத்தால் என்னால் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியும். அந்த வாய்ப்பு இப்போது என் கையில் உள்ளது. அதை விட்டுவிடக் கூடாது என்ற உறுதியுடன், மேலும் ஒரு தாயாக எந்தத் தயக்கமுமின்றி ‘பிஎம்டிபி’ அமைப்பிடம் சம்மதம் தெரிவித்தேன்,’’ என்றார் திருவாட்டி செல்வி.
‘‘குறிப்பாக இவ்வகை நன்கொடை குறித்து என் தாய், பிள்ளைகள் எனக் குடும்பத்தில் உள்ளவர்கள் முதலில் தயங்கினர்.
‘‘சமூகத்தில் உள்ள பலரைப்போல அவர்களும் எலும்பு மஜ்ஜை தானமானது சிறுநீரக தானம் போன்ற ஒருவகை உறுப்பு தானம் என்றும் ஒருமுறை கொடுத்தால் மீண்டும் வளராது; அதனால் எனக்கு ஏதாவது ஆகிவிடும் என்றும் அஞ்சினார்கள்.
‘‘ஆனால் நான் அவர்களுக்கு விளக்கிப் புரியவைத்தேன். இந்த எனது பயணத்தில் எனக்குப் பெரிதும் ஊக்கம் அளித்தது என் இரண்டு நண்பர்கள்தான். அவர்களுக்கு இதன் முக்கியத்துவம் புரிந்திருந்தது,’’ என்று குறிப்பிட்டார் திருவாட்டி செல்வி.
குறிப்பாக எலும்பு மஜ்ஜை தானம் செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கிருந்த தாதி ஒருவர், ‘‘நாங்கள் பார்த்த முதல் இந்திய நன்கொடையாளர் நீங்கள் என்று குறிப்பிட்டார். அது இன்றும் என் நினைவில் நிற்கிறது. இவ்வகை நன்கொடை வழங்குவதில் நம் சமூகத்தில் நிலவும் இடைவெளியை நினைவூட்டுவதாகவும் இருந்தது,’’ என்றார் அவர்.
விளக்கிச் சொல்வதன் முக்கியத்துவம்
நம் சமூகத்தில் காணப்படும் இந்நிலையை மாற்றுவதற்கு, தானம் செய்யும்போது சுகாதாரப் பின்னடைவு ஏதும் வராது என்பதை மக்களிடம் விளக்கிச் சொல்லும் வகையில் கூடுதல் விழிப்புணர்வை விதைப்பது அவசியம் என்று திருவாட்டி செல்வி கூறினார்.
எலும்பு மஜ்ஜை நன்கொடைக்குப் பதிவுசெய்துள்ள சிங்கப்பூர் இந்தியர்களின் விகிதம் மிகக் குறைவு. உள்ளூரில் பொருத்தமான இந்திய நன்கொடையாளரைக் கண்டறிவதற்கான வாய்ப்பு இரண்டு விழுக்காடு மட்டுமே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இதுகுறித்து அக்கறை தெரிவித்த திருவாட்டி செல்வி, நன்கொடை தொடர்பான தமது இப்பயணத்தை உலகிற்கு அறிவிப்பதன் வழி, ஆக்ககரமான மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தாம் காப்பாற்றிய அக்குழந்தையை அவர் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அக்குழந்தை நலமுடன் இருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அக்குழந்தைக்கு நான் உயிர் கொடுத்ததுபோல மனம் நெகிழ்கிறது. ஒருநாள், அவரை நிச்சயம் சந்திப்பேன். இப்படியொரு வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் நிச்சயம் மற்றோர் உயிரையும் மீட்டெடுப்பேன்,’’ என்று உறுதியுடன் கூறினார் திருவாட்டி செல்வி.
எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் மற்றும் பதிவேட்டில் நீங்கள் எவ்வாறு சேரலாம் என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கும் இந்த நன்கொடை குறித்த மெய்நிகர் சாலைக் கண்காட்சியை பார்வையிடவும் https://bmdp.org/join-the-register எனும் இணையப்பக்கத்தை அணுகவும்.


