ஆறாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெற்ற மதராஸா விளையாட்டு போட்டிகள்

ஆறாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெற்ற மதராஸா விளையாட்டு போட்டிகள்

2 mins read
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகள்
66932eb8-70ab-4aec-8ac4-6fb1408d6048
ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற போட்டியாளர்கள். - படம்: வெங்கடேசன் வித்யா லட்சுமி

தஞ்சோங் அல்-இஸ்லாமியா சமயப் பள்ளியைப் பிரதிநிதித்து ஓட்டப்பந்தயம் ஒன்றில் பங்கேற்பது 12 வயது நூர் ஹுமைரா அல்-கத்திப்புக்கு முதல் அனுபவம்.

ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் படபடப்பு ஒரு பக்கம். பள்ளிக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்ற வேட்கை மறுபக்கம்.

கடும் வெயில். நெடுந்தொலைவு. குறைந்தது 5 சகப் போட்டியாளர்கள். இத்தனையையும் கடந்து முதலிடத்தில் வந்ததில் திருப்தி ஹுமைராவுக்கு இருந்தது.

“எனது கடும் முயற்சிக்குப் பலன் கிடைத்தது,” என்றார் ஹுமைரா.

ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசைப் பெற்றார் ஹுமைரா, 12.
ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசைப் பெற்றார் ஹுமைரா, 12. - படம்: வெங்கடேசன் வித்யா லட்சுமி

சிங்கப்பூரில் உள்ள அனைத்து மதராஸா சமயப் பள்ளிகளுக்குமான தேசியப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்றோரில் ஹுமைராவும் ஒருவர்.

வியாழக்கிழமை (ஏப்ரல் 2) திடல்தடப் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 17 போட்டிகளில் களமிறங்கிய நான்கு மதராஸாக்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன் நோன்புப் பெருநாளுக்குமுன் நடைபெற்ற மற்ற சிலபோட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணையமைச்சரும் சுகாதாரத் துணையமைச்சருமான ரஹாயூ மஹ்ஸாம் பரிசுகளை வழங்கினார்.

“விளையாட்டுகள் வாழ்க்கைக்கு அடிப்படையான பல பண்புகளைக் கற்றுத் தருகின்றன. விளையாட்டுகள் மூலம், கூட்டு முயற்சி, பிறரோடு எவ்வாறு இணைந்து செயல்படுவது உள்ளிட்டவற்றைக் கற்றுக்கொள்ளலாம்,” என்றார் திருவாட்டி ரஹாயூ.

பதக்கங்களை அணிந்து நிற்கும் மாணவிகள்.
பதக்கங்களை அணிந்து நிற்கும் மாணவிகள். - படம்: வெங்கடேசன் வித்யா லட்சுமி

கொவிட்-19 நோய்த்தொற்று காரணமாக 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு மதராஸா மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. 

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்துயிர் பெற்ற போட்டிகளை ‘முயிஸ்’ எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் இவ்வாண்டு நடத்தியது.

அதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 2,500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

போட்டியாளர்களுக்கு ஆதரவு அளித்த பங்கேற்பாளர்கள்.
போட்டியாளர்களுக்கு ஆதரவு அளித்த பங்கேற்பாளர்கள். - படம்: வெங்கடேசன் வித்யா

“வகுப்பறையில் கற்பதைத் தவிர, ஒரு முழுமையான, சமச்சீரான கல்வியை விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் மாணவர்கள் பெறலாம்,” என்று முயிஸின் கல்விப் பிரிவின் இயக்குநர் முஹமத் கிதிர் பின் அப்துல் தெரிவித்தார். 

பல மாணவர்கள் ‘முயிஸ்’ நடத்தும் இத்தகைய போட்டிகளில் கலந்துகொள்வது முதல்முறை. அவர்களுள் ஒருவர் 14 வயது ஹுரின் ஆயிரா அப்துல் ஹடி. வலைப்பந்தாட்டப் போட்டியில் குழுவாகக் கலந்துகொண்டு, உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் இரண்டாம் பரிசை வென்றார் ஹூரின்.

“போட்டிக்கு முன்பு, வாரந்தோறும் பயிற்சி செய்வோம். போட்டியில் வெற்றியோ தோல்வியோ, எங்கள் குழு ஒன்றிணைந்து செயல்பட்டது. ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தினோம்,” என்று மதராஸா அல்-மா’அரிஃப் அல்-இஸ்லாமியா பள்ளி மாணவர் ஹூரின் கூறினார். 

“பள்ளியைப் பிரதிநிதித்து விளையாடி, முதல் பரிசை வென்றது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இறுதிச் சுற்றில், மூன்று கோல் அடித்து வென்றோம். எங்கள் முயற்சி வெற்றிக்குக் கைகொடுத்தது,” என்றார் மதராஸா இர்ஷயாத்தைச் சேர்ந்த இசா பின் முஹமத், 12. 

குறிப்புச் சொற்கள்