மார் தோமா கிரிக்கெட் கிண்ணப் போட்டியில் பல்வேறு தேவாலயங்களைச் சேர்ந்த திருச்சபையினர், வெளிநாட்டு ஊழியர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் முதலியோர் பங்கேற்றனர்.
சிலோன் விளையாட்டு மன்றத்தில், இம்மாதம் (மார்ச்) 21ஆம் தேதி நடைபெற்ற போட்டி, விளையாட்டுடன் சமூக ஒற்றுமையையும் கொண்டாடியது.
சிங்கப்பூரிலுள்ள மார் தாமஸ் சிரியன் தேவாலயத்தின் 90ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாகப் போட்டி நடைபெற்றது. அதில் 6 அணிகள், 6 ஓவர்கள் கொண்ட போட்டியிலும் 8 ஓவர்கள் கொண்ட போட்டியிலும் பங்கேற்றன.
போட்டித்தன்மைக்கு அப்பால் ஆழமான நட்பையும் தோழமையையும் பறைசாற்றியது விளையாட்டு.
போட்டியில் பங்கேற்ற குழுக்கள் இங்குள்ள பல்வேறு தேவாலயங்களைப் பிரதிநிதித்தன. இலங்கை வொர்ஷிப்பர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்திலிருந்து பெண்கள் அணியும் போட்டியில் கலந்துகொண்டது.
மார் தோமா அணி இறுதிச்சுற்றில், தெலுங்கு மெத்தடிஸ்ட் தேவாலய அணியுடன் போட்டியிட்டு வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.
முடிவுகளைக் கடந்து, வலுவான சமூக நெறிகளை வெளிப்படுத்தியது போட்டி.
தேவாலய உறுப்பினர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் போட்டியில் பங்கேற்றனர்; விளையாட்டின் மூலம் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்ற ஏற்பாட்டாளர்களின் தொலைநோக்குப் பார்வையை அது பிரதிபலித்தது. பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் தேவாலயத்தின் சார்பாக அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
போட்டியை முதன்முதலில் 1998ல் சமூகத் தலைவர் ஷாஜி பிலிப் தொடங்கிவைத்தார். காலப்போக்கில், 2007ஆம் ஆண்டு அது செங்காங் கிரிக்கெட் லீக் என அழைக்கப்பட்டது. இன்று சமூக கிரிக்கெட் லீக் என அழைக்கப்படும் இதில் நூற்றுக்கும் மேலான அணிகள் பங்கெடுத்தன. அவற்றில் வெளிநாட்டு ஊழியர்களையும் உள்ளடக்கிய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சியா கியான் பெங், “பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, புரிந்துணர்வையும் மரியாதையையும் அவர்களுக்கிடையில் விதைக்கிறது போட்டி,’ என்று குறிப்பிட்டார்.
பரிசுகளை வழங்கிய, சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் செனரத் திசநாயக்க ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார்.
“இங்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி, சமூகங்கள், கலாசாரங்கள், வாழ்வியல் அனுபவங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு பாலமாகத் திகழ்கிறது,” என்றார் அவர்.
சிலோன் விளையாட்டு மன்றம், புரூவிங் கிரிக்கெட் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் போட்டி சீராக வளர்ந்துவருகிறது.
சென்ற ஆண்டு (2025) SG60 கொண்டாட்டங்களின்போது நான்கு அணிகள் மட்டுமே பங்கேற்ற போட்டியில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை இரட்டிப்பானது.

