சிங்கப்பூரின் தொலைக்காட்சி, பொழுதுபோக்குத் துறையில் திரைக்குப் பின்னால் பணியாற்றும் படைப்பாளர்கள், கலைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு மீடியாகார்ப் திரை விருதுகள் (Mediacorp screen awards) வழங்கப்பட்டன.
இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஆய்வு, எழுத்து எனத் திரைக்குப் பின்னால் பணியாற்றுபவர்களின் பங்களிப்பை அந்த விருது நிகழ்ச்சி முன்னிறுத்தியது. சீனம், மலாய், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி தயாரிப்புக் குழுக்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாகவும் அது அமைந்தது.
இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற மீடியாகார்ப் திரை விருதுகள் நிகழ்ச்சி அக்டோபர் 2ஆம் தேதி மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.
சிறந்த இயக்குநர்
‘அமர்க்கள தீபாவளி 2025’ நிகழ்ச்சியை இயக்கிய மாலதி மாதவனுக்கு பொழுதுபோக்குப் பிரிவில் சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது.
“ஒரு இயக்குநர் கப்பலின் கேப்டன் போன்றவர். நிகழ்ச்சியை இயக்கும்போது பல படக்கருவிகள், திரைகள், பாடகர்கள் எனப் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக திரைக்குப் பின்னால் ஏராளமான பணிகள் நடைபெறுகின்றன. அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றை வழங்குவதற்காக நிறைய உழைக்க வேண்டியுள்ளது,” என்றார் மாலதி.
‘அங்கிள் டாக்சி’க்கு இரு விருதுகள்
ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்ட ‘அங்கிள் டாக்சி’ தொடரின் ஐந்தாம் பாகத்தில் பணியாற்றிய ஷாருல் கானுக்கு பொழுதுபோக்குப் பிரிவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்தது. அதே தொடருக்காக கார்த்திகேயன் சோமசுந்தரத்துக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியர்க்கான விருது கிடைத்தது.
13 வயதில் ‘வசந்தம்’ குறும்படப் போட்டியில் தமது முதல் விருதைப் பெற்ற ஷாருல், சொந்தமாகப் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தனது பயணத்தைத் தொடங்கினார்.
“ஒளிப்பதிவு என்பது படக்கருவியைக் கொண்டு படம்பிடிப்பது மட்டுமன்று. அதனுடன் விளக்குகள், இயக்கம் போன்ற பல்வேறு கூறுகளைப் பயன்படுத்தி ஒரு கதையைச் சொல்வது. புதிய கோணங்களை முயற்சி செய்து, புதிய முறையில் கதைசொல்ல நான் விரும்புகிறேன்,” என்றார் அவர்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு 'அங்கிள் டாக்சி’யின் புதிய பாகம் உருவாக்கப்பட்ட நிலையில், தகவலையும் பொழுதுபோக்கையும் இணைக்கும் வகையில் நிகழ்ச்சியை உருவாக்கியதாக 42 வயது கார்த்திகேயன் கூறினார்.
“‘அங்கிள் டாக்சி’ ஒரு தகவல் சார்ந்த நிகழ்ச்சி. அதே நேரத்தில் மக்களை மகிழ்விக்கவும் வேண்டும். புதிய இடங்களுக்குச் செல்லும்போது நமக்குத் தெரியாத பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அவற்றை நகைச்சுவையான முறையில் சொல்ல முயன்றோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புதிய பாகம் வந்துள்ளதால், இன்றைய பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப அதை எப்படிக் கொண்டுசெல்வது என்பது குறித்தும் நிறைய சிந்தித்தோம்.
“பயணம் செய்வதற்குச் சரியான நேரத்துக்காகக் நாம் காத்திருக்கக்கூடாது. செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் பயணத்தைத் தொடங்க வேண்டும். மற்ற வழிகளில் கற்றுக்கொள்ள முடியாத பல பாடங்களை பயணத்தின்மூலம் கற்றுக்கொள்ளலாம்,” என்றார் கார்த்திகேயன்.
‘எங்க பேட்டை’க்கு இரு விருதுகள்
‘எங்க பேட்டை’ நிகழ்ச்சிக்காக முகம்மது அலிக்கு தகவல் நிகழ்ச்சிப் பிரிவில் சிறந்த இயக்குநர் விருதும் சிறந்த ஆய்வு, எழுத்துக்கான விருதும் கிடைத்தன.
“மக்களுக்கு எது முக்கியமோ அதைச் சொல்வதுதான் தகவல் நிகழ்ச்சிகளின் அடிப்படைக் கடப்பாடு. நமக்கு முன்பிருந்த தலைமுறையினர் எப்படி வாழ்ந்தனர் என்பதைத் தெரிந்துகொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் உள்ளது. அந்த ஆர்வம்தான் இந்த வெற்றிக்கு அடிப்படைக் காரணம் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் முகம்மது அலி.
‘ஆ!’ திரைக்கதைக்கு விருது
‘ஆ!’ தொடருக்காக ரஷிதா பேகம், அவரது கணவர் யாசிர் எம், கே.ராஜகோபால், சூர்ய ரத்னா ஆகியோர் சிறந்த நாடகத் திரைக்கதைக்கான விருதைப் பெற்றனர்.
அத்தொடருக்காக யாசிர் எம்., கே.ராஜகோபால் இருவர்க்கும் நாடகப் பிரிவில் சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.
திகில் படங்களைப் பார்ப்பதில் தமக்கு ஆர்வம் இருப்பதாகக் கூறிய ரஷிதா, கதைக்கு உள்ளூர்ப் பின்னணியைச் சேர்க்க விரும்பியதாகத் தெரிவித்தார்.
“பார்வையாளர்களை அச்சுறுத்துவதுடன் நின்றுவிடாமல், கதையில் இடம்பெறும் பண்பாட்டுப் பின்னணியுடனும் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பினோம். புத்தகத்தில் இடம்பெற்ற கதையைத் தொலைக்காட்சித் தொடருக்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டியிருந்தது. அதே நேரத்தில் கதையை அதிகம் மாற்றாமல், பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்க்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினோம்,” என்றார்.
‘ஆ!’ தொடருக்கான மூலக் கதையை முதலில் புத்தகமாக எழுதிய சூர்ய ரத்னா, சிறு வயதிலிருந்தே பேய்க் கதைகளில் தமக்கு ஆர்வம் இருந்ததாகக் கூறினார்.
“தமிழில் அமானுஷ்யக் கதைகள் அதிகம் இல்லை. சிறுவயதிலிருந்தே பேய்க்கதைகளில் எனக்கு ஆர்வம் இருந்தது. நம்மில் பலரும் சிறுவயதிலிருந்தே இத்தகைய கதைகளைக் கேட்டும் படித்தும் வளர்ந்தவர்கள். அதனால், அவற்றைச் சிங்கப்பூர்ப் பின்னணியில் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன்,” என்றார்.
‘இருள்’ நிகழ்ச்சிக்குச் சிறந்த படத்தொகுப்புக்கான (பொழுதுபோக்கு) விருதை ஷிரீன் ஹலிமா வென்றார். நவீன் செல்வநாயகம் ‘திகில் டேல்ஸ் மூன்றாம் பாகம்’ நிகழ்ச்சிக்குச் சிறந்த படத்தொகுப்புக்கான (தகவல்) விருதையும் ‘பிங்கி பிராமிஸ் தோழி’ நாடகத்திற்குச் சிறந்த படத்தொகுப்புக்கான (நாடகம்) விருதையும் வென்றார். சிறந்த ஒளிப்பதிவுக்கான (நாடகம்) விருது ‘ஆ!’ நாடகத்திற்காக முகம்மது ஷாரிலுக்கு வழங்கப்பட்டது.
