சிங்கப்பூரின் பல்லின மக்களிடையே இந்தியப் பண்பாட்டின் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தும் நோக்கில், ‘இந்தியப் பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத மரபுகள்’ என்ற தலைப்பில் சுற்றுலா ஒன்று நடைபெற்றது.
அதில், மோல்மென் - கேன்ஹில் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டில் கிட்டத்தட்ட 60 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளித் திட்டப் பணிகளுக்காகச் சில மாணவர்களும் அதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அந்தச் சுற்றுலா, லிட்டில் இந்தியாவில் உள்ள லட்சுமி நாராயணன் கோயிலில் தொடங்கி இந்திய மரபுடைமை நிலையம் வரையிலான பாரம்பரிய இடங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்தது.
வண்ணமயமான வீதிகள், மரபுடைமைக் கட்டடங்களின் சிறப்புகள், பூக்கடைகள், உணவுக் கடைகள் என லிட்டில் இந்தியாவிலுள்ள பல்வேறு வகையான பண்பாட்டுச் சின்னங்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்திய மரபுடைமை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வேர்களும் வழிகளும்’ என்ற சிறப்பு வழிகாட்டப்பட்ட கண்காட்சி உலா ஒன்றும் இடம்பெற்றது.
அதில், 19ஆம் நூற்றாண்டில் இந்தியர்களின் குடியேற்றக் கதைகள் மற்றும் வரலாறுகள் பகிரப்பட்டன. லிட்டில் இந்தியா பகுதியின் கட்டடக்கலை, கைவினைஞர்களின் சுவர்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டன.
அத்துடன், இளையர்களை ஈர்க்கும் வகையில் கோலம் வரைதல், பல்வேறு வகையான இந்திய உணவுகள் குறித்த கலந்துரையாடல்கள் போன்ற அங்கங்களும் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் பண்பாட்டுப் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் குடியிருப்பாளர்களிடையே நல்லுறவை மேம்படுத்தவும் அந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக மோல்மென் - கேன்ஹில் இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவர் பிரேமலா கோபலகிருஷ்ணகோன் தெரிவித்தார்.
ஏற்பாட்டாளர்கள், அடித்தள ஆலோசகர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவேறியது.
புலன்கள் வழி மரபுகளைப் புரிந்துகொள்வது சாலச் சிறந்ததாய் அமைந்ததாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். பாரம்பரியத் தின்பண்டங்களைச் சுவைப்பது, சமயச் சடங்குகளைக் காண்பது, ஆலயங்கள் மற்றும் இந்திய மரபுடைமை நிலையத்தைப் பற்றித் தெரிந்துகொள்வது என அனைத்தும் பயனுள்ளதாய் இருந்ததாக 48 வயது இயன் லோ தெரிவித்தார்.
“இவற்றுக்குள்ளேயே சென்று இந்திய மரபு பற்றித் தெரிந்துகொண்டேன். இந்தியப் பண்பாட்டின் அழகை ரசிப்பதைத் தாண்டி அதனை அறிவுபூர்வமானதாகவும் உணர்ந்தேன்,” என்று சொத்துச் சந்தை முகவரான திரு லோ கூறினார்.

