தலைமுடி உதிர்வது இயல்பானதுதான். ஆனால், அது ஒருவரின் தன்னம்பிக்கையையும் சொந்த அடையாளத்தையும் பாதிக்கத் தொடங்கினால் என்ன செய்வது?
வழுக்கையை மையமாகக் கொண்டு, ஆண்மை குறித்த சமூக எதிர்பார்ப்புகள், குடும்ப உறவுகள், தலைமுறைகளாகக் கடத்தப்படும் மனப்பழக்கங்கள் ஆகியவற்றை நகைச்சுவையாக ஆராய்கிறது அகம் நாடகக் குழுவின் ‘மேல் பேட்டர்ன்’ (Male Pattern) நாடகம்.
சையத் அஷ்ரத்துல்லாவின் செறிவான எழுத்தாக்கமும் பொன்குமரன் செல்வனின் செம்மையான இயக்கமும் இணைந்து, சுவாரசியமான நாடக அனுபவத்தைத் தருகின்றன. குழுவின் புதிய அரங்கமான ‘தி தியேட்டர் லேப்’ல் நாடகம் மேடையேறுகிறது.
வழுக்கைக்கு அப்பால்
உயர்நிலைப்பள்ளிக் கணித ஆசிரியரான கோவன் (யுகேஷ் கண்ணன்), இளமைக்கும் நடுத்தர வயதுக்கும் இடைப்பட்ட காலம் எப்போது கடந்தது என்றே தெரியாமல் வாழ்ந்துவிட்டதாக உணர்கிறார். அவருக்கு வழுக்கை ஏற்படத் தொடங்கியதும், அது தோற்றம் சார்ந்த கவலையைக் கடந்து, அவரது தன்னம்பிக்கையையும் திருமண வாழ்க்கையையும் பாதிக்கிறது.
தந்தை மறைவதற்கு முன், “அப்பா மாதிரி ஆகிடாதே” என்று கோவனிடம் கூறிய வார்த்தைகள் அவரது மனத்தில் மீண்டும் மீண்டும் எழுகின்றன.
தாத்தாவிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் தமக்குக் கடத்தப்பட்டது வழுக்கை மட்டுமன்று, உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனத்துக்குள் பூட்டிவைக்கும் பழக்கமும்தான் என்பதை அவர் மெல்ல உணர்கிறார். அந்த மௌனத்தின் தொடர்ச்சியை முறியடித்து, தனது சொந்த அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியே அவரது அகப் போராட்டமாகிறது.
நகைச்சுவைக்கு நடுவே வெளிப்படும் உணர்வுகள்
கோவனின் தோற்றம் குறித்த சங்கடம், உறவுகளுக்கு இடையே நிலவும் குழப்பம் எனப் பல்வேறு உணர்வுகளையும் முரண்பாடுகளையும் யுகேஷ் கண்ணன் தமது நடிப்பில் இயல்பாக வெளிப்படுத்துகிறார். அவ்வப்போது பார்வையாளர்களை நேரடியாக நோக்கித் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் உத்தியும், அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்தின் முரண்பாடுகளை நுட்பமாக வெளிப்படுத்துகின்றன.
மற்ற நடிகர்களும் காட்சிகளுக்கிடையே வெவ்வேறு கதாபாத்திரங்களாக விரைவாக உருமாறுவது நாடகத்தின் விறுவிறுப்புக்குக் கைகொடுக்கிறது.
கோவனின் நண்பன் ஜோஜோவாக வரும் கிருஷ்ணா கணபதி, ஆண்மை குறித்த மேலோட்டமான பிம்பங்களை நகைச்சுவையுடன் சித்திரிப்பதுடன், அவற்றுக்குப் பின்னால் மறைந்துள்ள உண்மையான உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
தலைமுடி நிபுணர் டாக்டர் கேசவனாக நடிக்கும் ரகுவரன் நாயுடுவின் உடல்மொழியும் வசன வெளிப்பாடும் சிரிப்பை வரவழைத்து, கதையின் தீவிரத்துக்கு இடையே இளைப்பாறலை அளிக்கின்றன.
உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்கும் தந்தையின் இயல்பை ஷஃபீ படா ஜபாரி நுட்பமாகச் சித்திரிக்கிறார். தமிழாசிரியராக அவர் இடம்பெறும் காட்சிகள், மொழிக் கற்றல், சிங்கப்பூரின் நாடகச் சூழல் குறித்த பார்வையை நகைச்சுவையுடன் இணைக்கின்றன.
குடும்ப உறவுகளில் தேங்கியிருக்கும் உணர்வுகளுக்கு கோவனின் மனைவி நிறைமதியின் கதாபாத்திரம் வழியாக இடமளிக்கப்படுகிறது. கோமதி ரவிந்திரனின் நடிப்பில், கோவனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையிலான சொல்லப்படாத உணர்வுகள் வெளிப்படுகின்றன. குறிப்பாக, ஒரு காட்சியில் கித்தார் வாசித்தபடி அவர் பேசும் காதல் வரிகள், கதையோட்டத்துக்கு மாறுபட்ட உணர்வுநிலையைக் கொண்டுவருகிறது.
இதற்கிடையே, கணவரின் மறைவுக்குப் பிறகு சமூக ஊடகத் தொழில்முனைவோராகும் கனவைத் தொடரும் கோவனின் தாயாக இந்து இளங்கோவன் நகைச்சுவையுடன் சிறப்பாக நடிக்கிறார். பிறரின் விமர்சனங்களையும் சமூக எதிர்பார்ப்புகளையும் கடந்து அவர் தனது இலக்கை நோக்கி முன்னேறுவது, பெண்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான முரண்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
அதேவேளை, மருமகளுடன் மனந்திறந்து பேசும் தருணங்களில், குடும்ப உறவுகளில் புரிதலுக்கும் அக்கறைக்கும் உள்ள இடத்தை அவர் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு, தலைமுறை வேறுபாடுகளை மோதலாக மட்டும் சித்திரிக்காமல், உரையாடலின் வழியாக அவற்றைக் கடக்க முடியுமா என்றும் நாடகம் ஆராய்கிறது.
மேடையில் விறுவிறுப்பு
காட்சிகள் தொய்வின்றி மாறுவதும் நடிகர்கள் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையே விரைவாக மாறுவதும் கதையோட்டத்தின் வேகத்தைத் தக்கவைக்கின்றன. ஒளி, இசை, ஒலி ஆகியவை காட்சிகளின் மனநிலைக்கேற்ப மாறுவதுடன், இசையும் நடனமும் கதையோட்டத்தில் இயல்பாக இடம்பெறுகின்றன.
காட்சிகளுக்கு இடையே தேவையற்ற இடைவெளிகள் இல்லாமல், மேடையில் எப்போதும் ஏதோ ஒன்று நிகழ்ந்துகொண்டிருப்பது பார்வையாளர்களின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்க்கிறது.
வசனங்களுடன் ஒத்திசைவாக ஓடும் ஆங்கில உரைவரிகளும் குறிப்பிடத்தக்கவை. அவை தமிழ் தெரியாத பார்வையாளர்களும் கதையைப் பின்தொடர உதவுகின்றன. இருப்பினும், தமிழில் சொல்லப்படும் சில வசனங்களின் சொல் விளையாட்டையும் நகைச்சுவைத் தாக்கத்தையும் வேறு மொழியில் முழுமையாகக் கொண்டுசெல்வது கடினம். இது மொழிபெயர்ப்பில் தவிர்க்க முடியாத வரம்பாக இருந்தாலும், உரைவரிகளின் துல்லியமும் ஒத்திசைவும் நாடகத்தைப் பரந்த பார்வையாளர் வட்டத்துக்குக் கொண்டுசெல்கின்றன.
மௌனத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நாடகம்
சில காட்சிகளில் கற்பனை உத்திகளும் நகைச்சுவையும் சற்று மிகுதியாகத் தோன்றினாலும், நாடகத்தின் மையக் கருத்து தெளிவாக வெளிப்படுகிறது.
தலைமுடி உதிர்வதை மையமாகக் கொண்டு, ஆண்கள் தங்கள் பலவீனங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் உள்ள தயக்கத்தை ‘மேல் பேட்டர்ன்’ கேள்விக்குள்ளாக்குகிறது.
சிரிப்பையும் சிந்தனையையும் இயல்பாக ஒன்றிணைக்கும் இந்நாடகம், வழக்கமான மேடை அனுபவத்தைத் தாண்டி ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. சிங்கப்பூர் தமிழ் நாடகச் சூழலில் இந்த ஆண்டு தவறவிடக்கூடாத நாடகங்களில் ஒன்றாக இது அமைகிறது.
அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரை ‘அகம் தியேட்டர் லேப்’ல் மேடையேறும் ‘மேல் பேட்டர்ன்’ நாடகத்திற்கான நுழைவுச்சீட்டுகளை sistic.com.sg/events/lite_malepattern26 என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
