பலதரப்பட்ட திறமைகள் மூலம் கடந்த ஆண்டில் மக்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட கலைஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது ‘பிரதான விழா 2026’.
ஒலி, ஒளி வழியே மக்களை ரசிக்க வைத்த கலைஞர்களை அங்கீகரிக்கும் பிரதான விழாவின் 21வது ஆண்டு விருது வழங்கும் விழா, ‘துணிவுடன் கனவு காணுங்கள்’ எனும் கருப்பொருளில் மீடியாகார்ப் அரங்கில் சனிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெற்றது.
இவ்வாண்டு நிகழ்ச்சிகள் பிரிவில் ஆறு விருதுகள், கலைஞர்கள் பிரிவில் பத்து விருதுகள், ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரபல கலைஞர்களுக்கான இரு விருதுகள் என 19 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்ற ‘கருவனம்’ தொடர்
சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லன் கதாபாத்திரம், சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் என ஐந்து விருதுகளை இத்தொடர் அள்ளியது.
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சிறந்த நடிகர் விருதை விக்னேஷ் வரதராஜன் வென்றார்.
‘கருவனம்’ இதுவரை நான் செய்ததிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரம். நிறைய தாடி வளர்த்ததும் திகில் தொடர் என்பதால் அதற்கேற்பத் தயார்செய்ததும் புதிய அனுபவமாக இருந்தது,” என்றார் விக்னேஷ்.
முதன்முறையாக இவ்விருதை வென்ற அவர், “விருதுக்காக உழைக்கவில்லை. ஆனால், ஏக்கம் இருந்தது. மக்கள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர். இவ்விருது என்னை இன்னும் உழைக்கத் தூண்டியுள்ளது. மக்களை மகிழ்விக்கத் தொடர்ந்து பணியாற்றுவேன்,” என்றார்.
‘மெய்’ நாடகத் தொடரில் நடித்துள்ள ஈஸ்வரி குணசேகர், சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். அவரது சார்பில் அவருடைய சகோதரி ஷாமினி குணசேகர் அவ்விருதைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இதே தொடரில், தீபா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நம்பிக்கை நட்சத்திர விருதுபெற்றார் நவ்யா முத்துக்கிருஷ்ணன், 23.
அடிப்படையில் நடனக் கலைஞரான இவர், கடந்த ஈராண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றுகிறார்.
“இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதே பெருமை. வெல்வேன் என நினைக்கவில்லை. இன்னும் பல வாய்ப்புகளைத் தேடி, அதில் சிறப்பாகச் செயல்பட இது ஊக்குவித்துள்ளது,” என்றார்.
இவ்விழா, குறிப்பாக, இளம் கலைஞர்கள் ஒருவரை ஒருவர் ஊக்குவிக்கவும் தளமாக அமைந்துள்ளது சிறப்பு என்றார்.
இதே தொடரில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகர் விருதைக் கார்த்திகேயன் சோமசுந்தரமும் சிறந்த துணை நடிகை விருதை காயத்ரி சேகரனும் சிறந்த வில்லன் கதாபாத்திரத்துக்கான விருதை உதய சௌந்தரியும் வென்றனர்.
மக்கள் வாக்கெடுப்பில் பிரபலமான நட்சத்திரங்கள்
மிகப் பிரபலமான ஆண் நட்சத்திரம் விருதை குருவும் பெண் நட்சத்திரம் விருதை நிஷா குமாரும் வென்றனர்.
“மக்கள் மனத்தில் இடம்பெற்றதே பிரபலம் என நினைக்கிறேன். எனக்காக மக்கள் நேரம் எடுத்து ஆதரவளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் நிஷா குமார்.
“பிரபலமாக வேண்டும் என எதிர்பார்த்து இத்துறைக்கு வரவில்லை. நண்பர்களுடன் எனது நாள் குறித்து பகிர்வதுபோல சமூக ஊடகங்களின்வழி மக்களிடம் பகிர்கிறேன். மக்கள் என்னைக் கவனிக்கிறார்கள் என்பதை இவ்விருது நினைவுபடுத்துகிறது. என் பணியை இன்னும் சிறப்புறச் செய்ய இது உற்சாகமளிக்கிறது,” என்றார் நிஷா.
“மக்களிடம் பேசிப் பழகுவது என் இயல்பு. அந்த வகையில் பிரபலம் என நினைத்தேன். மக்கள் மத்தியில் பிரபலம் என்பது கூடுதல் மகிழ்ச்சி,” என்றார் குரு.
“பலருக்கும் பிரபலமாக ஆசை இருக்கலாம். தற்போது இணையவழியில் திறமைகளைக் வெளிக்காட்ட பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்துவது முக்கியம்,” என்றார் குரு.
தொடர்ந்து இரண்டாவது முறையாக விருது வென்ற ஸ்டெஃபன் ஸக்காரியா
‘மெய்’ நாடகத் தொடரில் ‘இந்த வாழ்க்கை’ பாடலுக்காக, சிறந்த பாடகருக்கான விருதை ஸ்டெஃபன் ஸக்காரியா வென்றார்.
“சொல்ல வார்த்தைகள் கிடைக்காத அளவு மகிழ்ச்சியில் திளைத்துள்ளேன்,” என்ற அவர், தாம் சந்தித்த சவால்கள், அதேபோன்ற சவால்களைச் சந்திக்கும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வண்ணம் பேசினார்.
“என்னைப் போன்ற கலைஞர்களின் வாழ்வு எளிதானது எனப் பலரும் நினைக்கலாம். இம்மேடையில் நான் பேசியது, சிரமத்திலிருக்கும் சிலருக்கு நம்பிக்கையளித்தாலும் அதுவே மகிழ்ச்சிதான்,” என்றார் அவர்.
“செய்யும் பணியில் எப்போதும் 100 விழுக்காடு சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். அப்படிப் பணியாற்றுவதற்குக் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த விருது. மனநிறைவாக உள்ளது,” என்றார் ஸ்டெஃபன்.
சிறந்த நிகழ்ச்சி ‘எங்க பேட்டை’
சிறந்த நிகழ்ச்சி (தகவல் விளக்கத்தொடர்) பிரிவில், ‘எங்க பேட்டை 2’ நிகழ்ச்சிக்காக ‘தி மீடியா’ வென்றது. அதன் நிர்வாகத் தயாரிப்பாளர் முகமது அலி விருதைப் பெற்றுக்கொண்டார்.
“இது ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்குக் கிடைத்த விருதாக நான் கருதவில்லை. இந்தத் தீவில், இம்மண்ணின் கதைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகக் கிடைத்த விருதாக நினைக்கிறேன்,” என்றார் அவர்.
‘பிரதான விழா ஒரு குடும்ப விழா’
மூத்த, பிரபல நாடக இயக்குநரான மதியழகன், “கலைஞருக்கு அங்கீகாரம் அவசியம். பாராட்டும் கைத்தட்டலும் அவரை ஊக்குவிக்கும். துறையில் நாம் செய்யும் பணி நன்றாக உள்ளதா என்பதை நமக்கே உணர்த்துவது விருதுகள்தான்,” என்றார்.
“பலரை ஒன்றிணைத்து ஊக்குவிக்க இது சிறந்த மேடை. ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு,” என்றனர் மூத்த கலைஞர்களான மோகன், ஜமுனா ராணி இணையர்.
“பிரதான விழா எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் நெருக்கமான விழா. குடும்ப விழா. சிங்கப்பூர்க் கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது போன்றது,” என்றார் மூத்த கலைஞரான கோகிலா.

