வாழ்வின் உறவுகளையும் நம்பிக்கையையும் பற்றிப் பேசும் ‘சட்டென்று மாறுது வானிலை’ எனும் முழுநீளத் தமிழ்த் திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளனர் கெவின் வில்லியம் தலைமையிலான சிங்கப்பூர் இளையர் குழுவினர்.
இத்திரைப்படம் இந்தியாவிலும் முன்னோட்டக் காட்சியாகத் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்றது.
‘இயல்பு வாழ்க்கைச் சித்திரிப்பு’ (ஸ்லைஸ் ஆஃப் லைஃப்) எனப்படும் பாணியில் மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தன்மையின்றி, அன்றாட வாழ்வின் இயல்பான தருணங்களை, உணர்வுகளை சித்திரிக்கும் திரைப்படம் இது என்றனர் படக்குழுவினர்.
“அவ்வப்போது மனத்தில் தோன்றும் காட்சிகளை எழுதி வைப்பது என் வழக்கம். அப்படி, கடந்த 2024ஆம் ஆண்டு என் மனத்தில் தோன்றி, நான் எழுதி வைத்த காட்சியின் நீட்சியே இப்படம்,” என்று மகிழ்ச்சியுடன் பேசினார் படத்தின் இயக்குநர் கெவின் வில்லியம், 30.
எதிர்பார்த்த வகையிலான கதையும் கையில் கிடைக்க, போதிய நிதியும் கையிலிருக்க, தமது நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி.
இப்படத்துக்காக கிட்டத்தட்ட ஆறாண்டுகாலச் சேமிப்பைச் செலவிட்டுள்ளதாகச் சொன்னார் திரு கெவின்.
சிங்கப்பூர், மலேசியா, இந்தியா என மூன்று நாடுகளைச் சேர்ந்தோரும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அம்மூன்று நாடுகளில் படமாக்கப்பட்டபோது அங்குள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியதையும் சுட்டினார்.
இந்தியாவில் முன்னோட்டக் காட்சியாக வெளியீடு கண்டு, அங்குள்ளோர் அளித்த பாராட்டுகளும் ஊக்குவிப்பும் நம்பிக்கையளிக்கும் வண்ணம் அமைந்ததாகச் சொன்னார் திரு கெவின்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களின் கருத்துகளையும் விமர்சனங்களையும் கேட்டு, 3 மணி நேரமாக இருந்த படத்தை தற்போது 2 மணி நேரம் 40 நிமிடங்களாகச் செதுக்கியுள்ளதாகச் சொன்னார் படத்தின் தொகுப்பாளர் அறிவழகன் ஆபேல், 27.
கதையாக்கக் கட்டத்திலிருந்தே இப்படத்துடன் பயணிப்பதைக் குறிப்பிட்ட அவர், “குறும்படங்களைத் தொகுத்த அனுபவம் இருக்கிறது. ஆனாலும், ஒரு முழு நீளப் படத்தின் தொகுப்பாளர் பணியை ஏற்கும்போது தயக்கம் இருந்தது. ஆனால், குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மாறுபட்ட உற்சாகமான அனுபவம்,” என்றார்.
இத்திரைப்படத்தில் இரண்டு உள்ளூர் துணை இயக்குநர்களும் பணியாற்றியுள்ளனர்.
படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட துணை இயக்குநர் நவீன்குமரன், 22, “ஒரு முழுநீளப் படத்திற்கு முறையான திட்டமிடல் அவசியம். குறும்படம் போல நினைத்தவாறு முன்னெடுத்துச் செல்ல முடியாது. தொடர் மாற்றங்களும் அதற்கேற்றவாறு தயார்ப்படுத்திக் கொண்டதும் எதிர்பார்த்ததைவிட மாறுபட்டதாக இருந்தது. நல்ல அனுபவம் அது,” என்றார்.
“உறவுகளை ஆராயும் இப்படம் பார்ப்போருக்கு ஒரு நம்பிக்கை உணர்வைத் தருமென நம்புகிறேன்,” என்றார் மற்றொரு துணை இயக்குநரான சைலேஷ் நாதன், 23.
சிங்கப்பூரில் வெளியாகிவிட்ட நிலையில், தற்போது மலேசியாவின் ஐந்து நகரங்களில் ஆறு திரையரங்குகளில் இப்படம் வெளியீடு கண்டுள்ளது.

