இளம் புற்றுநோயாளிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க 100க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை (மே 24) முடியிறக்கினர்.
சிறார் புற்றுநோய் அறநிறுவனத்தின் ஏற்பாட்டில் நிகழும் ‘ஹேர் ஃபார் ஹோப்’ இயக்கத்தின் ஓர் அங்கமாக ஒன் பொங்கோல் வளாகத்தில் சிறிய அளவில் நடத்தப்பட்ட முடியிறக்கும் நிகழ்ச்சியில் குடியிருப்பாளர்கள், சமூகத் தலைவர்கள், தொண்டூழியர்கள் எனப் பலரும் இளம் புற்றுநோயாளிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
கடந்த ஈராண்டுகள் ஒன் பொங்கோல் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிவழி, 189 பேர் முடியிறக்கியிருப்பதாகவும் 123,000 வெள்ளி உதவி நிதி திரட்டப்பட்டிருப்பதாகவும் சிறார் புற்றுநோய் அறநிறுவனம் தெரிவித்தது.
இவ்வாண்டின் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 115 பேர் முடியிறக்கியிருப்பதாகவும் 38,000 வெள்ளி உதவி நிதியைத் திரட்டியிருப்பதாகவும் அறநிறுவனம் கூறியது.
நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் கலந்துகொண்டார். அவருடன் கல்விக்கான மூத்த துணை அமைச்சரும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சருமான ஜனில் புதுச்சேரியும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
“பல குடும்பங்கள் ஒன்றாக இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்தது மனத்திற்கு நிறைவளிக்கிறது,” என்று கூறினார் திரு கான்.
இத்தகைய முயற்சிகள் சமூகத்தினர் இடையே பரிவையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதாக அவர் கூறினார்.
“இளம் வயதில் புற்றுநோயால் அவதியுறுவது அவ்விளையர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனிமை உணர்வை ஏற்படுத்தும். அந்தக் கடினமான பயணத்தில் அவர்களுக்குத் துணை நிற்கப் பலரும் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்,” என்று கூறினார் சிறார் புற்றுநோய் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோ ஷுகாய்.
தொடர்புடைய செய்திகள்
இம்முயற்சியின்கீழ் மூன்றாம் முறையாக முடியிறக்கினர் கிருஷ்ணா, ரஜனி நாயர் தம்பதியினர்.
குடும்பத்தினர், நண்பர்கள் சிலரைப் புற்றுநோய்க்குப் பறிகொடுத்த அவர்கள், சிகிச்சை பெற்றுவரும் சிறார்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்க முடியிறக்கி வருகின்றனர்.
“முடியில்லாமல் இருப்பதும் அழகுதான் என்ற கருத்தைச் சிறார்களுக்கு உணர்த்தவும் சமூகத்தினரை இச்சிறார்களுக்கு உதவ ஊக்குவிக்கவும் நாங்கள் இம்முயற்சியில் ஈடுபடுகிறோம்,” என்று திருமதி ரஜனி சொன்னார்.
இவ்வாண்டின் ‘ஹேர் ஃபார் ஹோப்’ பிரதான நிகழ்ச்சி ஜூலை 25, 26ஆம் தேதிகளில் விவோ சிட்டி கடைத்தொகுதியில் நடைபெறும்.

