தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஜா முகம்மதுக்கு முயிஸ் விருது

2 mins read
4a1a4043-2ff2-400a-8ed7-c907f89aff46
அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடமிருந்து விருதுபெற்ற ராஜா முகம்மது மைதீன். (வலமிருந்து இரண்டாவது) - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரில் உள்ள மலாய், முஸ்லிம் சமூகத்தினர் மாற்றத்தை ஏற்படுத்த பல வழிகள் இருப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (அக்டோபர் 4) இஸ்தானாவில் இடம்பெற்ற சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்ற (முயிஸ்) விருது விழாவில் டாக்டர் ஃபைஷால் உரையாற்றினார்.

சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து பங்களிக்க, வலுவான குடும்பங்களை உருவாக்கவும் குழந்தைகள், இளையர்களின் வளர்ச்சியில் முதலீடு செய்யவும் அவர் வலியுறுத்தினார்.

“பன்முக சமூகத்தில் சமய நிறுவனங்களை மேம்படுத்தவும் இஸ்லாமியக் கோட்பாடுகளை மதிப்பிடவும் பணிகள் மேலும் உறுதியாக வேண்டும்,” என்று டாக்டர் ஃபைஷால் குறிப்பிட்டார்.

நிறுவன மரபுகளை வளர்ப்பது, தேவையுள்ளவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கு ஆதரவளிப்பது, பிற சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஆகியவற்றின் மூலம் விருதுபெற்ற ஒவ்வொருவரும் சமூகத்திற்கு ஓர் ஊக்கமாகத் திகழ்வதாகவும் அவர் கூறினார்.

சமூக, சமய, நிறுவனங்கள், பள்ளிவாசல்கள், பங்காளி அமைப்புகள், சிங்கப்பூரின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் ஆகியவற்றுக்கான தனிநபர்களின் முக்கியப் பங்களிப்பின் உயரிய அங்கீகாரமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம், நான்கு பிரிவுகளில் விருதுகளை வழங்கினார்.

‘ஜாசா பக்தி’ பிரிவில் விருதுபெற்ற ஐவரில் திரு ராஜா முகம்மது மைதீனும் ஒருவர்.

மறைந்த தம் தந்தையிடமிருந்து ஊக்கம் பெற்று சமூக சேவையில் கால்பதிக்க தொடங்கிய திரு ராஜா முகம்மது, பல சமூகத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவரான அவர், எல்லா நேரமும் சேவையாற்றும் நோக்கில் இருமொழித் தகவல் தொடர்பு வசதியுடன் கூடிய ஒரு கருவியை வடிவமைத்தார்.

சமயக் கல்வி கண்காணிப்புக்கான தரவு அடிப்படையிலான பகுப்பாய்வு அமைப்புகளுக்கு முன்னோடியாக இருப்பதுடன், 2024 ஜூலையில் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் இந்திய, தமிழ், முஸ்லிம் தகவல்களின் மிகப்பெரிய இணையக் களஞ்சியத்தின் உருவாக்கத்தையும் அவர் மேற்பார்வையிட்டு வருகிறார்.

பல இடங்களில் மதராஸா கல்வி நிலையங்களைத் தொடங்கி மாணவர் முன்னேற்றத்திற்கான ஒரு சீரான அமைப்பை அவர் நடைமுறைப்படுத்தினார்.

தலைமைத்துவம் உருவாக்குதல், வழிகாட்டுதல், ஆகியவற்றை எடுத்துக்கொண்டால், ‘இம்புரோஃப்’ எனப்படும் இந்திய முஸ்லிம் நிபுணர்கள் சங்கம் ஒன்றை திரு ராஜா முகம்மது நிறுவினார்.

வெவ்வேறு பின்புலன்களிலிருந்து வரும் இளையர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக அவர் செயல்பட்டுள்ளார்.

கலாசாரப் பேணுதல், தகவல் தொகுப்புமீது அவர் காட்டிய ஈடுபாடு, சமூகப் பயன்பாட்டிற்கான நிரந்தர ஆதாரங்களையும் அளித்துள்ளது.

அதிகமானோரை ஈர்க்கும் நோக்கில் தமிழ்மொழி விழாவை ஆங்கிலத்தில் நடத்தியதன் மூலம் அவரது புத்தாக்க உத்தி வெளிக்கொணரப்பட்டது.

“நான் சரியானவற்றைச் செய்வதை இந்த விருது எனக்கு நிரூபித்துள்ளது. அங்கீகாரம் என்பதற்கு அப்பாற்பட்டு, பிறர் இதைப் பார்த்து சமூகத்திற்குச் சேவையாற்ற ஊக்கம்பெற வேண்டும் என்பது எனது விருப்பம்,” என்றார் திரு ராஜா முகம்மது.

குறிப்புச் சொற்கள்