இலவச பிரியாணி வழங்கி ஈகைத்தன்மை பேணும் பழம்பெரும் ‘இஸ்லாமிக்’ உணவகம்

இலவச பிரியாணி வழங்கி ஈகைத்தன்மை பேணும் பழம்பெரும் ‘இஸ்லாமிக்’ உணவகம்

மூதாதையர்களின் அறநெறியைப் போற்றும் பிரியாணி விநியோகம்
படம்: பெரித்தா ஹரியான்

24 Feb 2026 - 5:01 am

2 mins read

புனித ரமலான் மாதத்தில் மக்களின் பசியாற்ற, பழம்பெரும் ‘இஸ்லாமிக்’ உணவகம் 3,000க்கும் மேற்பட்ட பிரியாணிப் பொட்டலங்களை விநியோகம் செய்தது.

மலாய்/முஸ்லிம் சமூகத்தின் மரபுக்கூறுகள் நிறைந்த கம்போங் கிளாம் வட்டாரத்தின் நார்த் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள இந்த உணவகத்தின் 105வது ஆண்டுநிறைவைக் கொண்டாடும் விதமாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) உணவு விநியோகம் நடந்தேறியது.

பிற்பகல் 3.30 மணியளவில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். மலாய்ப் பாரம்பரியத் தாள இசைக்கருவிகள் மூலம், வாத்தியக் கலைஞர்கள் மங்கல முழக்கங்களை முழங்கிய சூழலில் கொண்டாட்ட உணர்வு மேலோங்கியது.

‘இஸ்லாமிக்’ உணவக மூன்றாம் தலைமுறை உரிமையாளர் கலீலுர் ரஹ்மானுடன் உரையாடும் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம்.
‘இஸ்லாமிக்’ உணவக மூன்றாம் தலைமுறை உரிமையாளர் கலீலுர் ரஹ்மானுடன் உரையாடும் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம். - படம்: பெரித்தா ஹரியான்

நிகழ்ச்சியைச் சிறப்பித்த முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம், மரபு வர்த்தகங்களின் மீள்திறனை இஸ்லாமிக் உணவகம் எடுத்துக்காட்டுவதாகக் கூறினார்.

உயர்தர சமையற்கலையுடன் ஈகைத்தன்மையையும் இந்த உணவகம் தனது மரபாகக் கொண்டிருப்பதாக இணைப் பேராசிரியர் ஃபைஷால் பாராட்டினார்.

வர்த்தகம் வளரும் அதே நேரத்தில், பிறருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற நன்னெறியை உணவகம் நன்கு அறிந்திருப்பதாக அவர் கூறினார்.

“சிங்கப்பூரின் மரபைத் தொடர அரசாங்கம் ஆதரித்து இடமளிக்க வேண்டும். இதன் தொடர்பில் வர்த்தகங்களுடன் இணைந்து செயலாற்ற நாங்கள் விரும்புகிறோம்.

“என்ன நேர்ந்தாலும், நம் மரபும் சிங்கப்பூரரைப் பாதுகாக்கும் கூறுகளும் தொடர்ந்து வளர்வதை உறுதிசெய்ய எங்களால் ஆனதை மேற்கொள்வோம்,” என்று உள்துறை மூத்த துணையமைச்சருமான டாக்டர் ஃபைஷால் உறுதியளித்தார்.

மூதாதையர்கள் வலியுறுத்திய அறநெறி

வர்த்தகச் சவால்கள் எத்தகையதாக இருந்தாலும், உணவு வழங்கும் மரபு தொடரும் என்று இஸ்லாமிக் உணவகத்தின் மூன்றாம் தலைமுறை உரிமையாளர் கலீலுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“இது, எனது மிகவும் தனிப்பட்ட உணர்வுகளை வெளிக்கொணர்கிறது. ஒவ்வோர் ஆண்டும் உணவகத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாட மக்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்க வேண்டும் என்பது என் தாத்தாவும் அப்பாவும் எனக்கு இட்ட கட்டளை. பிரியாணி விற்பனைதான் எங்களை 105 ஆண்டுகாலம் தாக்குப்பிடித்திருக்கச் செய்தது,” என்று திரு ரஹ்மான் உருக்கத்துடன் கூறினார்.

உணவகம் நடத்துவதையும் தாண்டி உணவு விநியோகம், சில்லறை விற்பனை போன்ற வர்த்தக முறையைச் செயல்படுத்துவதாகத் திரு ரஹ்மான் கூறினார்.

“உடனே சமைக்கக்கூடிய (ready-to-cook) பொட்டலமிடப்பட்ட உணவுகளை வழங்குகிறோம். 105 ஆண்டுகளையும் கடந்து தொடர்ந்து நிலைத்திருக்க, எங்கள் வர்த்தகச் செயல்முறையை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்