சென்னை புதுக்கல்லூரியின் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறையின் சார்பில், நபிகள் நாயகத்தின் வாழ்வியலை விளக்கும் ‘மீலாதுன் நபி’ சிறப்பு ஆவணப்படத் திரையிடலும், அதைத் தொடர்ந்த கலந்துரையாடல் நிகழ்வும் அண்மையில் நடைபெற்றது. சிங்கப்பூர் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான மில்லத் அகமது அந்நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவரது பங்களிப்பையும் சேவையையும் பாராட்டும் வகையில், புதுக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ம. அஸ்ரார் ஷெரிப், இயக்குநர் மில்லத் அகமதுவுக்கு ‘வள அறிஞர்’ சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரையிடலின் முடிவில், பேராசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு ஆக்கபூர்வமான கேள்விகளை எழுப்பினர்.
இலக்கியமும் கலையும் சங்கமித்த அந்நிகழ்வில், பாடகர்கள் ஜென்டில்மேன் சம்சுதீன், யூடியூப் புகழ் ரஹீமா பேகம், காயல் இளவரசு, பஹ்ரைன் சமூகச் சேவகர் பாடாலிங்கம், நல்லறம் பதிப்பகத்தின் ராஜா முஹம்மது, எழுத்தாளர் கொள்ளு நதீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். அக்கலை விழாவைத் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.


