உலக மேடையில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த உள்ளூர் எழுத்தாளர்

உலக மேடையில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த உள்ளூர் எழுத்தாளர்

2 mins read
3f6228ca-c91f-4a5e-8e1b-6c9c863f3dbb
‘வாழும் தமிழ் இலக்கிய விழா’ எனும் நிகழ்ச்சியில் பேச்சாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்ட அழகுநிலா. - படம்: அழகுநிலா
Google News Preferred Icon

உலக வரைபடத்தில் ஒரு சிறு புள்ளியாக இருந்தாலும் சிங்கப்பூரில் எண்ணிலடங்காக் கதைகள் உள்ளன. எழுத்தாளர்களுக்கு மாறுபட்ட கதைக்களங்களும் இங்குண்டு. அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதனைத் தெரிவித்தார் எழுத்தாளர் அழகுநிலா.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வாழும் தமிழ் இலக்கிய விழா’ நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களை அவர் பிரதிநிதித்தார்.

‘தமிழில் பெண்ணிய எழுத்து - அரசியலும் அழகியலும்’ என்ற அமர்வில், சிங்கப்பூர் இலக்கிய படைப்புகளைப் பற்றியும் பெண் எழுத்தாளர்களைப் பற்றியும் அழகுநிலா பகிர்ந்துகொண்டார். 

சிங்கப்பூர் இலக்கியப் படைப்புகளில் பெரும்பாலானவை குடும்பத்தையும் உறவுகளையும் சுற்றிவருவதாகக் குறிப்பிட்டார் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். 

அதற்குப் பதிலளித்த அழகுநிலா, ரஷ்யாவின் டொல்ஸ்டொய் எழுதிய ‘அனா கெரலினா’ எனும் நாவல் காதல் கதையாக இருந்தாலும் அக்காலத்தில் ரஷ்யாவில் நிலவிய சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு அதில் மேலோங்கியிருந்ததைச் சுட்டினார்.

சிங்கப்பூரின் பல கதைகளின் மையக்கரு குடும்பங்களை முன்னிலைப்படுத்தினாலும் ஒருவரது அடையாளம், சமூகப் பாகுபாடு, தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளி போன்ற பலதரப்பட்ட அம்சங்களும் கையாளப்படுவதை அழகுநிலா சுட்டினார். 

பெண்ணியம், இலக்கியம் குறித்துப் பேசிய அவர், சிங்கப்பூரில் பெண் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பாராட்டினார். 

சென்ற ஆண்டு (2025) தங்கமுனை விருது பெற்ற தமிழர்களில் அனைவருமே பெண்கள் என்பதை அவர் குறிப்பிட்டார். 

ஆரம்பத்தில் அவர்கள் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டிருந்தாலும் நாளடைவில் சிலர் எழுதுவதை நிறுத்திவிட்டதாகக் கூறினார் அழகுநிலா. 

“வாழும் தமிழ் இலக்கிய விழாவில் ஒரு தமிழ் எழுத்தாளராகச் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துக் கலந்துகொண்டது பெரும் பேறு,” என்று அவர் குறிப்பிட்டார். 

அழகுநிலாவோடு, மலேசியா, இந்தியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, கனடாவைச் சேர்ந்த 29 தமிழ் எழுத்தாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

பன்னாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளை அங்கீகரிக்கவும் நவீனத் தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுதும் உள்ள மற்ற மொழி வாசகர்களிடமும் கொண்டுசேர்க்கவும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற விழா பாதை அமைத்துக் கொடுத்தது.

‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் (ஏப்ரல்) 3, 4ஆம் தேதிகளில் நிகழ்ச்சி நடைபெற்றது. நவீன இலக்கியம், கவிதைகள், சமகால இலக்கியம், அயலக இலக்கியம், போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு 16 அமர்வுகள் இடம்பெற்றன. 

ஒவ்வொர் அமர்விலும் இரண்டு அல்லது மூன்று எழுத்தாளர்கள் பங்கேற்றுத் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர். 

அதே நிகழ்ச்சியில், விழாவில் கலந்துகொண்ட தமிழ் எழுத்தாளர்களின் ஓரிரு கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பார்ன் வித் த சதர்ன் விண்ட்’, ‘த சவுண்ட் ஆஃப் தி ஈஸ்டர்ன் வேவ்ஸ்’ என்று இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன. 

எழுத்தாளர் அழகுநிலாவின் ‘விலக்கு’, ‘வெள்ளெலிகள்’ என்ற இரண்டு சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்