முதியோரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் லாேபெஸ் ராயன் ஃபிரான்சிஸ், 38, சக பணியாளருடன் நடந்த பண்பாடு சார்ந்த ஓர் உரையாடல், ஓணத் திருநாளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வித்திட்டது.
மலையாளச் சமூகத்தினரால் போற்றப்படும் ஓணத் திருநாள், வாம்போ துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) விமரிசையாக நடைபெற்றது.
வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கேரள உணவகம் ஒன்றிலிருந்து தருவிக்கப்பட்ட மலையாள உணவு வகைகளை முதியோர் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
“முதியவர்களுக்காக நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளால் கலகலப்பும் கொண்டாட்ட உணர்வும் ஏற்படுகிறது. இது மனநலனுக்கு மிகவும் நல்லது,” என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் ஒருவரான திருவாட்டி பாலசுந்தரம் கமலாம்பாள், 76, தெரிவித்தார்.
ஓணம் பண்டிகை பற்றி இதுவரை கேள்விப்படாத பிற இனத்தவர்கள் பலருக்கு இந்த நிகழ்ச்சி விழிப்பூட்டும் விதத்தில் இருப்பதாக திரு ராயன் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகை அளவுக்கு ஓணம் பிரபலமாக இல்லை. ஒணம் என்றால் என்ன, ஓணம் எப்படி கொண்டாடப்படுகிறது போன்ற தகவல்களை உரையாடல் வாயிலாக எங்கள் நிலையத்தினர் வருகையாளர்களிடம் தெரிவித்தனர்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரின் பன்முகத்தன்மையின் செழிப்பை இதுபோன்ற நிகழ்ச்சிகளின் வழி உணர்வதாக திரு ராயன் கூறினார்.