தனிமையில் திடமான தாய்மை

தனிமையில் திடமான தாய்மை

3 mins read
3902546a-2940-434e-9c81-34e42147a6f2
மகள்கள் தனிதா நாகராஜன், தவித்ரா நாகராஜனுடன் திருவாட்டி பெமலா சந்தனசாமி (இடக்கோடி) - படம்: பெமலா சந்தனசாமி

தம்முடைய 28 வயதில் எதிர்பாராமல் ஒற்றைப் பெற்றோர் ஆன திருவாட்டி பெமலா சந்தனசாமி, ஒற்றையாளாக தம் மகள்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில், பதினெட்டு ஆண்டுகளுக்குப்பின், பிள்ளைகளைச் சிறந்த முறையில் வளர்த்து ஆளாக்கிய பெருமிதமும் நிம்மதியும் அவரது முகத்தில் தெரிகிறது. மூத்த மகளுக்கு 27 வயது; இளைய மகளுக்கு 23 வயது.

மருத்துவப் பள்ளியில் மதிப்பீட்டு அதிகாரியாகத் தற்போது பணியாற்றும் திருவாட்டி பெமலா, பிள்ளைகளைக் கரைசேர்த்ததோடு சொந்தக் கனவுகளையும் நனவாக்கி வருகிறார்.

பெற்றோர், தம்பி, பாட்டி, கொள்ளுப் பாட்டி என ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த திருவாட்டி பெமலா, வருங்காலத்தில் தம்முடையதும் நிறைய பிள்ளைகளைக் கொண்டுள்ள பெரிய குடும்பமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

புனித லூர்து அன்னை தேவாலயத்தின் தமிழ்ப் பிரார்த்தனைக் கூட்டத்தில் தமது குடும்பம் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டார் திருவாட்டி பெமலா.

பழம்பெரும் லூர்து அன்னை தேவாலயத்திற்கும் அங் மோ கியோவில் உள்ள ‘கிரைஸ்ட் த கிங்’ தேவாலயத்திற்கும் தாயார், பாட்டிமார்கள் ஆகியோருடன் சென்ற இனிய நினைவுகள் பெமலாவுக்கு இன்றும் நிம்மதியைத் தருகின்றன.

“என் குடும்பத்துப் பெண்கள்வழி நான் பெற்ற மொழியறிவும் பண்பாட்டு அறிவும் என்னைத் தற்போதைய நிலைக்கு உயர்த்தியுள்ளன. துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் மீள்திறனையும் வளர்க்க உதவியுள்ளன,” என்று அவர் கூறினார்.

சிறுவயதுப் பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டிய சூழலில் திடீரென ஏற்பட்ட மணமுறிவு, தாயாராகத் தாம் சந்தித்த பெருந்துன்பங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டார்.

கணவர் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில், சிறுவயதுப் பிள்ளைகளைத் தனியாக வளர்க்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. அவருடைய முன்னாள் கணவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “ஜீவனாம்சம் கொடுத்ததைத் தவிர அவர் வேறு எதுவும் செய்யவில்லை. அவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்,” என்று அவர் கூறினார்.

‘தாயாகவும் தந்தையாகவும் இருக்க வேண்டும்’ என்ற முழுப் பொறுப்பும் பெமலாவின் தோள்களில் விழுந்தது.

மகள்களைப் பார்த்துக்கொள்ள தம் பெற்றோர் மட்டுமன்றி, பாட்டி, உறவினர்கள் ஆகியோருடன் எதிர்பாராதவிதமாக முன்னாள் மாமனார், மாமியார் ஆகியோரும் மனமுவந்து முன்வந்ததாகக் கூறினார்.

இருந்தபோதும், அன்றாட வாழ்வில் சராசரியாக முக்கால் பங்கு நேரம் அவர் தனியாகவே பிள்ளைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. ஒற்றைத் தாயாகத் தம் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதற்காக வேலையிடத்தில் தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது.

பிள்ளைகளுடன் கூடுதலாக நேரம் செலவழிக்க குறைவான சம்பளத்தைத் தொடக்கத்தில் திருவாட்டி பெமலா ஏற்றுக்கொண்டார்.

வீட்டில் ஆண்கள் வழக்கமாகச் செய்யும் மின்விளக்கு மாற்றுதல், பழுதுபார்த்தல் போன்றவற்றைத் தாமே செய்யக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

மற்றவர்களை முழுமையாக நம்பியிருக்க முடியாது என்ற கசப்பான பாடத்தைத் தமது வாழ்க்கை உணர்த்தினாலும், ‘நமக்கு நாமே’ என்ற தன்னம்பிக்கையைத் தாய்மை தந்திருப்பதாகத் திருவாட்டி பெமலா குறிப்பிட்டார்.

பிள்ளைகளுக்காகத் தம்மை அர்ப்பணித்த இந்தத் தாயார், தம் விருப்பங்களையும் பின்தொடர ஆரம்பித்தார்.

“திருமணத்திற்கு முன்பு நான் கற்றுக்கொண்டிருந்த பரதநாட்டியக் கலையை மீண்டும் கற்கத் தொடங்கினேன். அத்துடன், சமூக மன்றம் ஒன்றின் இந்திய நற்பணிச் செயற்குழு ஒன்றில் துணைத் தலைவராக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

உதவி கேட்கத் தயங்க வேண்டாம் என்று இளைய தாய்மார்களுக்கும் ஒற்றைத் தாய்மார்களுக்கும் திருவாட்டி பெமலா ஆலோசனை கூறுகிறார்.

“தேவைப்படும்போது அரசாங்க உதவிகள், உதவித்தொகைகளைத் தயங்காமல் நாட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்