மறதிநோய்க்கான ஆதரவு குறித்து குறைந்த விழிப்புணர்வு: எஸ்எம்யு ஆய்வு

மறதிநோய்க்கான ஆதரவு குறித்து குறைந்த விழிப்புணர்வு: எஸ்எம்யு ஆய்வு

2 mins read
45bdf8a4-4838-4f9d-81fa-92408bca0af8
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக (எஸ்எம்யு) மாணவர்களுடன் (முன்வரிசை, வலமிருந்து) ‘டிமென்ஷியா சிங்கப்பூர்’ அமைப்பின் ஓய்வுபெற்ற தலைமை நிர்வாகி ஜேசன் ஃபூ, எஸ்எம்யு விரிவுரையாளர் ரோசி சிங், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா. - படம்: சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம்

செய்தி: ரவி சிங்காரம்

சிங்கப்பூரில் மறதிநோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தாலும், உதவி எங்குப் பெறுவது என்பது குறித்து இன்னும் பெரும்பாலான மக்களுக்குத் தெரியவில்லை எனப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) ‘டிமென்ஷியா சிங்கப்பூர்’ அமைப்புடன் இணைந்து மேற்கொண்ட “ரிமெம்பர்.ஃபார்.மீ” (Remember.For.Me.) என்ற தேசிய ஆய்வில், கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மறதிநோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரியவந்தது. 

எனினும், உதவி பெறக்கூடிய இடங்கள் மற்றும் ஆதரவுச் சேவைகள் குறித்து இன்னும் பலருக்குத் தெரிவதில்லை.

எஸ்எம்யு புள்ளிவிவரத் துறையின் முதன்மை விரிவுரையாளர் ரோசி சிங், இளநிலை மாணவர்கள் 89 பேர், 2026 ஜனவரி மாதத்தில் ஐந்து வாரங்களுக்கு இந்த ஆய்வை மேற்கொண்டனர். தீவு முழுவதும் 10,827 பேரிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அவர்களில் மறதி நோய் உள்ளவர்கள், அவர்களின் பராமரிப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

மறதிநோய்ப் பராமரிப்பு நிலையங்களில் நேரடிப் பேட்டிகளுடன் மின்னிலக்க ஆய்வுகளும் நடத்தப்பட்டன. 

ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக, தங்கள் குடும்பத்தில் மறதிநோய் வரலாறு இல்லாததே குறைந்த விழிப்புணர்வுக்கான முக்கியக் காரணமாக மக்கள் தெரிவித்தனர். இதனால், மறதிநோய் தங்களுக்குத் தொடர்பில்லாத பிரச்சினை என்ற மனநிலை இன்னும் நிலவுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர், உதவி எங்குப் பெறுவது என்பது தெரியாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் ஆதரவு அமைப்புகளை அணுகுவதில் குறைந்த நம்பிக்கையுடன் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மறதிநோய் கொண்டவர்கள் பற்றிப் பொதுமக்களிடையே, குறிப்பாக நேரடி அனுபவம் இல்லாதவர்களிடையே, எதிர்மறைப் பார்வைகள் அதிகமாக இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

“மறதிநோய் சார்ந்த ஒவ்வொரு புள்ளிவிவரத்தின் பின்னணியிலும் முக்கிய நினைவுகளைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்ளும் குடும்பம் ஒன்று இருக்கிறது,” என்றார் ‘ரிமெம்பர். ஃபார்.மீ’ கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு மற்றும் சட்ட அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா.

“மறதிநோய் நமது ஆரோக்கியத்தை மட்டுமன்றி, சமூகமாக அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, சமூகப் புரிந்துணர்வு போன்றவற்றையும் பாதிக்கிறது என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன,” என்றார் விரிவுரையாளர் ரோசி சிங்.

இதற்குமுன் 2019, 2023ஆம் ஆண்டுகளில் எஸ்எம்யு மறதிநோய் குறித்த ஆய்வுகளை நடத்தியது. 

மூப்படையும் சமூகமான சிங்கப்பூரில், 2030ஆம் ஆண்டுக்குள் 150,000க்கும் அதிகமானோர் மறதிநோயால் பாதிக்கப்படுவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்