சிங்கப்பூரைச் செதுக்கியவரின் காதல் கதை: ‘மூன்லிட் சிட்டி’ இசை நாடகம்

சிங்கப்பூரைச் செதுக்கியவரின் காதல் கதை: ‘மூன்லிட் சிட்டி’ இசை நாடகம்

படம்: டாய் ஃபேக்டரி புரொடக்‌ஷன்ஸ்

20 Aug 2026 - 5:30 am

2 mins read

பிரதமர் லீ குவான் யூ - குவா கியோக் சூவின் காதல் பயணம்

சிங்கப்பூரின் 61வது தேசிய தினக் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, நாட்டின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தது ‘மூன்லிட் சிட்டி’ (Moonlit City) எனும் ஆங்கில இசைநாடகம்.

சிங்கப்பூரைச் செதுக்கிய முன்னாள் பிரதமர் லீ குவான் யூ - குவா கியோக் சூ ஆகியோரின் வாழ்க்கைக் கதையையும் ஒரு தம்பதியராக அவர்கள் இணைந்து இன்றைய சிங்கப்பூரைச் செதுக்க எதிர்கொண்ட சவால்களையும் விவரிக்கும் அந்த இசைநாடகம் இம்மாதம் 14ஆம் தேதி மேடையேறியது.

‘டாய் ஃபேக்டரி புரொடக்‌ஷன்ஸ்’ (Toy Factory Productions) தயாரிப்பில், ‘புரோப்நெக்ஸ்’ (PropNex) நிறுவனத்தின் தனித்துவ ஆதரவோடு ஆகஸ்ட் 14 முதல் 30 வரை விக்டோரியா திரையரங்கில் அந்நாடகம் நடைபெறுகிறது. 

பிரதமர் லீ குவான் யூ - குவா கியோக் சூ கதாபாத்திரங்கள். 
பிரதமர் லீ குவான் யூ - குவா கியோக் சூ கதாபாத்திரங்கள்.  - படம்: டாய் ஃபேக்டரி புரொடக்‌ஷன்ஸ்

கதாபாத்திரங்கள் 

அந்த இசை நாடகத்தில் திரு கோ கெங் சுவீ, துங்கு அப்துல் ரஹ்மான் போன்ற வரலாற்று நாயகர்கள் பலர் சித்திரிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிங்கப்பூர், மலேசியா பிரிவு போன்ற பல வரலாற்றுத் தருணங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

“குவா கியோக் சூவை ஒரு கதாபாத்திரமாகச் சித்திரிப்பது மட்டும் எனது அணுகுமுறையாக இருந்ததில்லை. மாறாக, அவர் எவ்வாறு சிந்தித்தார், உலகை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தார் என்பதைப் புரிந்துகொள்ள முயன்றேன்,”என்றார் குவா கியோக் சூவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் சன்னி யாங்.

“நான் முதலில் லீ குவான் யூவைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன்; அந்தத் தம்பதியரின் உறவு, அவர்கள் வாழ்க்கை முடிவுகள் ஒருவரையொருவர் பாதித்த விதம், அவர்கள் பகிர்ந்துகொண்ட தருணங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள அது உதவியது,” என்று கூறினார் லீ குவான் யூ கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆல்வின் ஜூலியன் டான்.

‘மூன்லிட் சிட்டி’ இசைநாடகத்தின் ஓர் அங்கம்.
‘மூன்லிட் சிட்டி’ இசைநாடகத்தின் ஓர் அங்கம். - படம்: டாய் ஃபேக்டரி புரொடக்‌ஷன்ஸ்

தேசக் கட்டமைப்பின் பின்னணி

இந்நாடகம் நாட்டின் தொடக்கக் காலத்தை உணர்வுடன் படம்பிடித்துக் காட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டது என்று கலைத் துறையில் சிங்கப்பூரின் உயரிய விருதான கலாசாரப் பதக்கம் பெற்ற ‘டாய் ஃபேக்டரி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் தலைமைக் கலை இயக்குநர் கோ பூன் டெக், பகிர்ந்துகொண்டார்.

“ஒரு நாட்டின் பயணம் தனிப்பட்ட தியாகங்கள், அர்ப்பணிப்பு, குடும்பத்தின் வலிமை ஆகியவற்றால் வடிவமைக்கப்படுகிறது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது,” என்று குறிப்பிட்டார் இயக்குநர் கோ பூன் டெக்.

2025இல் மாண்டரின் மொழியில் அறிமுகம் கண்ட அந்த இசை நாடகம், இந்த ஆண்டு ஆங்கிலத்தில் மேடையேறி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்சமூகம்லீ குவான் யூஅரசியல்நாடகம்