20 ஆண்டுகளைக் கடந்து மிளிரும் மதரசா கல்வி

20 ஆண்டுகளைக் கடந்து மிளிரும் மதரசா கல்வி

படம்: சுந்தர நடராஜ்

18 Oct 2026 - 6:01 am

2 mins read
பென்கூலன் பள்ளிவாசல் மதரசா மாணவர்கள்.
பென்கூலன் பள்ளிவாசல் மதரசா மாணவர்கள். - படம்: சுந்தர நடராஜ்

பென்கூலன் பள்ளிவாசல் வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி இளைய தலைமுறைக்கு இஸ்லாமிய நெறிமுறைகளையும் நற்பண்புகளையும் போதித்து வருகிறது. நற்குணமிக்க குடிமக்களை உருவாக்குவதில் இப்பள்ளிவாசலின் மதரசாக் கல்வித் திட்டம் ஆற்றிவரும் பணி மகத்தானது.

2004ஆம் ஆண்டில் பென்கூலன் பள்ளிவாசலில் மதரசா கல்வி முறைப்படியாகத் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 50 இந்திய முஸ்லிம் சிறார்களுடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், இன்று 120 மாணவர்கள் பயில்கின்றனர்.

பள்ளி பயிலும் மாணவர்கள் மாலை வேளைகளில் பள்ளிவாசலுக்கு வந்து இறைவேதமான திருக்குர்ஆனைக் கற்றுத் தேர்வதுடன், அதன் 6,666 வசனங்களையும் முழுமையாக மனனம் செய்து ‘ஹாஃபிழ்’களாக உருவெடுக்க இத்திட்டம் உறுதுணையாக நிற்கிறது.

இதுவரை 13 மாணவர்கள் முழு திருக்குர்ஆனையும் மனனம் செய்து தீவெங்கிலும் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் தொழுகையை வழிநடத்துகின்றனர்.

இந்நிலையில், தலைசிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் மகளிரும் முழுத் திருக்குர்ஆனை மனனம் செய்து பயனடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட கற்றல் வசதிகள்

மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் 2023ஆம் ஆண்டில் பள்ளிவாசலின் வகுப்பறைகள் நவீனமயமாக்கப்பட்டன.

மாணவர்களின் நல்வாழ்வுக்கும் அமரும் வசதிக்கும் ஏற்ற வகையில் ஆஸ்திரேலியாவிலிருந்து சிறப்பு நாற்காலிகள் இறக்குமதி செய்யப்பட்டன.

மேலும், பாரம்பரியக் கரும்பலகைகளுக்குப் பதிலாக அனைத்து வகுப்பறைகளிலும் நவீன மின்னிலக்க திரைகள் பொருத்தப்பட்டன.

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள், தங்களுடைய பள்ளி வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு வர ஏதுவாக வகுப்பு நேரத்தை இரவு 10.30 மணி வரை பள்ளிவாசல் நிர்வாகக் குழு நீட்டித்தது.

தேசிய சேவை புரியும் இளையர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களுக்குப் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா போன்ற வெளிப்புறக் கடற்கரைப் பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று, இயற்கைச் சூழலில் தொழுகை முறைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

தரமான கல்விக் கட்டமைப்பு

எவ்வாறு நறுமணம் வீசும் பூக்கள் நிறைந்த தேன்கூட்டை நோக்கி தேனீக்கள் திரளுமோ, அதுபோல பென்கூலன் பள்ளிவாசலின் தரமான பாடத்திட்டத்தையும், அர்ப்பணிப்புமிக்க கற்பித்தல் முறையையும் தேடி இன்று சிங்கப்பூரின் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பெருந்திரளாக வந்து பயில்கின்றனர்.

தற்போது நான்கு ஆண் ஆசிரியர்களும் ஐந்து பெண் ஆசிரியைகளும் மாணவர்களுக்குச் சீரிய முறையில் கற்பித்து வருகின்றனர்.

பள்ளி விடுமுறை நாள்களில் மாணவர்களுக்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களிடையே சேவை மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் மலேசியாவிற்கும் இந்தோனீசியாவுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்குள்ள கிராமப்புறப் பள்ளிவாசல்களை சுத்தம் செய்தல், வண்ணம் பூசுதல் போன்ற சமூக நற்பணிகளில் மாணவர்கள் நேரடியாக ஈடுபடுவது வழக்கம்.

எதிர்காலத்தில் பள்ளிவாசலின் மதரசா கல்வியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த பென்கூலன் பள்ளிவாசல் திட்டமிட்டுள்ளது.

வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாமல், கல்வியில் சிறந்து விளங்குதல், சமூக ஒற்றுமை, சமய நல்லிணக்கம், பெற்றோர், முதியோர்களை மதித்தல் போன்ற உயரிய விழுமியங்களை மாணவர்களின் மனத்தில் விதைப்பதே மதரசாவின் முதன்மை நோக்கம்.

குறிப்புச் சொற்கள்
பள்ளிவாசல்கல்விசமய நல்லிணக்கம்

தொடர்புடைய செய்திகள்