நாடாளுமன்ற உறுப்பினர் சம்பள உயர்வு: திறனாளர்களை ஈர்க்கும் புதிய சமநிலை

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பள உயர்வு: திறனாளர்களை ஈர்க்கும் புதிய சமநிலை

3 mins read
9ddff71e-a8a5-4e7e-ba30-cab7cc4b52d4
சம்பள உயர்வை எண்களாக மட்டும் பார்க்காமல், 15 ஆண்டு இடைவெளி, கட்டுப்படுத்தப்பட்ட உயர்வு, பிரதமரின் நன்கொடை முடிவு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதே சிங்கப்பூரின் தனித்துவமான அணுகுமுறை என்கிறார் கொள்கை ஆய்வுக்கழகத்தின் துணை இயக்குநர் ஆரோன் மணியம். - படம்: கொள்கை ஆய்வுக் கழகம்

சிங்கப்பூரில் அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் சம்பளத்தை மறுஆய்வு செய்ய 2025 டிசம்பரில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.

அதன் அடிப்படையில்  அரசியல் பதவி வகிப்போர்க்கு ஒருமுறை மட்டும் 9 விழுக்காடுவரை சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. அவ்வகையில், ‘எம்ஆர்4’ அமைச்சர் ஒருவரின் ஆண்டுச் சம்பளம் 1.1 மில்லியனிலிருந்து 1.2 மில்லியன் வெள்ளியாக உயரும். 

இந்தத் திருத்தப்பட்ட சம்பளக் கட்டமைப்பு  அக்டோபர் 15ஆம் தேதி நடப்பிற்கு வரவுள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சம்பளச் சீரமைப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குக் கொள்கை ஆய்வுக்கழகத்தின் துணை இயக்குநரான முனைவர் ஆரோன் மணியம் பதிலளித்தார்.

தனியார் துறையில் உயர் வருவாய் ஈட்டுபவர்கள், உயர் அரசுப் பணியாளர்களின் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் பொறுப்பு வகிப்போரின் சம்பளத்தை நிர்ணயிக்கும் முறை 2026ஆம் ஆண்டிற்கும் பொருத்தமானதுதான் என்று குறிப்பிட்டார் திரு ஆரோன்.

சம்பளம் சார்ந்த இந்த பன்முக அணுகுமுறை உள்ளூர், உலகளாவிய பொருளியல் சூழலுக்கு ஏற்ப நீக்குப்போக்கானது என்று கருதுவதாகக் குறிப்பிட்டார் திரு ஆரோன்.

புதிய சம்பளக் கட்டமைப்பின்படி, வருடாந்தரக் குறியீட்டுச் சம்பளமானது, நாட்டில் அதிக வருமானம் ஈட்டும் 1,000 சிங்கப்பூரர்களின் இடைநிலை வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. 

சம்பளக் கட்டமைப்பிலுள்ள அமைச்சர்நிலைகள் நான்கிலிருந்து மூன்றாகக் குறைக்கப்படுவதுடன், அமைச்சர்களின் சம்பளமானது அவர்களது அமைச்சர்நிலைக்கான வருடாந்தரக் குறியீட்டுச் சம்பளத்தில் 75 விழுக்காடு முதல் 125 விழுக்காடு வரை இருக்கும்.

எனினும், அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளத்தை உடனடியாக ஒரே தவணையில் அரசாங்கம் உயர்த்தாது. 

இந்நிலையில் இந்தச் சம்பளக் கட்டமைப்பு குறித்துப் பதிலளித்த திரு ஆரோன், பொருளியல் நிச்சயமற்ற சூழலில் திறமையான தலைவர்களை ஈர்ப்பதற்கும், மக்களிடையே நம்பிக்கையைப் பேணுவதற்கும் இடையே அரசாங்கம் எவ்வாறு சமநிலையைக் கையாள்கிறது என்பது குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்தார்.

சம்பளச் சீரமைப்பு குறித்துப் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங் தாம் பெறவுள்ள கூடுதல் சம்பள உயர்வு முழுவதையும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க முடிவுசெய்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதனை மறுபரிசீலனை செய்யவிருப்பதை ஒரு குறிப்பிடத்தக்க முன்மாதிரி நடவடிக்கை என்றும் பாராட்டினார் முனைவர் ஆரோன்.

“சம்பளக் கட்டமைப்பு நிலையான ஒன்றாக முடங்கிவிடாமல் உலகளாவிய, உள்நாட்டு மாற்றங்களுக்கு ஏற்ப நீக்குப்போக்குடன் திகழ வேண்டும். 

‘‘15 ஆண்டுகளுக்கு ஒருமுறை என நீண்ட இடைவெளி விடாமல், அடிக்கடி சீரான இடைவெளியில் ஆய்வுகளை மேற்கொள்வது பெரிய, திடீர் மாற்றங்களைத் தவிர்க்க உதவும்,” என்றும் திரு ஆரோன் தெரிவித்தார்.

சம்பளக் கணக்கீட்டு அடிப்படைகளை வெளிப்படையாக விவாதிப்பது பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் உறுதிசெய்யும் என்றும் திரு ஆரோன் சொன்னார்.

கடந்த 15 ஆண்டுகளில் பொதுச் சேவை, தனியார் துறைகளைக் காட்டிலும் அமைச்சர்களின் சம்பளம் பின்தங்கிய நிலைக்குச் சென்றுவிட்டதால் அமைச்சர்களின் சம்பளக் கட்டமைப்பைத் திருத்தியமைக்கும் முடிவைத் தாம் எடுத்ததாக தமது உரையின்போது பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வகையில், பொதுமக்களின் எதிர்ப்பைப் பெறாமல், சம்பளச் சீரமைப்பு குறித்த தகவலை அரசாங்கம் மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதற்கான  வழிமுறை குறித்து முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்த திரு ஆரோன், ‘‘அரசியல் பதவி வகிப்போரின் சம்பளச் சீரமைப்பு எப்போதுமே உணர்வுபூர்வமானது;  மேலும் நாடு சுதந்திரம் அடைந்தது முதலே இதற்கு எதிர்ப்புகள் இருந்திருக்கின்றன,’’ என்று நினைவுகூர்ந்தார்.

‘‘எனவே இந்தச் சம்பள உயர்வை எண்களாக மட்டும் பார்க்காமல், 15 ஆண்டுகளாகச் சம்பளம் உயர்த்தப்படவில்லை என்ற உண்மையை உணர்த்துதல்; 9 விழுக்காடு வரை மட்டுமே எனும் கட்டுப்படுத்தப்பட்ட, கட்டம்பிரித்த உயர்வு, கூடுதல் சம்பளத்தை 5 ஆண்டுகளுக்கு நன்கொடையாக வழங்கும் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் முடிவு உள்ளிட்ட காரணங்களையும் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதே சிங்கப்பூரின் தனித்துவமான ஒருங்கிணைந்த அணுகுமுறையாகும்,’’ என்றார் திரு ஆரோன்.

அரசியல் பதவி வகிப்போரின் சம்பளம் கடைசியாக 2012ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டில் அவர்களின் சம்பளத்தை உயர்த்த மறுஆய்வுக் குழு பரிந்துரைத்தபோதும் அப்போதைய நிலையில்லாப் பொருளியல் சூழலைக் கருத்தில்கொண்டு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என அரசாங்கம் முடிவுசெய்தது குறிப்பிடத்தக்கது. 

குறிப்புச் சொற்கள்
சம்பளம்நாடாளுமன்றம்சிங்கப்பூர்