முதுமை என்பது முந்தைய பருவங்களைக் காட்டிலும் இனிமையாக இருக்கலாம் என்பதைத் துடிப்புடன் மூப்படைதலுக்கான நிலையங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
முதியோர் ஒன்றுகூடி எளிமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதுடன் பாடல், ஆடல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட இத்தகைய நிலையங்கள் வழிவகுக்கின்றன.
விழாக்கால மகிழ்ச்சியில் முதியவர்கள் திளைக்க வாய்ப்பளிப்பதற்காக சன்லவ் அமைப்பு ‘இனிய தீபாவளி - தீபத் திருநாள்’ என்ற நிகழ்ச்சியை சன்லவ் பராமரிப்பு இல்லத்தில் அண்மையில் நடத்தியது.
உட்லண்ட்ஸ் சர்க்கிள், புளோக் 765ஏ பன்னோக்கு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நடைபெற்ற இந்த விழாவில் செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போ லி சான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதியவர்கள் பாரம்பரிய உடையணிந்து கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் பொலிவூட்டினர்.
மைக்கேல் ஜாக்சன் பாடல்களுக்கு நடனமாடிய முதியோர், குத்துப் பாடலுக்கு ஆடிய பிள்ளைகள் எனப் பல வயதினரும் கைகோத்த இந்நிகழ்ச்சி முதியவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சி சிறிதானாலும் மகிழ்ச்சி பெரிது
வீடுகளிலேயே முடங்கியிருக்கும் மூத்த குடிமக்கள் பலருக்கு இதுபோன்ற கொண்டாட்டங்கள் முக்கியம் என்பதை 75 வயது திருமதி லட்சுமி தேவி சுட்டிக்காட்டினார்.
செம்பவாங்கைச் சேர்ந்த அவர், “அனைவரும் இப்படி ஒன்றாகக் கூடி வருவது மிகவும் அருமையானது. மூத்த குடிமக்களுக்காகத் தொடர்ந்து இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும்,” என்று கூறியதுடன் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
சிறப்புப் பள்ளி ஒன்றின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற 73 வயது சுப்பன் குணசேகரன், நிகழ்ச்சி நன்றாக இருந்ததாகப் பாராட்டினார். “பல்வேறு இன மக்களும் ஒன்றுகூடி மகிழ்வுடன் கொண்டாடுவதைப் பார்ப்பதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,“ என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்காகத் தொண்டூழியம் செய்த 70 வயது லிசா ஜெய்டன், “தீபாவளி, கிறிஸ்துமஸ் என அனைத்துப் பண்டிகைகளின்போதும் தொண்டூழியம் செய்து, வேற்றுமையில் ஒற்றுமை கண்கிறேன்,” என்றார்.
