கடந்த ஆண்டு நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாவையடுத்து நடைபெறும் முதல் மகா சிவராத்திரி விழா, கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) கோலாகலமாக நடந்தேறியது.
மகா சிவராத்திரி விழாவையொட்டி, இரவு 7 மணி முதலே வழிபாடுகள் தொடங்கின.
பால்குடம் எடுக்கும் பக்தர்கள், அதற்கென அமைக்கப்பட்ட கூடாரத்தில் மாலை 4.30 மணியிலிருந்து வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பால்குடமேந்தி வழிபட்டார்.
ஞாயிற்றுக்கிழமை, சீனப் புத்தாண்டுக் காலம் என விடுமுறைகள் மிகுந்த நாள்களில் வருவதால் அதிக பக்தர்கள் வருவர் என எதிர்பார்த்து அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகச் சொன்னார் கோயிலின் துணைத் தலைவர் சுசீலா கணேசன்.
“கடந்த ஆண்டு சிறிய அளவில் இவ்விழா நடைபெற்றது. இவ்வாண்டு மீண்டும் நான்கு கால வழிபாடுகளுடன் அனைத்து சந்நிதிகளும் திறந்திருப்பதால் பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது,” என்றார் அவர்.
விழாவுக்கு முந்தைய நாள் 5,000 பக்தர்கள் இணையவழியில் பால்குடம் எடுக்க பதிவுசெய்ததாகவும், விழாவன்று காலை அந்த எண்ணிக்கை 8,000 வரை அதிகரித்ததாகவும் அவர் சொன்னார்.
நேரடியாக வருவோர்க்கும் பால்குடம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதாகச் சொன்னார் நிர்வாகக் குழு உறுப்பினர் அருண்குமார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இரவு 7 மணி தொடங்கி மறுநாள் அதிகாலை 6 மணி வரை நடைபெறும் நான்கு கால பூசைகளிலும் 40,000 பக்தர்கள் வரை பங்கேற்க வந்தாலும் அதற்குரிய முன்னேற்பாடுகள் உள்ளதாகச் சொன்னார் திருவாட்டி சுசீலா.
ஏறத்தாழ 350 தொண்டூழியர்கள் சில வாரங்களாகவே இதற்காகப் பணியாற்றியதையும் கடைசி நேரத் தயாரிப்புகள், பிரசாதம், அன்னதானம் ஆகியவற்றுக்காக அயராது உழைத்ததாகவும் சுட்டினார் அவர்.
தொடர்ந்து பக்தர்கள் வந்துசெல்ல ஏதுவாக, கோயில் வளாகத்தில் இரவு முழுவதும் தங்க அனுமதி இல்லை. மாறாக, எதிரே உள்ள திடலில் கூடாரம் அமைக்கப்பட்டு, அங்கு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. திரையில் நான்கு கால பூசைகளின் நேரலை ஒளிபரப்பப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விழாவில் பங்கேற்கும் கோமதி சிவகுமார், 50, “இவ்வாண்டு ஏற்பாடுகள் நினைத்ததைவிட சிறப்பு. மூத்தோர், சிறப்புத் தேவையுள்ளோர்க்குத் தனி வரிசை. பக்தர்களுக்குத் தனி வரிசை. பால்குடம் எடுப்போர்க்குத் தனி வரிசை. இது நேரத்தையும் நெரிசலையும் குறைத்துள்ளது,” என்றார்.
சக்கர நாற்காலியிலுள்ள தம் தாயார் லட்சுமிக்கு இவ்வாண்டு சிரமமின்றி இருந்ததாக அவர் பாராட்டினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாகப் பால்குடம் எடுக்கும் சுசீலாதேவி, 60, “கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால் முன்கூட்டியே வந்துவிட்டோம். ஒரு மணி நேரத்தில் தரிசனம் முடித்து பால்குடம் வாங்க வந்தோம். அனைவரும் நன்றாக இருக்க வேண்டி தொடர்ந்து வருகிறேன்,” என்றார்.
முதன்முதலாக இக்கோயிலில் சிவராத்திரி விழாவுக்கு வந்த விரிவுரையாளர் விக்னேஸ்வரி மாரிமுத்தர், “எனது இஷ்ட தெய்வம் விநாயகரையும் சிவனையும் தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்தேன். இது நல்ல அனுபவம்,” என்றார்.

