சீருடை முதல் தூரிகை வரை விரிந்த வாழ்க்கைப் பாதை

சீருடை முதல் தூரிகை வரை விரிந்த வாழ்க்கைப் பாதை

1 of 3
படம்: சரவணன் பாலசுப்ரமணியம்
படம்: சரவணன் பாலசுப்ரமணியம்
படம்: தாஷாயனி சுகேந்திரன்

04 Oct 2026 - 7:00 am

3 mins read

காவல்துறையில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த திரு சரவணன் பாலசுப்ரமணியம், தமது 48வது வயதில் அந்த வேலையைத் துறந்து, ஓவிய, வடிவமைப்புத் துறையில் கால்பதித்தார்.

ஈராண்டுகள் கழிந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சரவணனின் கலைத்திறனால் ஈர்க்கப்பட்டு, வாடிக்கையாளர் வட்டமே உருவாகியுள்ளது. 

ஸ்பெய்ன், துபாய், ஆஸ்திரேலியா எனப் பல்வேறு நாடுகளில் கண்கவர்ச் சுவரோவியங்களையும், திரை ஓவியங்களையும் திரு சரவணன் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஆறு வயதில் முதன்முதலாக சுவரில் கிறுக்கத் தொடங்கிய சரவணன், விலங்குகளின் படங்களைக் கொண்ட புத்தகங்களை நூலகத்திலிருந்து தந்தை இரவல் பெற்றுத் தந்து ஊக்கப்படுத்தியதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். 

“என் தந்தைதான் எனது முதல் விமர்சகர். நான் வரையும்போது அவர் எனக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு நன்றாக வரைவதற்கான குறிப்புகளை வழங்குவார்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

இவரது கலைத்திறம் இறைத்தொண்டுக்கும் பயன்பட்டது. பதின்ம வயதில் இவர், சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தீமிதித் திருவிழாவில் பயன்படுத்தப்படும் ஆஞ்சநேயர் கொடியில் வரைந்தார். 

லாசால் கலைக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் தொடர்பு, வடிவமைப்புப் பட்டயக் கல்வியை முடித்த காலகட்டத்தில், செப்டம்பர் 11 தாக்குதலின் விளைவாக உலகப் பொருளியலில் மந்தம் ஏற்பட்டது.

கடினமான சூழலில் நிலையான வருமானம் வேண்டி 2003ல் இவர் சிங்கப்பூர்க் காவல்துறையில் அதிகாரியாக இணைந்தார். அதற்கான பயிற்சி மேற்கொண்டிருந்த நேரத்தில் பாசமிகு தந்தை காலமானதில் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற முழுமூச்சாய் உழைத்தார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, காவல்துறைப் பணி நிமித்தமாக ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த திரு சரவணன், 2017ஆம் ஆண்டில் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சக காவல்துறை அதிகாரியின் மகளுக்கும் அந்த நண்பருக்கும் ஆறுதல் தரும் விதமாக, அவர்கள் இருவரும் இருக்கும் ஓர் ஓவியத்தை வரைந்து பரிசளித்தார். 

அந்த ஓவியத்தைப் பார்த்ததும் தம் நண்பர் தம்மைக் கட்டியணைத்துக் கண்ணீர் வடித்ததைக் கண்டு, கலையின்மூலம் மனிதர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்ததாகத் திரு சரவணன் கூறினார்.

2023ஆம் ஆண்டில் தம் தாயாரையும் இழந்த சரவணனுக்குள் பெரிய மனமாற்றம் நிகழ்ந்தது. தம் வாழ்நாளுக்குள் தம் கனவை நனவாக்கிப் பார்க்க வேண்டும் என உறுதிபூண்ட அவர், தமது 20 ஆண்டுகாலக் காவல்துறைப் பணிக்கு விடைகொடுத்தார்.

தமது முடிவைச் சிலர் ஏளனம் செய்ததாகக் குறிப்பிட்ட சரவணன், தாம் எடுத்த முடிவு பற்றி தொடக்கத்தில் அவ்வப்போது அச்சமும் ஐயமும் தோன்றியபோதெல்லாம் நெஞ்சம் படபடத்ததை நினைவுகூர்ந்தார்.

“ஆனால், அச்சம் என்ற திரைக்குப் பின்னே சுதந்திரம் மின்னுவதைக் கண்டுகொண்டேன்.  வண்ணம் தீட்ட விரும்பிய அந்தச் சிறுவன் என்னுள் தொடர்ந்து வாழ்ந்து வந்ததை இந்த அகத்தேடல்வழி  உணர்ந்தேன்,” என்றார் திரு சரவணன். 

தமது கலைப்படைப்புகள் பேரளவில் சன்மானம் ஈட்டியபோதிலும், பணத்தைவிடக் கலையின் மீதான காதலையே இவர் பெரிதாக மதிக்கிறார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற கண்காட்சியில் இவரது ஓவியங்களை வாங்கிய 42 வயதான ரிஃப் லிம், “சரவணனின் ஓவியப் படைப்புகளில் உள்ள நுணுக்கங்களும் ‘ஏர்பிரஷ்’ தூரிகைப் பயன்பாடும் மிகவும் தனித்துவமாகவும் அவை ஓவியத்திற்கு அதிக உயிரோட்டத்தைத் தருவதாகவும் அமைந்துள்ளன,” எனப் பாராட்டினார்.

துபாய், ஸ்பெயின் கண்காட்சிகளில் கலையார்வலர்கள் மத்தியில் நிற்கும் தருணங்களில் தம் தந்தை அருகில் இருந்திருக்கக் கூடாதா என இந்நாள்வரை ஏங்குவதாகக் கூறும் திரு சரவணன், தொழில் மாற தாம் எடுத்திருந்த முடிவைத் தம் தந்தை உறுதியாக ஆதரித்திருப்பார் எனக் கூறினார்.

கலைக்கு எதிர்காலம் இல்லை எனக் கருதி தங்கள் கனவுகளைக் கைவிட நினைக்கும் இளையர்கள் மனம் தளரவேண்டாம் என்பது இவரது அறிவுரை.

“எட்டாக்கனி போலத் தோன்றும் உங்கள் கனவு, எனக்கு நடந்ததுபோல ஒரு காலகட்டத்தில் உங்களுக்கும் ஒருநாள் மெய்ப்படும்,” என்கிறார் இவர். 

சிங்கப்பூரில்  நிரந்தரச் சுவரோவியம் ஒன்றை வரைய இவர் விரும்புகிறார். “இன்று உலகம் எனது பாரிஸ், மெக்சிகோ பயணங்களைப் பார்க்கிறது. ஆனால், என் பயணம் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில்தான் தொடங்கியது. கலை என்பது உண்மையிலேயே என்ன என்பதை அந்தக் கொடிதான் எனக்குக் கற்றுக்கொடுத்தது,” என்றார் இந்தக் கலைநேயர். 

குறிப்புச் சொற்கள்
கலைகாவல்துறைஓவியம்