பள்ளிவாசலின் பிரம்மாண்ட சமூக நற்பணிகள்

பள்ளிவாசலின் பிரம்மாண்ட சமூக நற்பணிகள்

படம்: பென்கூலன் பள்ளிவாசல்

18 Oct 2026 - 6:31 am

2 mins read

தனது 200 ஆண்டுகால நிறைவை முன்னிட்டு பென்கூலன் பள்ளிவாசல் பன்னோக்குச் சமூக முன்முயற்சிகளைப் பிரம்மாண்டமாக முன்னெடுத்து வருகிறது.

200 ஆண்டுகாலச் சேவையை நினைவுகூரும் வகையில், பள்ளிவாசலின் மதரசா மாணவர்கள் இந்தோனீசியாவின் லோம்போக் பகுதிக்குச் சிறப்புப் பயணம் மேற்கொண்டு அங்கு 200 மரக்கன்றுகளை நட்டனர். உள்நாட்டு விவசாயத்திற்கு உதவும் வகையில், ஆவகேடோ, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற மரக்கன்றுகளை நட்டனர்.

மற்றுமொரு வரலாற்றுச் சாதனையாக ஆகஸ்ட் 16ஆம் தேதி பென்கூலன் பள்ளிவாசல் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது. ஒரே நேரத்தில் 414 பேர் ஒன்றுகூடி இறைவேதமான திருக்குர்ஆனின் 41 அத்தியாயங்களை வெறும் இரண்டரை மணி நேரத்தில் முழுமையாக ஓதி முடித்து மாபெரும் தேசிய சாதனையைப் படைத்தனர்.

சிங்கப்பூரின் பன்முகப் பண்பாட்டுச் சூழலில் சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதில் முக்கியத் தூணாகச் செயல்படும் பென்கூலன் பள்ளிவாசல், ‘கம்போங் கிளாம் ஹார்மனி சர்க்கிள்’ அமைப்புடன் இணைந்து வெளிநாட்டுப் பயணிகள் கல்விப் பயணங்களை மேற்கொள்ள வழிவகுத்து வருகிறது.

வாட்டர்லூ தெருவில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், அருகில் உள்ள தேவாலயம், சீன ஆலயம், ஆகிய மற்ற சமய வழிபாட்டுத் தலங்களும் அவற்றில் அடங்கும்.

பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் சிங்கப்பூரில் நிலவும் இணையற்ற சமய நல்லிணக்கத்தைக் கண்டு வியப்பில் ஆழ்வது வழக்கம்.
பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் சிங்கப்பூரில் நிலவும் இணையற்ற சமய நல்லிணக்கத்தைக் கண்டு வியப்பில் ஆழ்வது வழக்கம். - படம்: பென்கூலன் பள்ளிவாசல்

அத்துடன், புனித ரமலான் மாதத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி விநியோகம் சீராக நடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஏறக்குறைய 3,000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.

புனித ரமலான் மாதத்தில் நோன்பு துறக்கும் இறையன்பர்கள்.
புனித ரமலான் மாதத்தில் நோன்பு துறக்கும் இறையன்பர்கள். - படம்: பென்கூலன் பள்ளிவாசல்

12 வகையான தானியங்களைக் கொண்டு பள்ளிவாசலிலேயே சமைக்கப்படும் நோன்புக் கஞ்சி, இன, சமய வேறுபாடின்றி வருகை தரும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உள்ளன்போடு விநியோகிக்கப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் உடனுக்குடன் நிறைவுசெய்யப்பட்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து பள்ளிவாசல் முன்னெடுக்கும் என்று நிர்வாகக் குழு உறுதிகூறியது.

குறிப்புச் சொற்கள்