நரை கூடினாலும் குறையாத காதல்

நரை கூடினாலும் குறையாத காதல்

3 mins read
4e448df4-9c4d-4879-9fb4-17dd1c24c4b7
54 ஆண்டுகள் திருமண வாழ்வைக் கொண்டாடும் மனோரஞ்சிதம், 83 - காசிநாதன், 81, இணையர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாருவில் பிறந்து வளர்ந்தவர் திருவாட்டி மனோரஞ்சிதம் ராமசாமி, 83.

ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்குமுன் ஒருநாள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது அறிமுகம் இல்லாத ஆடவர் ஒருவர் தங்கள் வீட்டில் இருந்ததை அவர் கண்டார்.

தம் வருங்காலக் கணவரை அறிமுகப்படுத்தும் நம்பிக்கையில் குடும்பத் தொடர்பு ஒன்றின் மூலம் தம் தாயார் அந்த ஆடவரை வீட்டிற்கு அழைத்திருந்தார் என்று அறியவந்தபோது திருவாட்டி மனோரஞ்சிதம் எரிச்சலடைந்தார்.

ஏனெனில், வீட்டிற்கு மூத்த பிள்ளையான அவர் அப்போது தாதியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். பொறுப்புகள் பல இருக்கும் நேரத்தில் எவ்வாறு திருமணம் செய்துகொள்வது எனச் செய்வதறியாமல் அவர் திகைத்தார்.

தன்னைக் கைபிடிக்கத் திரு காசிநாதன் லோகேசன், 81, சிங்கப்பூரிலிருந்து மலேசியா வந்து சந்தித்ததைத் திருவாட்டி மனோரஞ்சிதம் நினைவுகூர்ந்தார்.

இருவரும் திருமண உறவில் இணைந்து 54 ஆண்டுகளாகிவிட்டன.

இருவரின் பயணத்தையும் நினைவுகூர்ந்த திருவாட்டி மனோரஞ்சிதம், குறிப்பிடும்படியான எந்தக் காரணத்திற்காகவும் தாம் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை என்றார்; பெற்றோரின் விருப்பப்படியே நடந்துகொண்டதாகக் கூறினார்.

சிங்கப்பூர்க் காவல்துறையில் பணிபுரிந்துகொண்டிருந்த திரு காசிநாதன், சில காலம் புக்கிட் பாஞ்சாங்கில் அமைந்துள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் தம் மனைவியுடன் வாழ்க்கை நடத்தினார்.

இப்போது எட்டுப் பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தா, பாட்டியாக இருக்கும் இருவரும் வாழ்க்கையில் மேடுபள்ளங்களைக் கடந்து வந்தவர்கள்.

தாதிப் பணிக்காகக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் திருவாட்டி மனோரஞ்சிதம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே அன்றாடம் பயணம் மேற்கொண்டார்.

“பிள்ளைகள் பிறந்த பிறகும் நான் அயராமல் உழைக்க வேண்டிய நிலை. அக்கறை மிகுந்த கணவரும், அண்டை வீட்டாரின் உதவியும் கிடைத்ததால்தான் இந்தப் பெரிய சவாலைக் கடந்தேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் திருவாட்டி மனோரஞ்சிதம்.

மனைவி மீதான தொடக்கக்கால அன்பில் எள்ளளவும் குறையாத திரு காசிநாதன், திருவாட்டி மனோரஞ்சிதத்தின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் தங்கள் திருமண ஆண்டுநிறைவின்போதும் தவறாமல் தங்கம் வாங்கித் தருவது வழக்கம்.

2017ல் திரு காசிநாதனுக்கு லேசான மறதிநோய் கண்டறியப்பட்டது. “அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னாலும், சில விஷயங்களை மறந்தாலும், எப்போதும் என்னைத்தான் தேடுவார்,” எனப் புன்முறுவலுடன் குறிப்பிட்டார் திருவாட்டி மனோரஞ்சிதம்.

திருமணமாகி 45 ஆண்டுகள் கழித்துத்தான் இருவரும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகக் கூறிய திருவாட்டி மனோரஞ்சிதம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மகிழ்ச்சியான திருமண வாழ்விற்கு அடித்தளம் என்றார்.

குடும்பத்தை மையமாகக் கொண்ட அன்பு, மனவுறுதி, அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு அரைநூற்றாண்டிற்கும் மேலான இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு சான்றாகத் திகழ்கிறது.

இளம்பருவத்தில் காசிநாதன் - மனோரஞ்சிதம் இணையர்.
இளம்பருவத்தில் காசிநாதன் - மனோரஞ்சிதம் இணையர். - படம்: காசிநாதன்- மனோரஞ்சிதம்

அண்மையில் பொன்விழா கொண்டாடிய 184 இணையரில் இவர்களும் அடங்குவர்.

அன்புக்குரியவர்கள் முன்னிலையில் தங்கள் திருமண உறுதிமொழியை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள அந்தக் கொண்டாட்டம் இணையரையும் அவர்களது குடும்பத்தினரையும் ஒன்றிணைத்தது.

துணைவியே உறுதுணை

இவர்களைப் போலவே திரு ராஜ் கிஷோர் ராய், 77 - திருவாட்டி மாலதி தேவி, 72, இணையரும் தங்கள் திருமண வாழ்வில் கடந்து வந்த அனுபவங்களைத் தமிழ்முரசிடம் நினைவுகூர்ந்தனர்.

பொன்விழாக் கொண்டாட்டத்தில் மாலதி தேவி - ராஜ் கிஷோர் ராய் இணையர்.
பொன்விழாக் கொண்டாட்டத்தில் மாலதி தேவி - ராஜ் கிஷோர் ராய் இணையர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திருமணம் முடிந்து சிறிது காலம் கழித்துத்தான் இருவரும் மனம்விட்டுப் பேசவே தொடங்கினர்.

தாயாரின் உறவினர்மூலம் திரு ராஜ் தம்மை மணமுடிக்கவிருக்கும் மாப்பிள்ளை என்று அறிந்துகொண்டார் திருவாட்டி மாலதி.

“என்னால் ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேச முடியாது. பெற்றோர் சொல்லே மந்திரம்,” என்றார் அவர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த திரு ராஜ், பத்து வயதில் சிங்கப்பூருக்கு வந்தார். திருவாட்டி மாலதி சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்.

திருமணம் நிச்சயமான இரண்டு மாதங்களில் திரு ராஜும் திருவாட்டி மாலதியும் திருமண உறவில் இணைந்தனர்.

“பதிவுத் திருமணத்தின்போதுகூட எனக்கு மாலதியைப் பற்றி ஒன்றும் தெரியாது. திருமணத்திற்குப் பின்னர்தான் நாங்கள் பேசவே தொடங்கினோம்,” என்று நகைத்தபடி கூறினார் திரு ராஜ்.

திருவாட்டி மாலதியும் திரு ராஜும் திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம்.
திருவாட்டி மாலதியும் திரு ராஜும் திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படம். - படம்: மாலதி-ராஜ்

வாழ்க்கைச் சக்கரம் நகர நகரத்தான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாகக் கூறிய திருவாட்டி மாலதி இல்லத்தரசியாகவே இருந்துவருகிறார்.

முதலில் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த திரு ராஜ் பின்னர் குற்றப் புலனாய்வுத் துறையில் பணிபுரிந்தார். பரபரப்பான பணிச்சூழலில் வீட்டுப் பொறுப்புகளையும், மூன்று பிள்ளைகளையும் கவனித்துக்கொள்வதில் திருவாட்டி மாலதி பெரும்பங்காற்றினார்.

“என் மனைவிதான் எனக்கு முதுகெலும்பு. நான் எந்நேரமும் வேலையில் மும்மரமாக இருந்ததால் வீட்டில் மாலதி இல்லாமால் என்னால் குடும்பத்தைக் கட்டிக்காக்க முடிந்திருக்காது,” என உணர்ச்சிபொங்கக் கூறினார் திரு ராஜ்.

குறிப்புச் சொற்கள்