தம்வழி வந்த ஓர் உயிருக்குத் தாமே பொறுப்பு என்பதை ஆழமாக நம்புபவர் சிறப்புத் தேவைகளுடைய மகனை வளர்த்து ஆளாக்கியுள்ள திருவாட்டி கார்த்தியாயினி, 56.
தொழில்நுட்பத் துறை ஊழியரான திரு பாபுராஜனை மணமுடித்து, கருவுற்றபோது அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தார் அவர். ஆனால், மகன் சந்ருவுக்கு உடலியக்கக் குறைபாடு இருந்தது அந்தத் தாயாருக்கு பெரும் இடியாக விழுந்தது.
சந்ருவுக்குப் பெருமூளை வாதம் இருப்பது சிறுவயதிலேயே கண்டறியப்பட்டதால், இயற்பியல் துறையில் தங்கப் பதக்கம் பெற்றிருந்தும் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் மகனைக் கவனிப்பதையே வாடிக்கையாக்கிக் கொண்டார் கார்த்தியாயினி.
முதலில் சிறு சிறு சிரமங்கள் இருந்தாலும் மற்ற பிள்ளைகளைப் போலவே ஓடியாடி விளையாடினார் சந்துரு. நாளடைவில் செவித் திறன், கற்கும் திறன் உள்ளிட்டவை சற்றே குறையத் தொடங்கின.
செம்பவாங் தொடக்கப்பள்ளியில் பயின்ற அவருக்கு, ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தது வரம் என்றார் கார்த்தியாயினி.
அவர்களது ஆதரவுடன் பின்னர் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார் சந்ரு.
“கேட்பதற்கு எளிதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் பெரும் சவால்களுக்கிடையே சந்ருவுக்குக் கல்விப்பயணம் என்ற ஒன்று சாத்தியமானது,” என்றார் தாயார்.
“எதனையும் உடனே புரிந்துகொள்ளும் திறன் இல்லாததால், எல்லாவற்றுக்கும் தொடர்ந்து ‘ஏன்’ ‘ஏன்’ எனக் கேட்டுக்கொண்டே இருப்பார்,” என்று குறிப்பிட்ட அவர், “ஒற்றைப்படை இரட்டைப்படை எண்கள் சொல்லிக்கொடுக்கவே எனக்கு நாள்கள் ஆகின. ஆனால் நான் மனந்தளரவில்லை,” என்றார்.
“முதலில் அவரைக் கையாள்வதில் உள்ள சிரமம் எனக்கு அழுத்தத்தைத் தந்தது. ஆனால், 10 வயதானாலும் என் மகன் ஒன்றாம் வகுப்பைக்கூட தாண்டமாட்டான் என்று சொன்னவர்களுக்கு அவரது கல்வித்திறன் மூலம் பதிலளிக்க வேண்டும் என்ற வெறியே எனக்கு உந்துசக்தியாக அமைந்தது,” என்றார்.
“கல்வியோடு அன்றாடச் செயல்பாடுகள், உணர்வுகள், பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் அவருக்குப் படிப்படியாகக் கற்பிக்க வேண்டும். அவரால் பிறருக்கு சிரமம் ஏற்படாத வகையில் அவரை ஆளாக்க வேண்டும் என விரும்பினேன். அது நடந்துள்ளது,” என்றும் சொன்னார் கார்த்தியாயினி.
“மொழி மாறி மாறிப் பேசுவது அவருக்குப் புரியாது. ஏளனமும் செய்யப்பட்டார். ஆனால் என் மகன் ஆறே மாதங்களில் தமிழ் கற்றார்; ஆங்கிலம் பேசுவார்; பேருந்து செல்லும் வழிகள் அவருக்குத் தெரியும்; நாட்டு நடப்புகளைச் செய்திகளில் படிப்பார்; பேசுவார். இவற்றை எல்லாம் பார்க்கும்போது பூரிப்பாக இருக்கும்,” என்றார் தாயார்.
உடற்குறையுள்ளோருக்கான சங்கத்தில் சேர்ந்து கணினிப் பயிற்சியுடன் தசை, மூளைச் செயல்பாடுகளுக்கான பயிற்சிகளான தையல், பிற கைவினைக் கலைகளையும் கற்று வரும் சந்ரு, தமக்குக் கிடைத்திருக்கும் வரமே என்றார் கார்த்தியாயினி.
“எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும் என நான் அழுதிருக்கிறேன்,” என்று சொன்ன அவர், “ஆனால், ஒரு சிரமத்தைக் கொடுத்த கடவுள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழியையும் காட்டுவார் என நம்பினேன்; நம்புகிறேன்,” என்றார்.
விழிப்புணர்வுக்கான கண்காட்சி
உடற்குறையுள்ளோருக்கான சங்கத்தில் இணைந்து பயிற்சிபெறுவோரில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களது கதைகளை உலகுக்குச் சொல்லும் புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளதாகக் கூறினார் அச்சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிமன்யு பால்.
இக்கண்காட்சியில் சந்ரு உள்பட எட்டு குடும்பங்களின் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன. உடற்குறையுள்ளோரின் வாழ்வியல், அவர்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு, தியாகம், அவர்களுக்குச் சமூகம் தர வேண்டிய அரவணைப்பு உள்ளிட்ட பலவற்றைப் பேசும் ஏறத்தாழ 80 புகைப்படங்கள் கொண்ட இக்கண்காட்சி, சிலிகி கலைகள் மையத்தின் பிரின்செப் காட்சிக்கூடத்தில் செப்டம்பர் 14 முதல் 22ஆம் நாள் வரை நடைபெறும்.
சிங்கப்பூர் புகைப்படச் சங்கமும் இணைந்து நடத்தும் இக்கண்காட்சியில், பிரபல புகைப்படக் கலைஞர் டெரிக் ஓங்கின் வழிகாட்டுதலின்கீழ் 12 புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற உள்ளன.

