சிங்கப்பூரில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் பிரபல உள்ளூர் இசைக் கலைஞர் முகமது ரஃபி தோன்றி ஏ.ஆர்.ரகுமானுடன் பாடியபோது வருகையளித்திருந்த 25,000 ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது.
‘என் சுவாசக் காற்றே’ திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல ‘ஜும்பலக்கா ஜும்பலக்கா’ பாடலைப் பாடிய 63 வயது திரு ரஃபி, அந்தப் பாடலால் இசை உலகில் புகழின் உச்சியை அடைந்தார்.
அப்பாடலை இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானுடன் பாடியபோது பார்வையாளர்கள் பலரும் பழைய நினைவுகளில் திளைத்தனர். அவ்வாறுதான் திரு ரஃபிக்கும் இருந்ததாக அவர் சொன்னார்.
1980களில் தம்முடைய சகோதரர் மூலம் ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிமுகமான திரு ரஃபி, இசைப்புயலுடன் பயணம் செய்த காலம் அதிகம். 1989ல் எதேச்சையாக சென்னையில் இருந்தபோது ஏ.ஆர்.ரகுமானைச் சந்தித்த திரு ரஃபிக்கு அவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்படத் தொடங்கியது.
“நான் இசைப்புயலைச் சந்தித்தபோது அவர் அப்போது இன்னும் திலீப் என்றுதான் அழைக்கப்பட்டார். எனக்கு அவரை அப்போதிலிருந்தே தெரியும். இந்தியாவில் இசைத் துறையில் கால்பதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நான் ஏ.ஆர்.ரகுமானை நாடினேன்,” என்று திரு ரஃபி சொன்னார்.
இசையமைக்கும் வாய்ப்புகளை இறுகப் பற்றிக்கொள்ளும் ஆர்வத்தில் ஏ.ஆர்.ரகுமானை நாடிய திரு ரஃபிக்கு, எதிர்பாரா விதமாக பாடும் வாய்ப்புகளும் கிடைத்தன.
முதலில், ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் ‘என்னைக் காணவில்லையே நேற்றோடு’ பாடலைத் தாம் பாடியதாகக் குறிப்பிட்ட திரு ரஃபி, பின்னர் அப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியதாகச் சொன்னார்.
“எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற புகழ்பெற்ற பாடகர் அப்பாடலைப் பாடினார் என்று அறிய வந்தபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். அந்தப் பாடலை உற்றுக் கேட்டபோதுதான் பாடலின் சரணத்திற்கு எனது குரலை ஏ.ஆர்.ரகுமான் பயன்படுத்தியுள்ளார் என்று தெரிந்துகொண்டேன். அதனால் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி,” என்று கூறினார் திரு ரஃபி.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் சிலவற்றுக்குக் குரல் தந்துள்ள திரு ரஃபி, ‘காதல் வைரஸ்’, ‘பாய்ஸ்’, ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’, ‘அன்பே ஆருயிரே’ திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் சிலவற்றின் உருவாக்கத்திற்குப் பங்காற்றியுள்ளார்.
தம் மனைவியுடன் சில ஆண்டுகள் இந்தியாவில் வசித்த திரு ரஃபிக்கு, திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத் தொடங்கின.
‘ஜும்பலக்கா’ பாடல் பாடுவதற்கான வாய்ப்பைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட திரு ரஃபி, “அந்தப் பாடலை ஏ.ஆர்.ரகுமான்தான் முதலில் பாடினார். ஆனால், அவர் திடீரென்று ஒரு நாள் என்னைப் பாடச் சொல்லிவிட்டார். அப்பாடலுக்கு இத்தகைய புகழ் சேரும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை,” என நினைவுகூர்ந்தார்.
“ரகுமானின் பாடல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கும். ஆனால், ரட்சகன் திரைப்படத்தின் ‘நெஞ்சே நெஞ்சே’ என்னை மிகவும் கவர்ந்த பாடல். அதன் பொருள் ஆழமும் வரிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று கூறினார் ரஃபி.
தமிழ் திரைப்படங்களுக்கு அப்பாற்பட்டு ஹிந்தி படங்களுக்கும் தமது பங்கை அளித்துள்ளதாகச் சொன்ன திரு ரஃபி, ‘ரங் டே பசந்தி’, ‘தால்’ ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
ஆஸ்கார், கிராமி விருதுகள் வென்றுள்ள ஏ.ஆர்.ரகுமானுடன் தனிப்பட்ட முறையிலும் பழகியுள்ள திரு ரஃபி, இசைப்புயலின் ஆளுமையைப் பெரிதும் பாராட்டினார்.
“ஏ.ஆர்.ரகுமான் மிகவும் அடக்கமானவர்; பொறுமையானவர். அவர் எளிதில் கோபப்படமாட்டார்,” என்று திரு ரஃபி கூறினார்.
ரகுமானின் இசை நிகழ்ச்சியில் முதன்முறையாகப் பங்கேற்ற அனுபவத்தை நினைவுகூர்ந்த திரு ரஃபி, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றார். மீண்டும் இரண்டாவது முறையாக இவ்வாண்டு ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்த திரு ரஃபி, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னர் ஏ.ஆர். ரகுமான் தம்மை ஒத்திகைக்கு வரச் சொன்னதாக திரு ரஃபி குறிப்பிட்டார்.
“மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடந்த பிறகு, சிங்கப்பூருக்கு ஏ.ஆர்.ரகுமான் வருவதாக இருந்தால் அவருடன் நான் ஜும்பலக்கா பாடல் பாட விரும்புவதாக அவரிடம் சொன்னேன். அப்போது அவர் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி உறுதியாக நடக்கிறது என்று மட்டும்தான் சொன்னார். நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னர்தான் அவர் என்னைத் தொடர்புகொண்டார்,” என்றார் திரு ரஃபி.
இசைப்புயலின் பழைய பாடல்களை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கும் என்று கூறிய திரு ரஃபி மீண்டும் இதுபோன்ற வாய்ப்பு தமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.