ஆன்மிக குருவாகப் போற்றப்படும் ஷீரடி சாய்பாபாவின் 107வது நினைவு நாளை ஒட்டி அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தில் ‘மகா சாய் விளக்கு வழிபாடு’ நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி நிர்வாக நிறுவனமான ‘லயன் சிட்டி சொலுஷன்ஸ்’, ஆத்தங்குடி ‘நலம் தரும் சாய்பாபா’ ஆலயம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தச் சிறப்பு வழிபாடு, அக்டோபர் மாதம் 9ஆம் தேதி மாலை 4 மணிக்குத் தொடங்கும்.
ஷீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினத்தைச் சிங்கப்பூரில் சிறப்பு வழிபாட்டின் மூலம் நினைவுகூர்வது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார் ஆத்தங்குடி சாய்பாபா ஆலய நிர்வாகத் தலைவர் அனுஷா சண்முகம், 57.
“இந்தப் பூஜைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது,” என்று தமிழ் முரசிடம் அவர் தெரிவித்தார்.
வழிபாட்டில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு ஷீரடி சாய்பாபாவின் முகம் பொருந்திய விளக்கு ஒன்று வழங்கப்படும்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக ஆன்மீக உரையாடல் நடைபெறவுள்ளது. அதில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற நடிகை நளினி சிறப்பு உரையாற்றவிருக்கிறார்.
அவருடன் ஷீரடி சாய்பாபாவின் உருவச்சிலைக்குத் தனித்துவமான ஆடைகளைத் தயார் செய்யும் ‘சாய் லோகபாலா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலசரவணன் கிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்வார்.
அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தில் ஷீரடி சாய்பாபாவின் உருவச்சிலை நிறுவப்பட்டு ஈராண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
தொடர்புடைய செய்திகள்
கொண்டாட்டங்களில் பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜேமஸ் லிம், ஹி டிங் ரூ, கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மகா சாய் விளக்கு வழிபாடு பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர் avgmtemple@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியை நாடலாம்.