‘சிஃபார்பி’ (C4P) என்ற மனநல சிகிச்சை நிலையத்தின் மூத்த மனநல ஆலோசகராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் திரு கோபால் மஹே, 44.
குற்றவாளிகளுக்கான ‘பேக்ட்’ எனும் மறுவாழ்வுத் திட்டத்தை வழிநடத்துவதில் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். நீதிமன்றத் தீர்ப்புக்கு முந்திய தற்காலிக உதவித் திட்டமாகத் தொடங்கப்பட்ட இது, தற்போது குற்றவாளிகளின் சிறைவாசத்தின்போதும் அதன்பிறகும் அவர்களோடு பயணம் செய்து, அவர்கள் மீண்டும் சமுதாயத்தோடு ஒருங்கிணைந்து வாழ உதவுகிறது.
சொந்த வாழ்க்கைப் போராட்டமும் புதிய தொடக்கமும்
2013ஆம் ஆண்டு மனநல ஆலோசனையில் முதுகலைப் பட்டம் பெற்று, ‘சிஃபார்பி’ நிலையத்தில் ஆலோசகராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, போதைப்பொருள் புழங்கியதற்காகத் திரு கோபால் கைது செய்யப்பட்டார். 2016 முதல் 2022 வரை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறைத்தண்டனை அனுபவித்தார்.
“சிறையிலிருந்து வெளிவந்தவுடன் என் அடையாளத்தையே இழந்ததுபோல் இருந்தது. யாரிடமும் பழகாமல் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
அதிலிருந்து மீண்ட திரு கோபால், 2023ல் சிங்கப்பூர் ஆலோசனைச் சங்கத்தில் பதிவுசெய்து, ஆலோசகராக மாறினார். தனியாக அனுபவித்த துயரங்களை மற்றக் குற்றவாளிகள் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக, மீண்டும் ‘சிஃபார்பி’ நிலையத்திற்குத் திரும்பிய அவர், ‘பேக்ட்’ திட்டத்தைத் தொடங்க உதவினார்.
தற்போது இவர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலும் சிங்கப்பூர் போதைப்பொருள் ஒழிப்புச் சங்கத்திலும் தொண்டூழியராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார்.
நீதிமன்றக் கூட்டுப்பணியும் எதிர்காலமும்
ஆரம்பக்கட்டத் தலையீட்டுத் திட்டங்களுக்காகச் சிங்கப்பூர் அரசு நீதிமன்றங்கள், ‘சிஃபார்பி’ உட்பட 19 சமூக அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்துள்ளன. 2026 ஜனவரியிலிருந்து நீதிமன்றங்கள், சட்ட நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள், தன்விருப்பத்தின் பேரில் 80க்கும் மேற்பட்டோர் இந்த நிலையத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை முறையும் சவால்களும்
திரு கோபால் கையாளும் வழக்குகளில் ஏறக்குறைய 75 விழுக்காட்டினர் பாலியல் குற்றவாளிகள் ஆவர். அவர்களின் வயது 12 முதல் 70 வரை.
“பாதிக்கப்பட்டவர்களின் வேதனைக் கதைகளைக் கேட்கும்போது, அவர்களின் வலியை நாங்கள் முழுமையாக உணர்கிறோம். அதே நேரத்தில், குற்றவாளிகளைச் சீர்திருத்துவதன் மூலமே பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிப்பு அளிக்கிறோம்,” என்றார் திரு கோபால்.
குற்றவாளிகள் தங்களின் தவறுகளுக்குப் பொறுப்பேற்க ‘சிஃபார்பி’ உதவுகிறது. இதன்மூலம் அவர்களால் தங்களை மாற்றிக்கொண்டு, சமுதாயத்திற்குப் பயனுள்ள குடிமக்களாக மாற முடிகிறது.
விரிவடையும் சிறைத்துறை ஆதரவு
கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிங்கப்பூர்ச் சிறைத்துறையுடன் ‘சிஃபார்பி’ கைகோத்துள்ளது. அதன்மூலம் குற்றவாளிகள் சிறையில் இருக்கும்போதே அவர்களுக்கான மனநல ஆலோசனைகள் தடையின்றித் தொடர்கின்றன.
“அவர்களின் உடல் சிறையில் இருந்தாலும், மனம் சுதந்திரமாக இருக்கிறது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கிறேன்,” என்றார் திரு கோபால்.
‘சிஃபார்பி’ ஆலோசகர்கள், குற்றவாளிகளுடன் நீதிமன்றம், சிறைச்சாலை வரை செல்வதோடு, அவர்கள் விடுதலையாகும் நாளில் சிறை வாசல்வரை சென்று மீண்டும் சமுதாயத்திற்கு வரவேற்கவும் செய்கிறார்கள். தங்களை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
“ஆலோசகர்கள் அவர்களுடன் வளர்த்துக்கொள்ளும் நட்புறவே அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சையாக மாறுகிறது,” என்கிறார் திரு கோபால்.
2024ஆம் ஆண்டிலிருந்து ‘சிஃபார்பி’ நிலையம் 240க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குச் சேவை வழங்கியுள்ளது

