துக்காங் தங்குவிடுதியில் செடி வளர்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

மனநலனை மேம்படுத்தும் புது முயற்சி

துக்காங் தங்குவிடுதியில் செடி வளர்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

படம்: சாவ்பாவ்

11 Oct 2026 - 11:50 am

2 mins read

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் தாவரங்களை வளர்க்க உதவும் புதிய திட்டம் ஒன்று கைகொடுக்கிறது.

உலக மனநல தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11), துக்காங் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் சமூகத் தோட்டம் ஒன்று தொடங்கிவைக்கப்பட்டது.

தோட்டத்தை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.

பசுமையான தங்குமிடச் சூழல்கள் எவ்வாறு சமூகப் பிணைப்பை வலுப்படுத்தி, ஊழியர்களின் நல்வாழ்வை ஆதரிக்க முடியும் என்பதை ஆய்வு செய்ய அமைச்சு, தேசியப் பூங்காக் கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் என்று திரு தினேஷ் தெரிவித்தார்.

கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தோட்டத்தை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தோட்டத்தை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி உரையாற்றினார். - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

“இந்தக் கண்டுபிடிப்புகள், ஊழியர்களுக்கு உகந்த வாழும் சூழல்களையும் பொழுதுபோக்கு இடங்களையும் வடிவமைக்க நமக்கு வழிகாட்டும்,” என்றார் அவர்.

தங்குமிடத்தில் உண்ணக்கூடிய தாவரங்களை வளர்ப்பதில் ஊழியர்கள் காட்டிய ஆர்வத்தைத் தொடர்ந்து இந்தச் சமூகத் தோட்டம் உருவானது.

அனந்த் குமார் நவீன் குமார், 39.
அனந்த் குமார் நவீன் குமார், 39. - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

அவர்களில் ஒருவரான 39 வயது அனந்த் குமார் நவீன் குமார், கீரை, புடலங்காய் ஆகியவற்றை வளர்த்து வருகிறார்.

வீட்டில் அவருடைய பாட்டி சமைத்த உணவை இந்த அனுபவம் அதிகம் நினைவூட்டுவதாகத் ‘தமிழ் முரசு’ நாளிதழிடம் அவர் கூறினார்.

“தோட்டத்தில் இருக்கும்போது மனத்துக்குச் சற்று அமைதியாகவும் இருக்கும்,” என்றார் அவர்.

ஓய்வு நாள்களில் மூன்று மணி நேரம் வரை அவர் தனது செடிகளைப் பராமரித்து வருகிறார்.

“என் செடிகளைப் பிள்ளைகளிடம் காட்டுவதற்காக வீட்டுக்குத் தொலைபேசியில் அழைப்பதும் உண்டு,” என்றார் அவர்.

தந்தையரான ஊழியர்கள் சிலருக்குப் பயிலரங்குகள் வழி பெற்றோருக்கான ஆதரவும் வழங்கப்படுகிறது. ‘அப்பா வாழ்நாள் உறவு’ அமைப்பின்கீழ் இந்தப் பயிலரங்குகள் நடைபெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொண்டாட்டங்களில் கிட்டத்தட்ட 15 அரசு சாரா அமைப்புகள், இளையர் குழுக்கள், இதர சமூகப் பங்குதாரர்கள் ஆகிய தரப்புகள் ஊழியர்களுக்கான மனநலம் சார்ந்த தகவல்கள், சேவைகள், நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தன.

குறிப்புச் சொற்கள்
ஊழியர்கள்மனிதவள அமைச்சுபசுமைசமூகம்