நாற்பது ஆண்டுகாலப் பணிக்குப் பிறகு ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் அழகாத்தாள் ராமதாஸ், 64, மூன்று பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய மனநிறைவில் மகளுடனும் பேத்தியுடனும் விடுமுறைக்காகத் தென்னமெரிக்கா சென்று அன்னையர் தினத்தைக் கொண்டாடுகிறார்.
வாழ்க்கையின் தொடக்கம் முதல் தமது பொற்காலம் வரையில் தாய்மை இவரது உணர்வுகளில் இழையோடி வருகிறது. அன்றைய ஜாலான் காயு கம்பத்தில் பிறந்த திருவாட்டி அழகாத்தாள், நான்கு தம்பிகளைக் கவனித்த அக்காவாக, அவர்களுக்குக் ‘குட்டித் தாயாக’ உருவெடுத்தார்.
“ஒருவிதத்தில் எனது தம்பிகளுக்கு இன்னொரு தாயாக இருந்து அவர்களையும் பார்த்துக்கொண்டேன். என் பெரியப்பா பிள்ளைகள், சுற்றியுள்ள கம்பத்துப் பிள்ளைகள் என எங்களுக்குள் குடும்ப உணர்வு படர்ந்திருந்தது,” என்று அவர் கூறினார்.
தாயார் சண்முகத்தாயிடமிருந்து பெற்ற ஈடு இணையற்ற அன்பை நினைத்துப் புன்னகைத்தார் திருவாட்டி அழகாத்தாள்.
“குடும்பத்தின் மூத்த பிள்ளையாக இருந்ததால் அன்றைய காலத்தில் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு என் தாயாருக்கு இருக்கவில்லை. எனினும், அவர், குடும்பத் தலைவியாகத் தமது வாழ்நாள் முழுவதையும் குடும்பத்திற்காகவே அர்ப்பணித்தார்,” என்று அவர் கூறினார்.
சத்துணவு ஊட்டி, பிள்ளைகளின் சீருடையை நேர்த்தியாகச் சலவை செய்து, அவர்களைச் தூய்மையாகப் பள்ளிக்கு அனுப்புவதில் தாயார் கவனம் செலுத்தியதாகத் திருவாட்டி அழகாத்தாள் கூறினார்.
பின்னர் திருமணமாகி, 1991ஆம் ஆண்டில் முதன்முறையாக ஒரு பெண் குழந்தைக்கும் அதனைத் தொடர்ந்து 1996, 2001ஆம் ஆண்டுகளில் இரு மகன்களுக்கும் திருவாட்டி அழகாத்தாள் தாயானார்.
பிள்ளைகளின் படிப்பில் கண்டிப்பு காட்டினாலும், அவர்கள் சுயமாகச் சிந்திக்கத் தேவையான சுதந்திரத்தை முழுமையாக அளித்ததாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“தன்னம்பிக்கையை ஊட்டி, சமூகத்துடன் இணக்கமாகப் பழகும் நல்லவர்களாக அவர்களை வளர்க்கப் பாடுபட்டேன்,” என்று அவர் கூறினார்.
உள்ளத்தில் உறுதி
நல்ல கணவரும் தந்தையும் இறைவன் கொடுத்த வரம் என எண்ணி மகிழ்வுடன் வாழ்ந்துவந்த திருவாட்டி அழகாத்தாளின் வாழ்வில், 2023ல் பெருந்துயரம் நேர்ந்தது. எதிர்பாராத விபத்து ஒன்றில் தமது கணவரை அவர் இழந்தார்.
உள்ளத்தைத் துளைத்தெடுக்கும் துயரிலும் நிலைகுலைந்துவிடாமல் குடும்பத்தை வழிநடத்தவேண்டிய பெரும் கட்டாயத்திற்கு இந்தத் தாயார் ஆளானார். பிள்ளைகள் தங்களது எதிர்காலத்திற்கான அடித்தளங்களை அமைக்க உதவுவதில் முழுமூச்சாய்ச் செயல்பட்டார்.
“என் கடைசி மகன் படித்துக்கொண்டிருந்தார்; இரண்டாவது மகன் விமானியாகும் கனவோடு அதற்கான படிப்பை மேற்கொண்டிருந்தார். பிள்ளைகளின் எதிர்காலம் தடுமாறிவிடக்கூடாது என்பதற்காக, என் சொந்த உணர்வுகளை ஆழமாகப் புதைத்துக்கொண்டு உறுதியான முடிவுகளை எடுத்தேன்,” என்றார் திருவாட்டி அழகாத்தாள்.
மூன்று பிள்ளைகளுமே ஆஸ்திரேலியாவில் இருந்ததால், கணவரின் மறைவுக்குப் பிறகு தனிமை அவரை மிகவும் வாட்டியது. இருப்பினும், பிள்ளைகளின் வற்புறுத்தலாலும் அளவுகடந்த அன்பாலும் கடந்த ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து அவர் ஓய்வுபெற்று பிள்ளைகளுடன் அங்குத் தங்கி வருகிறார்.
நன்றியுணர்வு நிரம்பிய பிள்ளைகள்
திருவாட்டி அழகாத்தாளின் மூத்த மகளான 35 வயது ருத்ரா ராமதாஸ், தமது ஒன்பது மாதக் குழந்தையுடன் முதல் அன்னையர் தினத்தைக் கொண்டாடவிருக்கிறார்.
சிறுவயதில் படிப்பிற்காக மிகவும் கண்டிப்பாக இருந்த தம் அம்மா, இப்போது தமக்கு ஒரு நல்ல நண்பராய் இருப்பதாக அவர் கூறுகிறார்.
“பண்புகளை எங்களுக்கு நிரம்பப் புகட்டியவர். எந்தவொரு துயரத்தாலும் எளிதில் உடைத்துவிட முடியாத மீள்திறன் கொண்ட என் தாயார், பெரும் கனவுகளைக் காணும்படி எங்களை உற்சாகப்படுத்துவார்,” என்று ருத்ரா பெருமையுடன் கூறினார்.
தாய்மை என்பது மிகவும் அற்புதமானது; புனிதமானது என்பதே திருவாட்டி அழகாத்தாளின் ஆழமான நம்பிக்கையாகும்.
“இன்னோர் உயிரை உருவாக்கும் தன்மையை இறைவன் தாய்க்கு அளித்துள்ளான்; அப்படி உருவாக்கப்பட்ட உயிரை ஒரு நல்ல மனிதராக வளர்த்தெடுப்பதற்கு தாயின் மாபெரும் தியாகம் தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

