பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேருக்கு லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளம்

பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேருக்கு லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளம்

2 mins read
20b7ceab-b2a5-494e-b1de-83fa1629d3f2
இவ்வாண்டின் லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளத்தைப் பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேருக்கு எஸ்பிஎச் அறநிறுவனம் (SPH Foundation) இந்த ஆண்டுக்கான லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளத்தை வழங்கியுள்ளது.

இந்த உபகாரச் சம்பளத் திட்டம் 21வது ஆண்டாக வழங்கப்படுகிறது. குறைவான வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பல்கலைக்கழகக் கல்விக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இது வழங்கப்படுகிறது.

கூடுதல் நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவும் வகையில், குடும்பத்தின் தனிநபர் மாத வருமான வரம்பு $1,250ஆக இவ்வாண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கல்விமான்கள் அனைவரும் அதிகாரபூர்வமாகக் கௌரவிக்கப்பட்டனர்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிலையங்களில் மொழியியல், மனிதநேயத் துறைகளில் பயிலும் மாணவர்கள் இந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளனர். சிறந்த கல்வித்திறன், சமூகத்திற்குத் தொண்டாற்றும் அர்ப்பணிப்பு உள்ளிட்ட நற்பண்புகளின் அடிப்படையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த உபகாரச் சம்பளத்தைப் பெறுவோருக்கு, படிப்பை முடித்த பிறகு எஸ்பிஎச் மீடியாவில் மீண்டும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் இல்லை. இது அவர்களின் கல்விக் கட்டணத்தை முழுமையாக ஏற்கிறது.

அத்துடன், வாழ்க்கைச் செலவுகள், புத்தகங்கள் வாங்குவதற்காக ஆண்டுக்கு $3,000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதழியல் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்பிஎச் மீடியாவில் வேலைப்பயிற்சி பெறும் வாய்ப்பையும் பெறுவர்.

முன்னாள் அமைச்சரான அமரர் லிம் கிம் சான் நினைவாக 2006ல் இந்த உபகாரச் சம்பளம் தொடங்கப்பட்டது. கல்வியே சமூக முன்னேற்றத்திற்கான சிறந்த பாதை என்ற அவரது நம்பிக்கையைப் போற்றும் வகையில் இது செயல்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளித்துள்ளது.

“இந்த ஆண்டு லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளம் பெற்றுள்ள இளம் சிங்கப்பூரர்கள், மீள்திறன், விடாமுயற்சி, பிறருக்குச் சேவை செய்யும் அர்ப்பணிப்பு ஆகிய நற்பண்புகளைக் கொண்டுள்ளனர். இந்த உபகாரச் சம்பளம் வளர்க்க விரும்பும் மதிப்புகளையும் அவர்கள் பிரதிபலிக்கின்றனர்,” என்று எஸ்பிஎச் அறநிறுவனத் தலைவர் ரோலண்ட் இங் கூறினார்.

தனிப்பட்ட சவால்கள், நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டபோதிலும், அவர்கள் தங்களின் இலக்கில் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த உபகாரச் சம்பளம் அவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதோடு, முழுத் திறனையும் வெளிப்படுத்தி, சமூகத்திற்குப் பயனுள்ள பங்களிப்பை வழங்கவும் துணைநிற்கும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
உபகாரச் சம்பளம்மாணவர்கள்எஸ்பிஎச் மீடியா