அழகு தமிழில் மழலைக் கதைகள்

அழகு தமிழில் மழலைக் கதைகள்

2 mins read
41a312a1-95a3-4ec3-8758-20a35a6e2737
மாணவர்களின் கலைப்படைப்புகள், அதன் பின்னணித் தயாரிப்புகளை விளக்கிய திருவாட்டி ராணி கண்ணா (இடது), தலைமைப் பயிற்றுவிப்பாளர் கலா. - படம்: லாவண்யா வீரராகவன்

கதைசொல்லல், வில்லுப்பாட்டு, குறுநாடகம் என அழகிய தமிழில் படைப்புகளை அரங்கேற்றி, பங்கேற்பாளர்களை வியப்பில் ஆழ்த்தினர் மாணவர்கள் சிலர்.

ஏகேடி அமைப்பின் ‘ஆனந்தக் கல்வி’ எனும் கலைகள்வழி தமிழ் கற்பிக்கும் திட்டத்தில் பயிலும் மாணவர்கள், திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாகக் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரும்பு, மொட்டு, நறுமுகை ஆகிய மூன்று நிலை வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

கடலில் குப்பை போடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் மீன், ஆமை ஆகிய உயிரினங்களைப் போன்று வேடமிட்டு மழலைத் தமிழில் ‘அரும்பு வகுப்பு’ மாணவர்கள் விவரித்தனர்.

தொடர்ந்து, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ எனும் பழமொழியை விளக்கும் வகையில், விலங்குகளைப் போன்று வேடமிட்டு, ஒரு கதையினை நாடகமாக்கிப் படைத்தனர் ‘மொட்டு வகுப்பு’ மாணவர்கள்.

வில்லுப்பாட்டு பாணியில் தெனாலிராமன் கதைசொன்ன நறுமுகை மாணவர்கள்.
வில்லுப்பாட்டு பாணியில் தெனாலிராமன் கதைசொன்ன நறுமுகை மாணவர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

‘நறுமுகை நிலை’ மாணவர்கள், தெனாலிராமன் கதையொன்றினை வில்லுப்பாட்டு பாணியில் அரங்கேற்றினர்.

“தொடக்கப் பள்ளியில் பயிலும் என் மகள் ஆன்யா சேஷா, தமிழில் சிறப்பாகச் செயல்படாதபோது, அவளைத் தமிழில் சிந்திக்கவைப்பதுதான் நல்ல வழி என நினைத்தேன். அத்துடன், கலைகளைக் கற்றால் பண்பாடு, அடையாளம் பற்றிப் புரிந்துகொண்டு அவள் பெருமைப்படுவதையும் பார்க்க முடிகிறது. அது மகிழ்ச்சி தருகிறது,” என்றார் திருவாட்டி சவிதா ஏகாம்பரம்.

“எங்கள் குடும்பத்தில் அதிகம் தமிழில் பேசி பழக்கம் இல்லை. மகன்களுக்கும் தமிழ் பேசுவதில் தயக்கம் நிலவியது. அதற்கு, மொழி குறித்த புரிதல் இல்லாதது முக்கியக் காரணம் என நினைத்தேன்.

“அவர்களை உற்சாகப்படுத்தும் முறையில், பேசும் வாக்கியங்களின் அர்த்தத்தை உணர்வது மொழியின் வளமையை அதிகரிக்கிறது,” என்றார் இரண்டு மகன்களுக்குத் தாயாரான சவிதா குணசேகரன்.

மகன்கள் பலர்முன் தமிழில் படைத்ததில் கூடுதல் மகிழ்ச்சியென்றும் அவர் சொன்னார்.

“பொதுவாக, ஆண்டுக்கு ஒருமுறை இவ்வகை நிகழ்ச்சியை நடத்துவோம். ஆனால், பிள்ளைகள் கடினமாக உழைத்து கதைகள், நாடகங்களுக்குத் தேவையான பொருள்களை உருவாக்கினர்.

“தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டனர். அவர்களை ஊக்குவிக்கவும் விளக்குகள், இசை, பார்வையாளர்கள் உள்ளிட்ட நேரடியான மேடை அனுபவத்தை வழங்கவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்,” என்றார் ‘ஏகே தியேட்டர்’, ‘ஏகேடி கிரியே‌‌ஷன்ஸ்’ நிறுவனங்களின் இயக்குநர் ராணி கண்ணா.

சிறுவர், சிறுமியர் மேடையில் நிகழ்ச்சி படைத்ததைக் கண்டு மகிழ்ந்ததாகச் சொன்னார் திருவாட்டி ராணி.

“பல மாணவர்களுக்கு, எழுதப் படிக்கத் தெரிந்தாலும் பேசும்போது இலக்கணப் பிழைகள் இருக்கும். கதை சொல்லும்போது வாக்கிய உருவாக்கமும் கற்றுத் தருகிறோம். அதனைச் சுவாரசியமான அனுபவமாகவும் மாற்ற முயற்சி செய்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், கதை உருவாக்கத்தில் மாற்றங்களைச் செய்யவும் பிடித்த அம்சங்களைப் புகுத்தவும் அனுமதிப்பது அவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதையும் திருவாட்டி ராணி சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்