சிங்கப்பூரிலுள்ள ஒரு கோயிலில் குடமுழுக்கு என்றால் வெவ்வேறு கோயில்களைச் சேர்ந்த தொண்டூழியக் குழுவினரும் கைகோத்து திருப்பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
காமன்வெல்த் டிரைவ் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற குடமுழுக்கிற்குப் பிறகு, அன்னதானப் பந்தல்களில் குறைந்தது 7,000 பேருக்கு உணவு பரிமாறச் சுமார் 400 தொண்டூழியர்களின் கைகள் இணைந்தன. சமையலும் அதற்கான தயாரிப்புப் பணிகளும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் நடைபெற்றன.
ஏறத்தாழ 14.6 மீட்டர் கோபுரத்தின் உச்சியிலுள்ள கலசங்களின்மீது நன்னீரைக் காலை 7.15 மணிக்கு ஊற்றியதை உளமாரக் கண்ட பக்தர்கள், ஆலயத்திற்கு அருகிலுள்ள உணவுப் பந்தலில் வயிறாரச் சாப்பிட்டனர்.
சாம்பார், மோர், ரசம், பருப்புப் பாயசம், அப்பளம், வடை, பரங்கிக்காய், புடலங்காய், காலிஃப்ளவர் கலந்த உருளைக்கிழங்கு, பழங்கள், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் ஆகியவற்றைக் கொண்ட முழுச்சாப்பாடு பக்தர்களுக்குப் பரிமாறப்பட்டது.
“ஆலய குடமுழுக்கிற்கோ அதற்கு ஒப்பான புரட்டாசி சனிக்கிழமை போன்ற பெருநிகழ்ச்சிகளுக்கோ திரளும் பக்தர்களுக்கு முழுச்சாப்பாடு தயாரிக்கப்படும். இந்தக் கடப்பாட்டை நாங்கள் எக்காரணத்திற்காகவும் தளர்த்தப்போவதில்லை,” என்று உணவு ஏற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ரமேஷ் அப்பு, 61, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
ஸ்ரீ முனீஸ்வரனின் அன்னதானப் பந்தலுக்கான ஏற்பாட்டினைச் சுமார் 50 தொண்டூழியர்கள் வியாழக்கிழமையன்று தயார் செய்தனர்.
வெள்ளிக்கிழமை காலை வேளையிலேயே 25 கிலோ எடை கொண்ட நாற்பது பொன்னி அரிசி மூட்டைகள் தருவிக்கப்பட்டன. மேலும், 650 கிலோ உருளைக்கிழங்கு, 150 கிலோ வெண்பூசணிக்காய், 450 கிலோ புடலங்காய், 650 கிலோ பூசணிக்காய், 50 கிலோ காளிஃப்ளவர், 50 கிலோ குடைமிளகாய், 50 கிலோ அவரைக்காய், ஐந்து கிலோ இஞ்சி, ஐந்து கிலோ மிளகாய், 150 கிலோ தக்காளி, 140 கிலோ சிவப்பு முள்ளங்கி, 50 கிலோ கத்திரிக்காய் ஆகியவையும் இறக்கப்பட்டன.
பெருமாள் கோயிலின் சமையற்கட்டுக்கு அருகிலுள்ள மண்டபத்தில் குறைந்தது 70 தொண்டூழியர்கள் காய்கறிகளை நறுக்கும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 முதல் 4.30 மணி வரை காய்கறிகள் கழுவப்பட்டு, பின் வெட்டப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
காய்கறிகளை எந்த அளவுக்கு நறுக்கவேண்டும் என்பதைக் கோயில் மடப்பள்ளியின் தலைமைச் சமையற்காரர் நரசிம்மன் மணவாளன் காண்பிக்க, அனைவரும் அதனைப் பின்பற்றிச் செய்தனர்.
“உதவி தேவைப்படும்போது தொண்டூழியர்கள் இவ்வாறு ஒன்றுகூடி செயலாற்றுவது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இந்தத் தொண்டை ஆற்ற இளையர்கள் பலரும் வாரயிறுதிகளில் முன்வருகின்றனர். இருந்தபோதும் இன்னும் கூடுதலான இளையர்கள் முன்வர வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பின்கட்டுச் சமையல் அறையில் திருவமுது சமைக்கும் பணிகள் வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் அதிகாலை சுமார் 3.30 மணி வரை நடைபெற்றன.
குறுகலான இடத்தில் நீராவி சூழ்ந்திருக்க, அடுப்பு அனலின் தகிக்கும் வெப்பத்தில் தலைமைச் சமையற்காரர் நரசிம்மன் மணவாளனும் சமையல் உதவியாளர்கள் இருவரும், சமையலுக்கெனத் திரண்ட 40 தொண்டூழியர்களை வழிநடத்தினர்.
38 முதல் 52 அங்குலம் வரையிலான விட்டமுள்ள ஏறத்தாழ 20 பானைகளில் சோறும் மற்ற உணவுப்பொருள்களும் சமைக்கப்பட்டன.
“பரபரப்பும் அபாயங்களும் கொண்டுள்ள சூழலாக சமையலிடம் இருந்தாலும் இறைவனின் அருளால் அனைவரும் மனநிறைவுடன் வேலைகளில் ஈடுபட்டனர்,” என்று சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் மடப்பள்ளியில் பணியாற்றிய அனுபவம் கொண்ட திரு மணவாளன் கூறினார்.
சமையல் முடிந்த பின்னர் லாரிகள், உணவு நிறைந்த அந்தப் பானைகளை ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயக் குடமுழுக்கு நடைபெறும் அன்னதானக் கூடாரத்திற்குக் கொண்டு சென்றன.
கூடாரத்தில் சுமார் 5.30 மணி அளவில் நடைபெற்ற மாகேஸ்வர பூஐையில் இறைவனுக்குப் படைக்கப்பட்ட உணவு திருவமுதானது.
கோயிலிலிருந்து அருகிலுள்ள புல்வெளியில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் வரை அமர்ந்து சாப்பிடுவதற்கான வசதிகள் செய்து தரப்பட்டதாக அன்னதானத்திற்கான மற்றோர் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ பெத்தையா, 56, கூறினார்.
“வாரநாள் என்பதால் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. நீண்டநேர காத்திருப்பின்றி பக்தர்கள் நிதானமாக அமர்ந்து சாப்பிட முடிந்தது,” என்று அவர் கூறினார்.
கூடாரத்தில் பொதுமக்கள் வரிசையும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. 15 தொண்டூழியக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தங்களை இரண்டு பிரிவுகளாக வகுத்துக்கொண்டு, உணவுக்காக அமர்ந்தோர்க்கு இன்முகத்துடன் பரிமாறினர்.