மெலனோமா எனப்படும் கடுமையான தோல் புற்றுநோய்க்குத் தீர்வு கண்டுபிடித்திருப்பதாக ‘மெர்க்’, ‘மொடெர்னா’ நிறுவனங்கள் அண்மையில் தெரிவித்திருந்தன.
அந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரிடம் ‘எம்ஆர்என்ஏ’ தடுப்பூசியைச் சோதித்ததில் அது மீண்டும் பாதிக்கும் அல்லது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவும் அபாயம் குறைந்தது கண்டறியப்பட்டது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குமேல், அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு சிகிச்சைமுறைகள் அந்தப் புற்றுநோய்க்கான சிகிச்சையை மாற்றியமைத்தது மட்டுமன்றி, நோயாளிகளின் ஆயுளை நீட்டித்து, மேம்பட்ட வாழ்க்கையை வாழ உதவியுள்ளன.
மெலனோமா புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை எளிய வழிமுறைகள்மூலம் குறைக்கலாம் என்று கூறும் வல்லுநர்கள், அதனைத் தொடக்கத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த வாய்ப்புண்டு என்கின்றனர்.
மெலனோமா என்றால் என்ன?
தோல் புற்றுநோயின் மிகக் கொடிய வடிவங்களில் ஒன்றாக மெலனோமா கருதப்படுகிறது. தோலுக்கு நிறம் தரும் மெலனோசைட்டுகள் என்னும் உயிரணுக்களில் தொடங்கும் அது, மற்ற சாதாரண தோல் புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில், உடலின் பிற பாகங்களுக்கும் மிக விரைவாகப் பரவக்கூடிய அபாயத்தைக் கொண்டது.
“உண்மையிலேயே, இது மிகவும் தீவிரமான தன்மையையும் உயிரியல் செயல்பாட்டையும் கொண்ட ஒரு நோய்,” என்று அமெரிக்காவின் டெக்சஸ் பல்கலைக்கழகத்தின் மெலனோமா புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் மைக்கேல் டேவிஸ் குறிப்பிடுகிறார்.
பொதுவாகத் தலைப்பகுதி, முகம், கைகள், முதுகு, கால்கள் எனச் சூரிய ஒளி படும் இடங்களில் மெலனோமா புற்றுநோய் ஏற்படும். மிக அரிதாகக் கண்களிலும் மூக்கு, தொண்டை போன்றவற்றின் உட்புறங்களிலும் அது ஏற்படக்கூடும்.
உலகெங்கும் நோயாளிகளைப் பாதிக்கும் பல்வேறு புற்றுநோய்களில் மெலனோமா இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவுதான். சிங்கப்பூரில் மெலனோமா மிகவும் அரிது என்றும் இங்குக் கண்டறியப்படும் புற்று நோய்களில் அதன் விகிதம் 0.5 விழுக்காடு என்றும் பார்க்வே புற்றுநோய் நிலைய இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிகுறிகள்
மெலனோமா புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகள் என்று மருத்துவர்கள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றனர்.
* புதியதாக மச்சம் தோன்றுதல் அல்லது பழைய மச்சத்தின் வடிவம், அளவு, நிறம் மாறுதல்
* ஒழுங்கற்ற விளிம்புகளைக் கொண்ட புள்ளிகள் தோன்றுதல்
* ஒரே மச்சத்தில் பல வண்ணங்கள் (பழுப்பு, கறுப்பு, சிவப்பு அல்லது வெள்ளை) இருத்தல்
* மச்சம் உள்ள இடத்தில் அரிப்பு, வலி அல்லது இரத்தம் வடிதல்
*கைகால் விரல் நகங்களுக்கு அடியில் அல்லது உள்ளங்கை, பாதங்களில் விசித்திரமான புள்ளிகள் தோன்றுதல்
இருப்பினும், சாதாரண மச்சங்களையும் தோல் பிரச்சினைகளையும் மெலனோமா என்று தவறாகப் புரிந்துகொண்டு அஞ்சத் தேவையில்லை. கவலை தரும் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை நாடுவது நல்லது.
ஏபிசிடிஇ விதியும் பரிசோதனையும்
மச்சத்தின் சீரற்ற வடிவம் விளிம்புகள் தெளிவற்று இருத்தல், நிற மாற்றம், விட்டம் அல்லது அளவு அதிகரித்தல், மச்சத்தின் வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு தொடக்கநிலையிலேயே மெலனோமா புற்றுநோயைக் கண்டறியலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டால் நோயாளிகள் முழுமையாகக் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அவர்கள் சுட்டினர்.
தோலின் நிறம் எதுவாக இருந்தாலும் அந்தப் புற்றுநோய் ஏற்படக்கூடும் என்று அமெரிக்கப் புற்றுநோய்ச் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் சாந்தி சிவேந்திரன் கூறினார்.
சிகிச்சை
புற்றுநோய் உயிரணுக்களையும் அவற்றைச் சுற்றியுள்ள நல்ல தோலின் ஒரு பகுதியையும் அறுவை சிகிச்சைமூலம் அகற்றுதல், கதிரியக்க சிகிச்சைமூலம் புற்றுநோய் உயிரணுக்களை அழித்தல், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தூண்டி புற்றுநோய் உயிரணுக்களை எதிர்த்துப் போராடச் செய்தல், அவற்றில் குறிப்பிட்ட மரபணு மாற்றங்களை மட்டும் குறிவைத்து அழிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை மெலனோமாவுக்கான சிகிச்சைகளாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அபாயத்தைக் குறைக்கும் எளிய வழிகள்
சூரிய ஒளியில் இருக்கும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களின் தாக்கம் மெலனோமா ஏற்படுவதற்கான முக்கியக் காரணியாகக் கூறப்படுகிறது. எனவே, புற ஊதாக் கதிர்கள் உடலில் படாமல் காத்துக்கொள்வது மெலனோமா புற்றுநோய் அபாயத்திலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
பொதுவாகக் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளி கடுமையாக இருக்கும் வேளையில் கண்களையும் உடலையும் பாதுகாக்கும் கண்ணாடிகளையும் ஆடைகளையும் அணிவது நல்லது.
வெளியில் செல்லும்போது தகுந்த வெயிற்காப்புப்பூச்சு (Sunscreen) பயன்படுத்துதல் (குறைந்தபட்சம் எஸ்பிஎஃப்30), தொப்பி, புற ஊதா கதிர்களைத் தடுக்கும் ஆடைகளை அணிதல் போன்றவற்றின் மூலம் மெலனோமா பாதிப்பு அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.
மேலும், செயற்கை முறையில் தோல் நிறத்தைக் கருமையாக்கும் (Tanning beds) கருவிகளைத் தவிர்க்கும்படியும் குடும்பத்தில் யாருக்கேனும் தோல் புற்றுநோய் இருந்திருந்தால் அத்தகையோர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
