மணிமாலா மதியழகனின் புதினம்; நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு

மணிமாலா மதியழகனின் புதினம்; நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு

மாதிரிப்படம்: பிக்சாபே

25 Apr 2026 - 8:00 am

2 mins read

தேசியக் கலை மன்றம், தேசிய நூலக வாரியம் ஆகியவற்றின் ‘எழுத்தாளர்கள் ஆய்வகம்’ திட்டத்திற்காக எழுத்தாளர் மணிமாலா மதியழகன் ஒரு புதினத்தைப் படைத்து வருகிறார்.

1978ஆம் ஆண்டு, அக்டோபர் 12ஆம் தேதி, சிங்கப்பூரின் ஜூரோங் கப்பல் தளத்தை உலுக்கிய ‘ஸ்பைரோஸ்’ (Spyros) கப்பல் வெடிப்புச் சம்பவம், நாட்டின் தொழில் வளர்ச்சி வரலாற்றில் ஆறாத வடுவாகும்.

அந்தப் பேரிடரை மையமாகக்கொண்டு எழுதப்படும் அப்புதினம், விபத்தின் தீப்பிழம்புகளுக்குள் சிக்கிச் சிதைந்த சாமானிய மனிதர்களின் போராட்ட வாழ்வை விவரிக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரில் நிலவிய உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வியல் சூழலையும் அவ்விபத்தின் காரணமாய் அவர்களின் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஏற்பட்ட ஆறாத வடுக்களையும் அது எடுத்துக்காட்டுகிறது. மேலும், அத்தகைய பேரிடருக்குப் பின்னால் இருக்கும் மனித உணர்வுகளையும் நவீன சிங்கப்பூரின் பொருளாதாரப் பிரம்மாண்டத்திற்குப் பின்னால் சிதறிய வியர்வையையும் ரத்தத்தையும் அப்புதினம் பதிவு செய்யவுள்ளது.

கடந்தகாலத்தின் வலிகளைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல், அந்தத் தியாகங்களின் அடித்தளத்தில் எழுந்து நிற்கும் இன்றைய நவீன சிங்கப்பூரின் வளர்ச்சியையும் அப்புதினம் இணைத்துப் பார்க்கிறது.

ஆவணத் தரவுகளின் அடிப்படையில் எழுதப்படவுள்ள அக்கதை, உயிர் பிழைத்தவர்களின் மனவலிமையையும் காலத்தை வென்ற மனித மாண்பையும் பறைசாற்ற உள்ளது.

அந்தப் படைப்பிற்காக, அவ்விபத்து குறித்த கூடுதல் தகவல்களைப் பகிரவும் கலந்துரையாடவும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சி, மே 3ஆம் தேதி, ஞாயிறு மாலை 6 மணிக்குத் தேசிய நூலகத்தின் 5வது தளத்திலுள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவுள்ளது.

76 உயிர்களைப் பலிகொண்டு, பலரைப் படுகாயப்படுத்திய பெருவிபத்து குறித்த நேரடி அனுபவங்கள் அல்லது வேறு விவரங்கள் தெரிந்தவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர். அத்தகவல்கள் சிங்கப்பூரின் இந்த வரலாற்றுச் சுவட்டை ஆவணப்படுத்தப் பெரிதும் உதவும்.

அந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள இயலவில்லை எனில், விபத்து குறித்த விவரங்களை மணிமாலா மதியழகனிடம் 8725 8701 என்ற கைப்பேசி எண்ணின் வழி பகிரலாம்.

சிங்கப்பூர் வரலாற்றின் முக்கியத் தடத்தை வருங்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் இம்முயற்சியில் அப்பேரிடர் குறித்த விவரம் தெரிந்தவர்கள் கைகொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்