சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த வடகிழக்கு மாநில இந்தியரான நிஷத் ஃபர்ஹின் இஸ்லாம், 34, இங்கு தொண்டூழியம் செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு அமைப்புகளை நாடினார்.
மலாய்/முஸ்லிம் சமூக சுய உதவிக் குழுவான யாயாசான் மெண்டாக்கி, இவரின் கோரிக்கையை ஏற்று தொண்டூழியராக்கியது.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே குழு அவருக்கும் ஏறக்குறைய 150 தொண்டூழியர்களுக்கும் விருது வழங்கி கெளரவித்தது.
கிரேண்ட் ஹயாட் ஹோட்டலில் சனிக்கிழமை (நவம்பர் 23) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டூழியர்களும் வருகையாளர்களும் கேளிக்கை விளையாட்டுகளில் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடினர்.
‘தங்களுள் ஒருவராக அரவணைத்தனர்’
இந்தியாவின் அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் பிறந்து வளர்ந்த திருவாட்டி நிஷத், 2014ல் சிங்கப்பூருக்கு வந்து கட்டுமான ஒப்பந்தங்களுக்கான நிர்வாகியாகப் பணியாற்றுகிறார்.
மெண்டாக்கியின் ‘எம்பவர்ட்’ (#amPowered) எனப்படும் மாணவர் வழிகாட்டித் திட்டத்தில் சேர்ந்த இவர், சங்காட் சாங்கி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்று, நான்கு மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படுகிறார்.
மாணவர்களின் திறன்களைக் கண்டறிந்து, அவர்களது தன்னம்பிக்கையை வளர்ப்பதே இவரது நோக்கம்.
தாம் மலாய் இனத்தவராக இல்லாவிடிலும், சக தொண்டூழியர்கள் சிரத்தையுடன் தம்மை ஒருங்கிணைத்த விதத்தை திருவாட்டி நிஷத் நினைவுகூர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் இருக்கும்போது அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவார்கள். அவ்வப்போது அவர்கள் மலாயில் நகைச்சுவையாகப் பேசினாலும் எனக்காக அதனை விளக்கத்துடன் மொழிபெயர்த்துக் கூறுவார்கள்,” என்றார் இவர்.
திறனை வளர்த்த தொண்டு
மாணவர்களுடன் உறவாடிய அனுபவத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் திருவாட்டி நிஷத் கூறினார். ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டவர்கள் என்பதால், அவர்களுடன் உறவை வளர்க்க முற்படும் வழிகாட்டிகள் திறந்த மனதுடனும் பொறுமையுடனும் இருக்கவேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
“சில பிள்ளைகளைப் பலமுறை சந்தித்து அவர்களிடம் அன்பாகப் பேசிய பிறகு அவர்கள் நம்பிக்கையுடன் நம்மிடம் பேசுவார்கள். வேறு சிலருக்கு கட்டொழுங்கில் பிரச்சினை இருக்கும். அவற்றைப் பொறுத்துக்கொண்டு பரிவு காட்டுவது நம் கடமை. மனந்தளராமல் தொடர்ந்தால் நிலைமை சரியாகும்,” என்றார் திருவாட்டி நிஷத்.
தமது வழிகாட்டலால் பயனடைந்த மாணவர்களும் மற்ற மாணவர்களும் தம்மிடம் நன்றி நவிலும் தருணங்களை ஆனந்தக் கண்ணீருடன் தமிழ் முரசிடம் இவர் பகிர்ந்தார்.
மனநிறைவுடன் விருதைப் பெற்றுக்கொண்ட திருவாட்டி நிஷத், தொடர்ந்து தொண்டு செய்து மேலும் பலரை உயர்த்த எண்ணம் கொண்டுள்ளார்.
“சிங்கப்பூரிலுள்ள பல்வேறு சமூகத்தினர், சொந்த சமூகத்தினரையும் பிற சமூகத்தினரையும் உயர்த்துகின்றனர். இதனால் நமக்குள் வலுவான பிணைப்புகள் உருவாகி சமுதாயம் முழுமை அடைகிறது,” என்று அவர் கூறினார்.