சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் ‘சேஜ் சலூன்’ (Sage Salon) என்ற அழகு நிலையத்தை நடத்தி வருகிறார் ராதா வேலு, 41.
அதேசமயம், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் குழந்தைகளுக்கான பொருள்கள், சருமப் பராமரிப்புப் பொருள்களின் விநியோகிப்பாளராகவும் இவர் செயல்பட்டு வருகிறார்.
இரு பிள்ளைகளுக்குத் தாயான திருவாட்டி ராதா, வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சரிவிலிருந்து மீண்டு தம்மை மீண்டும் கட்டியெழுப்பிய ஒரு வெற்றிகரமான தொழில்முனைவர்.
எனினும், இந்த நிலையை எட்ட இவரின் வாழ்க்கைப் பயணம் எளிதாக இருக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சிக்கல்களால், இவர் கடின உழைப்புடன் உருவாக்கிய கல்வி நிறுவனம் திடீரென மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இவரது சேமிப்பு முழுவதும் கரைந்ததுடன் கிட்டத்தட்ட $180,000 கடன் சுமையும் ஏற்பட்டது.
இரண்டாவது மகன் பிறந்து இரண்டு மாதங்கள். அந்தத் தருணத்தில், தமது அடுக்குமாடி குடியிருப்பை விற்று, குடும்பத்தினருடன் குடியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அத்துடன், இவர் கடுமையான மனச்சோர்வுடன் போராடிக்கொண்டிருந்தார்.
“தொழில், வாழ்க்கை, தாய்மை என அனைத்திலும் நான் தோல்வியைச் சந்தித்ததாக உணர்ந்தேன்.
“என் குழந்தையைத் தூக்கக்கூட என்னால் முடியவில்லை. படுக்கையிலேயே கிடந்து மறைந்துவிட வேண்டும் போலிருந்தது,” என்று திருவாட்டி ராதா நினைவுகூர்ந்தார்.
வாழ்க்கையில் இதுபோன்ற இக்கட்டான கட்டத்தைத் திருவாட்டி ராதா இதற்கும் முன்பும் சந்தித்திருந்தார். உயர்நிலைப் பள்ளியில் பயின்ற காலத்தில், இவருக்கு தீவிரமான தண்டுவடப் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. அதற்குப் பெரிய அறுவை சிகிச்சை தேவைப்பட்டதுடன், நிரந்தர முடக்கம் ஏற்படும் அபாயம் இருந்ததாகவும் மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பயமும் அந்தச் சூழலின் நிச்சயமற்றத்தன்மையும் இவரது கல்விப் பயணத்தைப் பாதித்தன. கல்வி மீதான நாட்டம் குறைந்ததால், இவர் ‘ஓ’ நிலைத் தேர்வில் ஒருசில தேர்வுகளை மட்டும் எழுதினார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இவர் குணமடைந்த போதிலும், இறுதியில் தொழில்நுட்பக் கல்விக் கழகத்திலிருந்தும் விலக முடிவு செய்தார்.
“அந்தக் காலகட்டத்தில் என் வாழ்க்கை திசை தெரியாமல் சென்றது,” என்று இவர் கூறினார்.
உணவகப் பணியாளர், அலுவலக வேலை, வாடிக்கையாளர் சேவை எனத் தெளிவான இலக்கின்றி பல்வேறு பணிகளில் இவர் மாறிமாறி ஈடுபட்டார்.
ஆனால், குழந்தைகளுடன் பணியாற்றத் தொடங்கியபோது, எதிர்பாராத விதமாக இவரது வாழ்க்கையில் ஒரு நிலைத்தன்மை உருவானது. பாலர் பள்ளி ஆசிரியரின் உதவியாளராகப் பணியாற்றிய காலத்தில், தமக்குள் இருந்த கற்பிக்கும் திறனைத் திருவாட்டி ராதா உணர்ந்தார்.
முழுநேரப் பணியுடன் இணைந்து, பாலர் கல்வியில் பகுதிநேர பட்டயப் படிப்பில் சேர்ந்த இவர், அதன்மூலம் மெல்ல மெல்லத் தன்னம்பிக்கையைப் பெற்று வாழ்க்கையின் நோக்கத்தையும் அறியத் தொடங்கினார்.
30 வயதைத் தாண்டியதை அடுத்து, இவரது வாழ்க்கை மீண்டும் ஒரு சீரான பாதைக்குத் திரும்பியது. முதல் மகனைப் பெற்றெடுத்ததுடன், வெற்றிகரமான ஒரு கல்வி நிலையத்தையும் இவர் நிறுவினார்.
இரண்டாவது முறையாகக் கருவுற்றிருந்த காலத்தில், லிட்டில் இந்தியாவில் ஓர் அழகு நிலையத்தைத் தொடங்கலாம் என்ற யோசனையை இவரின் கணவர் முன்வைத்தார்.
தொடக்கத்தில் அந்த யோசனை திருவாட்டி ராதாவுக்குப் பேரச்சத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே கர்ப்பகாலம், வளர்ந்துகொண்டிருந்த கல்வி நிலைய தொழில் இரண்டையும் ஒருசேர சமாளித்து வந்த நிலையில், மேலும் ஒரு புதிய முயற்சி இவருக்கு சாத்தியமற்றதாகவே தோன்றியது.
இருப்பினும், நீண்ட தயக்கத்திற்குப் பிறகு இவர் அதற்குச் சம்மதித்தார். ஆனால், அந்த முடிவே தம் வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என அப்போது இவருக்குத் தெரியவில்லை.
இரண்டாவது மகன் பிறந்து ஒரு மாதத்திற்குள், திருவாட்டி ராதா கட்டியெழுப்பிய கல்வி நிறுவனம் கடும் சரிவைச் சந்தித்தது. புதிதாகத் தொடங்கப்பட்ட அந்த அழகு நிலையமே, அந்தக் கட்டத்தில் இவருக்குத் எஞ்சியிருந்த ஒரே சொத்தாக இருந்தது.
“அந்த நேரத்தில் நான் முழுமையாகத் தோற்றுவிட்டதாகவே உணர்ந்தேன்,” என்று திருவாட்டி ராதா கூறினார்.
குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் வழங்கிய வலுவான ஆதரவுடன், அந்த அழகு நிலையத்தைத் தக்கவைத்து வளர்ப்பதற்காக அவர் முழுமையாகத் தம்மை அர்ப்பணித்தார். சோர்வும் சந்தேகமும் சூழ்ந்திருந்த காலத்தில், தமது பச்சிளம் குழந்தை ரேய்ணவிடமிருந்து அவர் வலிமையைப் பெற்றார். ரேய்ணவ் என்ற பெயருக்கு ‘ஒளிக்கதிர்’ என்பது பொருள்.
மெல்ல மெல்ல தொழில் மேம்பட்டது. வாடிக்கையாளர்கள் அதிகரிக்கத் தொடங்கியதுடன், இவர் இழந்த தன்னம்பிக்கையும் திரும்பியது. காலப்போக்கில், ‘சேஜ் சலூன்’ ஒரு நிலையான வாழ்வாதாரமாக உருவெடுத்தது. அதனுடன் சேர்ந்து திருவாட்டி ராதாவும் மாற்றமடைந்தார்.
இளமைக் காலத்தில் தெளிவான இலக்கின்றி அலைந்தவர், இன்று குடும்பம் தம்மைச் சார்ந்திருக்கும் பொறுப்புள்ள மூத்த மகளாக உருவெடுத்துள்ளார். தம் பிள்ளைகளையே தமது உந்துசக்தியாகக் கருதும் இவர், இன்று அவர்களுக்காகவே ஒவ்வொரு முடிவையும் எடுக்கிறார்.
“வாழ்க்கை அளிக்கும் வாய்ப்புகளை ஏற்க துணிச்சல் வேண்டும். முடிவு எப்படியிருந்தாலும், அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
“எனது அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன். சோதனைகளைக் கடந்து செல்வதே வளர்ச்சி,” என்றார் திருவாட்டி ராதா.

