தம் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராகக் குரல் எழுப்பிய தாயாரின் தைரியம் சுஜாதா திவாரியின் ஒவ்வொரு சொல்லிலும் தெரிகிறது.
வெளிநாட்டில் இருக்கும் எந்தப் பெற்றோரும் கேள்விப்படக்கூடாத செய்தி, தம் அன்பு மகளை ஒருவர் சீரழித்துவிட்டார் என்பது. தூரத்தையும் தாண்டிய துயரம். அதைத் தாண்டி வந்துள்ளார் சுஜாதா.
நீதிக்காக ஆறு ஆண்டுகள் போராடினார் சுஜாதா. குற்றவாளிக்குத் தண்டனை கிடைத்தபின்பே அவர் மனத்தில் அச்சம்பவம் ஒரு நிறைவை நாடியது.
தாம் எவ்விதத் தவறும் செய்யாவிட்டாலும் சமுதாயத்துக்கு அஞ்சி, நடந்ததைத் தமக்குள்ளேயே வைத்துக்கொண்டு குமுறிக்கொண்டிருக்கும் பாதையை சுஜாதா தேர்ந்தெடுக்கவில்லை.
தம் வாழ்க்கைக் கதை மூலம், வாழ்வில் கஷ்டகாலங்களைக் கடக்கும் மனத் தைரியத்தை வாசிப்பவருக்குக் கொடுக்க விரும்புகிறார் சுஜாதா.
சுஜாதா இந்த நூலை அல்லும் பகலும் தொடர்ந்து ஏழு மாதங்கள் எழுதினார். தாம் இழந்த மன நிம்மதியோடு ஒப்பிடும்போது தூக்கத்தை இழப்பது அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
நூலை வெளியிடுவதிலும் கஷ்டங்களைச் சந்தித்தார். யாரும் நூலைப் படித்துப் பார்த்துத் திருத்தவோ வெளியிடவோ முன்வரவில்லை. இறுதியில் ‘அமேசான்’ தளத்தில் நூலை வெளியிடும் வாய்ப்பை அவர் பெற்றார்.
சிறுவயதிலேயே கஷ்டம் என்றால் என்ன என்பதை உணர்ந்தார் சுஜாதா. அந்தக் கஷ்டங்கள், தாம் தாயாராகச் சந்திக்கவுள்ள சோதனைக்குத் தயார்படுத்தும் படிக்கற்கள் என்பதை அவர் அப்போது உணரவில்லை.
தொடர்புடைய செய்திகள்
தந்தை இல்லாத துன்பம்
இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுஜாதா பத்து வயது சிறுமியாக இருந்தபோது தந்தை மாரடைப்பினால் இறந்தார். “என் தந்தை மூத்த ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர். அன்பை என்றும் நிலைநாட்டியவர். ஒரு நாள் கனமழை பெய்த இரவன்று சாக்கடையில் பிறந்த ஏழு நாய்க்குட்டிகளை அவர் காப்பாற்றி அவற்றுக்காக எங்கள் வீட்டின் பின்புறத்திலேயே இல்லம் அமைத்துக் கொடுத்தார்,” எனத் தம் தந்தையை நினைவுகூர்ந்தார் சுஜாதா.
தந்தையின் இறப்புக்குப் பின் தாயார் மட்டுமே சொந்தக் காலில் நின்று மூன்று மகள்களை வளர்த்து ஆளாக்கவேண்டியிருந்தது. அனுதாப அடிப்படையில் தாயாருக்கு அரசாங்க வேலையும் வீடும் கிடைத்தது. “நாளடைவில் புதிய நிர்வாகத்தினர் வந்ததும் எங்கள் வீட்டை அபகரிக்க முயற்சி செய்தனர். என் தாய் கணவர் இல்லாத பெண் என்பதால் சிலர் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதமகாகப் பயன்படுத்திக்கொள்ளவும் முயன்றனர்.
“என் தந்தை இருந்தபோது அடிக்கடி எங்களை வந்து சந்தித்த உற்றார் உறவினர் எங்கள் பக்கமே வரவில்லை,” என்றார் சுஜாதா.
அப்பொழுது தம் தாயார் முயற்சிகளைக் கைவிடாமல் போராடியதைக் கண்டது, இன்று சுஜாதா தைரியமான தாயாராக இருப்பதற்கு வித்திட்டது.
யாரையும் நம்பியிருக்கக் கூடாது
பட்டப்படிப்பு இல்லாமல் வேலையில் பட்ட கஷ்டங்களால் சுஜாதாவின் தாயார், தம் மூன்று மகள்களும் பட்டப்படிப்புப் படிக்க வேண்டும்; பணத்துக்காக யாரையும் நம்பியிருக்கக் கூடாது என நிபந்தனை விதித்தார். அதனால் சுஜாதா இளங்கலைப் பட்டம் பெற்றார்.
எம்மதத்தைப் பின்பற்றினாலும் அடிப்படையில் மனிதநேயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவரது தாயார் கூறினார்.
உயர்நிலைப் பள்ளிப் பருவத்திலிருந்தே தாம் காதலித்த அண்டை வீட்டுப் பையனைச் சாதி வேற்றுமைகளைத் தாண்டித் திருமணம் செய்துகொண்டார் சுஜாதா. “அவருடைய வீட்டில் சம்மதிக்கவில்லை. அதனால் நாங்கள் தரைமட்டத்திலிருந்து எங்கள் வாழ்வைத் தொடங்கினோம். பணம் இல்லை; அன்றாடம் ஒரு வேளை உணவை மட்டுமே சாப்பிட்டோம்,” என்றார் சுஜாதா.
கணவரின் பெற்றோரிடம் சுஜாதா மன்னிப்பு கேட்டுக் கடிதம் எழுதவே அவர்கள் அவரை மருமகளாக ஏற்றுக்கொண்டனர். அவர்களை மகிழ்விக்க, அவர்கள் விருப்பப்படி நடந்துகொண்டார். சேலைக் கட்டினார்; பொட்டு வைத்துக்கொண்டார்; குளித்தபின்பே சமையலறைக்குள் நுழைந்தார்; அசைவப் பிரியர் என்றாலும் வீட்டில் அசைவம் தவிர்த்தார்.
“எனினும், நான் என்ன செய்தாலும் அவர்களை முழுமையாக மகிழ்விக்க முடியாது என்பதை நாளடைவில் உணர்ந்தேன். அதனால், 13 ஆண்டுகள் இல்லத்தரசியாக இருந்தபின் நான் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன்.
‘‘நான் வாழ்ந்த நகரில் ஒரு பெண் வேலை தேடுவது வழக்கமானதல்ல. வேலை அனுபவமே இல்லாவிட்டாலும் கணினி விற்பனையில் வேலையைத் தேடிப் பிடித்தேன். பின்பு பத்திரிகைத் துறை, போலிப் பொருள்கள் கண்டுபிடித்தல் ஆகியவற்றிலும் பணியாற்றினேன்,” என்றார் சுஜாதா. அவர் மகனையும் இரு மகள்களையும் வளர்த்து ஆளாக்கினார்.
அவருடைய கணவருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்தபோது அவருடன் சேர்ந்து இங்கு வந்தார் சுஜாதா. பல தொண்டூழிய பணிகளிலும் ஈடுபட்டார். மகன் வெளிநாட்டில் படிக்கச் சென்றார். மகள்கள் இருவரும் மட்டும் இந்தியாவிலேயே தங்க முடிவெடுத்தனர்.
மகளுக்காகப் போராடிய தாய்
நடக்கக்கூடாதது நடந்த சமயத்தில், வேலை விஷயமாக சிங்கப்பூரிலிருந்து புதிய நாட்டுக்கு வந்திருந்தனர் சுஜாதாவும் அவரது கணவரும்.
மகனுக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியான செய்தியைத் தம் மகளுடன் ‘ஸ்கைப்’வழி பகிர்ந்தவுடன், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு இரு நண்பர்களுடன் செல்ல மகளை வழியனுப்பினார் சுஜாதா.
“என் வீட்டில் நான் கண்காணிப்புக் கருவிகளை வைத்துள்ளேன். அன்றாடம் தூங்குவதற்கு முன் என் மகள்கள் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்களா எனப் பார்த்த பின்பே தூங்குவேன். மகள் நம்பகமான நண்பர்களுடன் சென்றிருந்ததால் அந்த ஓர் இரவு மட்டும் நான் தூங்கிவிட்டேன்,” என்றார் சுஜாதா.
சில மணி நேரங்களில் தொலைபேசி மணி அடித்தது. இந்தியாவில் அதிகாலை 5.30 மணி. சுஜாதா அச்சத்துடன் தொலைபேசியை எடுத்தார். வீட்டின் கீழ் தம் மகள் அவல நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார் என்ற செய்தி. மகள் கற்பழிக்கப்பட்டார் என்பதை உணர்ந்ததும் தாயின் மனம் உடைந்துபோனது.
மகளை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தம் மற்ற இரு பிள்ளைகளிடம் கூறியதோடு காவல்துறையையும் தொடர்புகொண்டார் சுஜாதா. கட்டடத்தைப் பாதுகாக்கவேண்டிய பாதுகாவலரே குற்றம் புரிந்ததாகத் தெரியவந்தது.
நடந்தது தெரியாமலேயே பலரும் சுஜாதாவையும் மகளையும் பற்றி வதந்திகள் பரப்பினர்; இழிவாகப் பேசினர். “குற்றம் இழைக்கப்பட்டது எங்களுக்கு. எனினும் சமுதாயம் எங்களைக் களங்கமுற்றோராகவே பார்த்தது. குற்றம் நடப்பதற்குப் பாதிக்கப்பட்டவர் என்ன செய்தாரென ஆராய்பவர்கள் அதே கேள்விகளைக் குற்றவாளியிடம் கேட்பதில்லை,” என்றார் சுஜாதா.
அதிர்ச்சியில் சுஜாதாவின் கணவர் கிட்டத்தட்ட நடக்கமுடியாத அளவுக்குத் தளர்ந்துபோனார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே நியாயத்துக்காக அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் அலைந்தார். “நீதிமன்றத்துக்குச் செல்லும்போது மலக்குடல் அடக்கமின்மையால் ‘டயப்பர்’ அணிய வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு மன உளைச்சல்,” என்றார் சுஜாதா.
கற்பழித்தவர் முன்னிலையிலேயே கண்காணிப்புக் கருவியின் காணொளிகளைக் காண்பதற்கு அவருக்கு அதிகத் தைரியம் தேவைப்பட்டது.
அந்தக் கஷ்டகாலத்தில் தேவாலயம் அவருக்கு மனத் திண்மையைக் கொடுத்தது. “பார்சலோனாவிலிருந்த செயின்ட் ஜோசஃப்ஸ் தேவாலயத்துக்கு நான் என் கணவருடன் சென்றிருந்தேன். அப்போது மன நிம்மதி கிடைத்தது.
“அங்கிருந்த ஒரு காலணிக் கடையைப் பார்த்ததும் ‘‘இந்தக் கடையை நான் சிங்கப்பூரில் திறக்கலாமா?’’ என என்னை அறியாமல் கேட்டேன். ‘‘அப்படித்தான் சிங்கப்பூரில் காலணிக் கடையை என்னால் திறக்கமுடிந்தது,” என்றார் சுஜாதா.
அந்தக் கடையின்மூலம் கிடைத்த வருமானத்தில் விமானப் பயணங்களுக்கும் நீதிமன்றச் செலவுகளுக்கும் ஈடுகட்டினார் சுஜாதா.
மும்பைக் காவல்துறையினர் அவருக்குப் பேருதவியாக இருந்தனர்.
நியாயம் கிடைத்தாலும் நீடிக்கும் வடுக்கள்
சளைக்காமல் போராடிய சுஜாதாவுக்கும் மகளுக்கும் நியாயம் இறுதியில் கிடைத்தது. எதிர்பார்த்தவாறு மரண தண்டனையல்ல. பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை. நியாயம் கிடைத்தாலும் அதற்காகப் போராடியதிலேயே சோர்ந்துவிட்டனர்.
இப்போது சுஜாதாவின் மகள் சாதாரண வாழ்வுக்குத் திரும்பியுள்ளார். “அந்தச் சம்பவம் நினைவுகளிலிருந்து நீங்காது; ஆனால் அவரால் மனதளவில் வாழ்வில் தொடர முடிகிறது. மீண்டும் நடன வகுப்புகளுக்குச் சென்றுவருகிறார்,” என்றார் சுஜாதா.
“பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் யாரும் முழுமையாகக் குணமடைவதில்லை. எப்போதும் அச்சம், மனச்சோர்வு, நோய்களுடன் வாழ்கின்றனர். அவர்கள் குற்றவாளிகள் அல்ல; அவர்களைப் பரிவுடன் நடத்த வேண்டும்.
“நீதிமன்றத்துக்குச் செல்ல அதிக பணமும் மன உறுதியும் தேவை என்பதாலும் சமுதாயம் அவர்களை இழிவுபடுத்தும் என்ற பயத்தாலும் பலரும் தங்களுக்குக் குற்றம் இழைக்கப்படும் என்று எண்ணி அமைதியாக இருக்கின்றனர்.
“அதுபோல யாரும் தனியாகக் கஷ்டப்படக்கூடாது; தைரியமாக அநீதியை எதிர்க்க வேண்டும் என்பதால்தான் நான் என் கதையை இந்நூல்மூலம் பகிர்கிறேன்,” என்றார் சுஜாதா.
அவருடைய நூலை https://www.amazon.sg/Against-All-Odds-Retakes-Manuals/dp/B08JVZNL4X இணையத்தளத்தில் வாங்கலாம்.
தற்போது சுஜாதா பலருக்கும் ஆலோசகராகத் தொண்டு செய்கிறார். தொழில்முனைவராகவும் பணியாற்றுகிறார். ஆண்-பெண் சமத்துவத்துக்கும் குரல்கொடுக்கிறார். “நீ இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே! மாலை 6 மணிக்குள் வீட்டுக்குத் திரும்பவேண்டும் எனக் கட்டுப்பாடுகளைப் பெண்களுக்கு மட்டும் விதிக்கக்கூடாது,” என்றார் சுஜாதா.

